சந்தியா நேர உளரல்கள்

1.ப்ரொட்யூசர்
2.இது இன்று முடியாத கதை
3.வெளியிலிருந்து பார்த்தவன்
4.காக்கி தொப்பி
என்று முட்டா சரக்கை முண்டி முண்டி குடித்தவன் தலையில் தோன்றும் எண்ணங்களை போல பல பெயர்கள் தேஜாவூ போல தோன்றி தோன்றி மறைகின்றன.
இவற்றிற்கு அர்த்தம் கேட்காதீர்கள்.சத்தியமாக எனக்கே தெரியாது.
ஆங்கிலத்தில் ப்ரோகாஸ்டினேஷன் என்ற சொல்லை தள்ளி போடும் சமாசாரத்துக்கு பயன்படுத்துவார்கள்.அதுதான் என் மண்டையில் உதிக்கும் கான்செப்ட்கள் பேப்பரில் குதிக்காமல் இருப்பதற்கு காரணம் என்று சொல்வேன்.ஒண்ணாம் நம்பர் சோம்பேறி வேலைக்கு ஒதவா மூதேவி என்று புதுமொழி ஒன்று உண்டு.அதனை உடைக்க ஒருபோதும் முயற்சி பண்ணாததே நான் பெற்ற சாபமான வரம்.
குழம்புதா??
எனக்கும்தான்.ஆனா இதெல்லாம் உங்ககிட்ட சொல்லியே ஆவனும்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
சரி நீங்க அவ்ளோ தெளிவுனு ஒரு டவுட்டு க்ளியர் பண்ணுங்க:

1.கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள்.ஆனாலும் அந்த நாள்ல எந்த புது பொருளும் வாங்க கூடாதுனு சொல்றாங்க.அது ஏன்? (நானும் கேட்டுப்பாத்தேன்.தெளிவான பதிலே இல்லை)
2.சரி நான் இதை எழுதும்போது நாளைக்கு கிருத்திகை.பொருள் வாங்கக்கூடாது.சரி, பெரியவங்க சொல்றாங்க.செய்யலை.அடுத்த நாள் அஷ்டமி, அதுக்கடுத்த நாள் நவமி, அதுக்கடுத்த நாள் சனி னு சொல்லி அப்பயும் எதுவும் செய்யக்கூடாதுனா எப்படி?
அப்ப வாரத்துல எதாச்சு செய்யனும்னா எப்பதான் செய்யறது?
3.இதெல்லாத்தையும் பின்பற்றவங்க அவங்க மட்டும் பின்பற்ற வேண்டியதுதானே? ஏன் எங்க மண்டைலயும் அந்த உதவா கான்செப்ட்ஸை திணிக்கறீங்க?
4.பஞ்சாங்கம், ஜாதகம், ராசி பலன், ஜோசியம், நாள், நட்சத்திரம், நல்லநேரம், ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, பத்து பொருத்தம்–இது எல்லாத்தையும் வச்சி தமிழன் சாதிச்சதுதான் என்ன?
இதில இருந்து தப்பிக்க நினைச்ச ஒரு சில ஆளுங்களையும் சந்தர்ப்ப சூழ்நிலை(coincidences) மறுபடியும் இந்த மீளாச் சுழலிலேயே இருக்க வச்சுடுதே..ஏன்?
நாம யோசிக்கறோம்.மத்த எல்லாருமே முட்டா பசங்கனு எடுத்துக்கலாமா??

எனக்குள்ள எவ்வளவு காண்டு இருந்தா ஒரு கேள்விக்கு நாலு கேள்வி கேட்டேன், பாத்துக்குங்க!

Advertisements

விண்டேஜ் வில்லன்

Warning:This blog and its author does not endorse drinking or smoking.Drinking is injurious to health.மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு.

இரு ஃபோன்கள் வைத்து பேசிக்கொண்டிருந்தார் X.ஒரு ஃபோனில் பார்க்காமலேயே செஸ் விளையாடி கொண்டிருந்தார்.இன்னொரு ஃபோனில் ஒரு அசைன்மெண்டிற்கு ஆளை மார்க் செய்து கொண்டிருந்தார்.

“பிஷப் டு C5” என்றார்.இன்னொன்றில் “அவந்திபுரம் போயிட்டியா?” என்றார்.
“சோல்ஜர் டு D6” என எதிர்குரல் கேட்டது.
இன்னொன்றில் “அண்ணே! போலீஸ் வண்டி பின்னாடி வருதுன்னே”
“பிஷப்  take சோல்ஜர் அட் D6” இது X.
தொடர்ந்து “பரவாயில்லை அவனை முடிச்சிடு” இது இன்னொரு ஃபோனிற்கு.
காயின் விழும் சத்தம்-மரப்போர்டில் வைத்த ஸ்பீக்கர் எதிரொலித்தது.
இன்னொரு ரிசீவரில் ரிவால்வர் சத்தம்.

l_6492_worlds-most-expensive-cocktail
“கிங் takes பிஷப் அட் D6” என்றான் போட்டியாளன்.
“அண்ணே! போலீஸ் நம்மள நோக்கி சுடறாய்கண்ணே!”
கூல் மாறாமல் “காஸ்டில் டு D7”
“டீம் B டேக் டவுன் இன்ஸ்பெக்டர் ஜனநாதன்.” என்றான்.
“கிங் டு C4”
“அண்ணே! ரிவர்ஸ் எடுக்குதுன்னே போலீஸ் வண்டி”
“சோல்ஜர் டு  C6”
“முருகா! ஜனநாதன் கார் டயரை சுடு” இவ்வாறு X.
“கேம் ஓவர் டா முட்டாள்.போன ஸ்டெப்லயே உன் கேம் முடிச்சி வச்சாச்சு.இன்னும் என்ன யோசிச்சுட்டு இருக்க?” கர்ஜித்து விட்டு இன்னொரு ரிசீவரை காதில் X வைக்க,
“அண்ணே! முருகன் சுட்டானே.பாலம் தாண்டி ஜனநாதன் வண்டி சக்கரையாத்துல விழுந்துடிச்சி னே!” என குரல் கேட்டது.
“செக்மேட்” என சிரித்தார் X.டபுள் செக்மேட்.
ஒரு அழகி ஆப்பிள் ஜூஸ் எடுத்து வந்தாள்.இன்னொரு அழகி வோட்கா தந்தாள்.
தன் கைகளுக்கிடையே சியர்ஸ் சொன்னார்.
“காக்டெயில்…காக்டெயில்” என அதிர சிரித்தார்.

Waitress-pouring-wine-into-glass-at-table

உலகம் காணாத உயிர்கள்.

மலையாம்பட்டியை தாண்டி பேயாம்பட்டி.எந்த மாவட்டம் என்பதை சிந்திக்க என் கற்பனை தவறிவிட்டது.கள்ளிப்பால் ஆறாய் ஓடுமளவிற்கு செடிகள் பெருத்து கிடந்தன.வயக்காடு.
கோவனம் கட்டிக்கொண்டு ஒரு கிழவனும், ரவிக்கை போடாத ஒரு கிழவியும் உடலில் காய்ந்த மண்ணை உளுத்திக்கொண்டே பேசுகிறார்கள்.
கிழவி: “எப்படியோ 5 பொண்ணுகளையும் கரை சேத்தாச்சு.பொம்பளை புள்ளையாயிருந்தாலும் படிக்க வைக்கிற உன் தாராள மனசு எல்லாருக்கும் வந்துடாது யா!”
கிழவன்: “அட போடி ரத்தினச் சிறுக்கி!என்னவோ நாமட்டுமா கரை சேத்தேன்? ஊர்ல எல்லா பயலுகளும் பண்ணதுதானே! ஆணாருந்தா என்ன? பொண்ணாருந்தா என்ன? அப்படியே என் ஆயி அப்பன் ஜாடை டி.நான் எதை கள்ளி ஊத்தி கொல்லுவேன்? ” (கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரும் காய்கின்றது)
அங்கிருந்து பல மைல் தூரம் தாண்டி ஒரு நகரம். மத்தியில் ஒரு மருத்துவமனை.அந்த கப்பிள் டாக்டரை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.அதிலும், ஸ்வேதா தயக்கமான அழுத்தத்துடன்,”டாக்டர்! அந்த ஸ்கேனும், ப்ரசீஜரும் பண்ண எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.பாத்துகிறோம்” என்றாள்.

image

நீர்க்குடத்தில் பஸ்பமாக இன்னொரு குழந்தை தயாராகி கொண்டிருந்தது.அது ஆணா பெண்ணா என்பதை அறிவதற்கு முன் அந்த கப்பிளிடம் ஒரு கேள்வி கேட்டார் டாக்டர்.
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” 😮

இவர்களை என்னதான் செய்யலாம்?

கோபம் கோபம்
அப்படியொரு கோபம்..
அதை சொல்லி மாளாது.
நரம்புகள் புடைத்து தெரித்து காட்டிட!
சூரியன் அஸ்தமிக்கும் வானத்தின்
செஞ்சிவப்பாய் கண்களிரண்டும் சிவந்திட!
கட்டுக்கடங்கா காட்டாற்று வெள்ளமாய்
வியர்வை துளிகள் புரண்டு தெளித்திட!
மிதக்கும் மேகங்களின் உயரமொப்ப!
புருவங்களிரண்டும் வில்லாய் வளைந்திட!
செவி மழுங்க, தலை சுற்றிட!
சிந்தைப்பொறி முழுவதும் சிதறலில்லாமல்
ஒரே இலக்கை நோக்கி நிறுவப்பட!
எதிரில் இலக்கை நீங்கள் எதிர்ப்பார்த்தால்
இப்போது ஏமாந்து போவீர்கள்!
அது எதிர்ப்படா எதிரி இலக்கு..
கண்ணுக்கே தெரியாமல் கற்றறிந்த இளைஞர்களை
நாள்தோறும் ஏளனம் செய்யுமிலக்கு!
வசதிபடைத்த வில்லன்மார்கள் அவ்
வசதியிலா இளைஞர்களின்
நல் முயற்சியினை கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கும்,
இழிவுபடுத்தும் படுபாதக அரசியல் இலக்கு;
வேலையில்லா திண்டாட்டத்தின் விபரீத பிள்ளை
அவ்விலக்கு-இச் சமூகத்தின் இழுக்கு..

பயிற்சி பத்திரிகையாளர்களின் கொண்டாட்ட இதழ்

இன்று கூரியர் மூலம் புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி இதழ்கள் மதியம் 12.15 அளவில் வீட்டை அடைந்தன.
இந்த வாரம் பயிற்சி பத்திரிகையாளர்களுக்கு மேக்ஸிமம் ஸ்பேஸ் அளித்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.எல்லா இதழ்களிலும் இந்த முக்கியத்துவம் நமக்கு கிட்டி விடவில்லை.பதினால்வரில் ஏழு பயிற்சி பத்திரிகையாளர்களின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.இது பிரஷ்ஷர்ஸை கொண்டாடும் மனநிலை கொண்ட ஒரு ஆசிரியர் குழுவால் மட்டுமே சாத்தியப்பட கூடிய ஒன்றாகும்.அந்த வகையில் இது நம் பாக்கியமே.
1.சொன்னதும் செய்ததும்–கள ஆய்வு(நிஷாந்தன், இந்துமதி, அஸ்வின்)
2.என்னை அறிந்தால்–விடாமுயற்சி(காகிதன்)
3.இந்த நாள் இனிய நாள்–பிரெய்லி காலண்டர் உருவாக்கம்(எகின் பாலா)
4.மாவட்ட செய்திகள்–கோவை, ஈரோடு(ஜீவபாரதி)
5.காரில் ஒரு காவல் அசிஸ்டெண்ட்–நேவ்டி தொழில்நுட்பம்(அசோக்ராஜ்)
6.பேடி பச்சாவோ பேடி பதாவோ–பெண் குழந்தைகளுக்கான பிரதமரின் சேமிப்பு திட்டம்(இந்துமதி)
என ஆறு பகுதிகளில் நம் பங்களிப்பு உள்ளது.
பின்னி பெடலெடுத்து விட்டீர்கள் நண்பர்களே.
தொடர்வோம்.
🙂

கட்டுடைந்த நதியாய் புரிதல்..

நம் தசை ரத்தம் நரம்புமண்டலம்
உறுப்புகள் அனைத்தையும் தாண்டி
நம் டிஎன்ஏவுக்குள் ஊடுருவி
ஒரு பேனா சுழன்று கொண்டிருக்கிறது
நம்மை உண்மை மனிதர்களாய்
உருவாக்கி உருமாற்றி கொண்டிருக்கிறது

நடுக்கடலில் சிப்பியில் முத்து;
சர்ப்பம் பலவருடம் காத்து கக்கும் மாணிக்கம்;
டைனோசார்கள் புதைந்து மக்கி உருவாகிய கச்சா எண்ணெய்;
உலகமே காத்துதான் அற்புதங்கள் படைக்கின்றது.
நீ மட்டும் ஏன் அவசரப்படுகிறாய் தோழா?
சார்ஜரின் LED ஒளியும்
ஜன்னலில் ஊடுருவ முயற்சிக்கும்
தை மாலை மெல்லிய கதிரொளியும்
இணைந்து சஞ்சரிக்கும் மாயப்பொழுதில்
நம் உலகியல் தாண்டிய ஒரு உன்னத உணர்வு..
அது நம்மை வாழவைக்கும் யோகா பேனாவே!
என்ற உணர்தல் நிமித்தம் பூத்த பூரிப்பு..

twitter and pen

கால் பக்க கதை–செகண்ட் அட்டெம்ப்ட்

கூகுளில் கண் வியர்க்க தேடினான்.கிடைக்கவில்லை.நூலகத்தின் கடைசி ரேக்கில் இரும்பு ஏணியின் உச்ச படியில் நின்று கொண்டு கடைசி புத்தகத்தை தூசி தட்டினான்.அதன் கடைசி பக்கம் கடைசி வரி வரை தேடினான்.கிடைக்கவில்லை.
சுடுகாட்டிற்கு சென்றான்.மண்வெட்டியை கையில் எடுத்து கொண்டான்.தனக்கென தானே வெட்டி வைத்திருந்த குழியில் இறங்கிக் கொண்டான்.மண்ணைப் போட்டு மூடினான்.நிசப்தமானான்.

பக்கத்து வீட்டு பதுமை வீட்டு பால்கனியில் நின்றுக் கொண்டு அவனையே நினைத்து வெட்கப்பட்டு சிரித்தாள்.

கடைசி முகநூல் காதலியின் அரட்டையும் துண்டிக்கப்பட்டு, தான் ப்ளாக் செய்யப்பட்ட நிலையில், எதிர்த்த வீட்டு மாமா, தனக்கு தானே மண்வெட்டி தேடினார்.இவர் ப்ரொபைலுக்கு புது ரிக்வஸ்ட் வந்தது.புது முகநூல் அரட்டை. மண்வெட்டியை மறந்தார்.கப்-போர்டில் விஸ்கி இருந்தது.மூழ்க ஆரம்பித்தார்.

அரைப்பக்க கதை-அட்டெம்ப்ட் 1

“யோவ்! அந்த ஆளை உள்ள அனுப்பு”

தேஜா கட்சி ஆபீஸூக்குள் நுழைந்தான்.

“திராவிடமா? தேசியமா? வலதுசாரியா? இடதுசாரியா? லஞ்சம் வாங்குவியா பதவி வந்தா? வாங்கமாட்டியா? வாங்கனா கட்சிக்கு மட்டும் 50% வரி கட்டனும்.அது மத்திய நிதிக்கு போய் சேந்திடும்.இங்க எல்லாருக்கும் இடம் இருக்கு”

“சார்? இது …… கட்சி ஆபீஸ்தானே? இல்ல இடம் மாறி வந்துட்டேனா?”

“எப்படி அரசியல் பண்றாங்கன்னு யோசிக்கறயா? அரசியல் பண்ணி மரத்து போச்சு தம்பி.இனிமேலாச்சு நிர்வாகம் பண்ணலாம்டு முடிவு.அடிச்சுகிறவங்க அடிச்சுகிங்க.கோஷ்டி ஆப்ஷனும் இருக்கு.ஆனா நீங்க பண்ற ஒவ்வொரு மறியலுக்கும்,எந்தவிதமான போராட்டத்துக்கும் நாடாளுமன்ற-சட்டசபை அமளிக்கும் சைஸூக்கு ஏற்ப தனித்தனி டேமேஜ் டெபாஸிட் கட்சி ஆபிஸ்ல கட்டிடுங்க.இனிமே ஆளுங்கட்சியும் நாமதான்.எதிர்க் கட்சியும் நாமதான்!”

தேஜா “அப்போ இது சர்வாதிகாரம் இல்லையா? நீங்க தப்பு பண்ணினா?” என்றான்.

“தம்பி சட்டத்திருத்தம்லான் பாக்க மாட்டீங்களா? ஒருதடவை மேல பதவி வகிக்க கூடாது.வாரிசு அரசியல் பண்ண கூடாது.நாளைக்கு வந்தீங்கனா நானே இங்க இருக்க மாட்டேன்.இப்பவே தெளிவா கேட்டுக்குங்க.”

தேஜா அலறியடித்து படுக்கையிலிருந்து எழுந்திருத்தான்.அவன் பெண்டாட்டியும் பிள்ளைகளும் கூடவே அலறினர்.லைட் போடப்பட்டது.

“என்ன ஆச்சுங்க?” என்று பீதியுடன் வினவினாள்.

கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தங்கச்சங்கிலியும், கைவிரல் மோதிரங்களும், பெண்டாட்டியின் நகைகளும், ஹேங்கரில் மாட்டியிருந்த கட்சி துண்டும் தென்பட தேஜா வியர்வையை வழித்து சிரித்தான்.

“ஒன்றுமில்லடி.கனவு.தூங்கு”

“வாழ்க பாரதம்” என்று பிராத்திர்த்து நிம்மதியாக உறங்கினான்.

அன்பு தாய்மார்களே, என்னை உயர்த்திய உள்ளங்களே, உடன்பிறவா சகோதரர்களே!!

கால் பக்க கதை-அட்டெம்ப்ட் 1

கால் பக்க கதை

அது ஒரு அலாதியான ஞாயிற்றுக்கிழமை.

“அப்பா!”
“என்னடா செல்லம்? ”
“ஏன்பா உன் தலைமுடி வெள்ளையா மாறுது?”
“அதுவா? அப்பா உன்னை எப்பப்போ லான் நினைக்கிறேனோ அப்பலான் ஒரு முடி வெள்ளை ஆயிடும்.”
மீதமுள்ள கறுப்பு முடிகளின் மேல் இனம் தெரியாத வெறுப்பு ஏற்பட்டது இதை கேட்ட குட்டி ஸ்வாதிகாவுக்கு.
மாலை நேரம்.ஹால்.மின்விசிறி ஸ்லோவில் சுற்றிக்கொண்டிருக்கிறது.ஸ்வாதிகா பெட்ரூமிலிருந்து எட்டிப்பார்த்தாள், சோஃபாவை.
“ஐ! அப்பா பேப்பரை மூஞ்சி மேலே வச்சிகிட்டு தூங்கறாரு!”
நெருங்கி வந்தாள்.ஒரு கையில் தான் செய்த வெள்ளை பெவிக்காலுடன் ஆயில்பெயிண்ட் கலவையும், இன்னொரு கையில் பெயிண்ட் பிரஷ்ஷும் வைத்திருந்தாள்.
“இனிமே எப்பயுமே என்னப்பத்தி தான் நினைப்ப! ஸ்வீட் டாடி” என்று காற்றிலேயே உம்மா கொடுத்தாள்.

நவீன மருத்துவம் நமக்கு எட்டியதா?

எதிர் வீட்டில் ஒரு பாட்டி.ரிட்டையர் ஆன ஆசிரியை.அந்த பாட்டியின் கணவர் தாத்தா இறந்து 6 வருடங்கள் ஆகிறது.இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.தன் அண்ணனின் வறுமை நிலையை உணர்ந்து அவரின் மகன்களை தன் சொந்த செலவில் படிக்கவைத்து, வளர்த்து ஆளாக்கினார்.இருப்பினும் இந்த குடும்பம் நிறைய கடன் வாங்கி அடைத்து வந்தனர்.லோயர் மிடில் கிளாஸ்.அண்ணனின் இரண்டாவது மகனை தன் மகனாகவே தத்தெடுத்து கொண்டார் பாட்டி.அவர் சரியான விளையாட்டு பிள்ளை.நண்பர்களுடன் ஊர் சுற்றி, சரக்கு அடித்து, கடன் வாங்கி ஊதாரியாக சுற்றிக்கொண்டிருந்தார்.அந்த கடன்களை தன் வீட்டின் ஒரு பகுதியை விற்று அடைத்தார் பாட்டி.தன் நகைகளை விற்றும், வங்கியிலிருக்கும் பென்ஷன் காசு எல்லாவற்றையும் செலவழித்து அந்த அண்ணனுக்கு ஜோராக திருமணம் நடத்தி வைத்தார்.
திருமணம் முடிந்தவுடன் அண்ணனின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.பொறுப்பான பையனாக மாறினார்.சென்னையில் ஒரு சின்ன வேலை தேடி வீட்டிற்கு செலவுகளுக்கும் பணமும் அனுப்பினார் -அது கணிசமான தொகை இல்லை என்றாலும் கூட. அந்த அண்ணனுக்கு இரு குழந்தைகள்.மூத்தவள் பெயர் சந்தியா- படு சுட்டி.என்னிடம் ரொம்ப செல்லம். இளையவன் பெயர் சரவணன்.இருவரும் குட்டி குழந்தைகள் இப்போது.அந்த அண்ணியும் பாட்டியிடம் பெரும் மதிப்பும் அன்பும் வைத்திருந்தார்.நல்லபடியாகவே நடத்தினார்.பாட்டியின் மாதாந்திர பென்ஷனும் அண்ணனின் சிறு சம்பளமும் ஓரளவு கைகொடுக்க குடும்பம் சமாளித்து வந்தது.அந்த அண்ணியும் தையல் பயின்றும், மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்தும் சிறிது பணம் ஈட்டினார்.அனைத்தும் பாட்டியின் மருந்து மாத்திரைகள், பிள்ளைகளின் ஸ்கூல், வளர்ப்பு செலவு என்றிருந்தது.இந்நிலையில்தான் பாட்டி படுத்த படுக்கையானார்.குடும்பத்தின் காமதேனுவே வயோதிகத்தால் நோய்வாய்பட்டால் குடும்பம் ஆடிப் போகும் இல்லையா? அப்படித்தான் ஆகிற்று.செய்நன்றி மறந்த பாட்டியின் அண்ணனின் மூத்த மகன் பாட்டியின் செலவுகளை தட்டி கழித்தார்.செலவு முழுவதும் இரண்டாவது மகன்-நம் அண்ணனின் தோள்களில் வந்து விழுந்துவிட்டது.ஆனாலும் அவர் தளரவில்லை.சொத்தை விற்றாவது பாட்டி உயிரை காப்பாற்றுவேன் என்று சபதம் எடுத்துள்ளார்.ஆனால் பெரிய சேமிப்போ, விற்பதற்கு சொத்துக்களோ இல்லாத நிலையில் அவர் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.பாட்டியின் இன்றைய ஒரு நாளைய மருத்துவ செலவு 2000.நர்ஸ் பராமரிப்பு இல்லாவிட்டால் bed sore ஏற்பட்டு பெரும் துன்பத்திற்கு உள்ளாகிறார்.இந்த குடும்பத்தை கண்டு ஊரே கவலை கொள்கிறது.ஒரு நாளைக்கு 2000 ரூபாய் செலவு செய்தால் தான் பாட்டியை உயிரோடு வைத்திருக்க முடியும்.எவ்வளவு நாளைக்கு இந்த சராசரி குடும்பம் இந்த செலவுகளை தாக்கு பிடிக்கும்.எவ்வளவு தான் கடன் வாங்குவார்கள் அவர்கள்? இன்றைய மருத்துவம் சாதாரண மக்களின் கைகளை தாண்டி சென்றுவிட்டதே! அப்போ பாட்டி போன்ற ஜீவன்கள் வாழவே முடியாதா? இதற்கு தீர்வு தான் என்ன? அமெரிக்க நாடுகளில் உள்ள ஒபாமா கேர் போன்ற மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் இந்திய அரசால் செயல்படுத்தப்பட முடியுமா? குறைந்த பட்ச காப்பீடாவாது கிடைத்தால் உதவியாக இருக்கும் இல்லையா? நடுத்தர வர்க்கத்தின் நிலையே இப்படி என்றால் ஏழைகளின் நிலைமை எப்படி இருக்கும்? பெரும்பாலான மக்களையாவது மரண படுக்கையின் போது காக்கும் திட்டங்கள் அதிகமாக அமலுக்கு வரவேண்டும்.இது குறித்து உழைப்போம்.