என் தாயிடமே நான் பிச்சையெடுப்பதா?

மேக்கேதாட்டூ-(ஆடுதாண்டு)&
ராசிமணல் மொத்தம் சேர்ந்து 45 டிஎம்சி தண்ணீரை தடுப்பணை கட்டி சேமிக்கும் திட்டம்.ஆனால் தமிழக டெல்டா விவசாயிகள் குழு சென்று பார்வையிட்டதில் மேக்கேதாட்டூவில் மட்டும் 50 டிஎம்சி தண்ணீரை தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள்(விகடன்).இது கர்நாடகம் நமக்கு செய்யும் பாதகம்.ஒரு நதி ஓரு மாநிலத்தின் எல்லைகளுக்குள் மட்டும் பாய்வதென்றால் அவர்கள் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளலாம்.ஆனால் தேசிய நதிகளில் ஒன்றான காவிரியில் மேலாண்மை வாரியம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டும், தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு 350 டிஎம்சி தண்ணீர் தட்டுப்பாடின்றி தமிழகத்தை வந்தடைய வேண்டும் என்று அரசிதழிலேயே குறித்த பின்பும் தான்தோன்றிதனமாக கருநாடகம் செயல்படுகின்றது.அங்குள்ள அணைகளுக்கு சென்றிருக்கிறீர்களா? நான் ஒரு முறை கிருஷ்ண ராஜ சாகர் அணையை பார்வையிட சென்றேன்.நீரினை வைத்து மேஜிகல் பவுண்டன் விளையாட்டு நிகழ்த்துமளவிற்கு அங்கு அபரிமிதமான தண்ணீர் வளம் உள்ள மாநிலம்.அவர்களுக்கு தண்ணீர் ஒரு பொருட்டே அல்ல.
இருப்பினும் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைகளை கண்துடைப்பு காரணங்களாக முன்வைத்துவிட்டு அவர்கள் ஆடும் கபட நாடகம் மிக மோசமானது.இன்றைய அளவில் விவசாயத்திற்கு போராடி வரும் நிலையில் இருக்கும் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் சுடுகாடாகி விடும் அவலம் நேரவிருக்கிறது.

cauvery_water_dispute
12 மாவட்டங்களின் காமதேனு காவேரி.
குடகு மலை சென்று தலைக்காவிரி பகுதியை பார்த்தேன். நம் காவிரித்தாய் அங்குதான் பிறக்கிறாள்.அங்கு அவளுக்கு ஒரு கோயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பெண் தெய்வமாக காவேரி அம்மன் இருக்கிறாள்.மேகங்கள் சூழ்ந்த அந்த மலை மேல் ஏறி அதன் அடியான காவிரி பிறக்கும் இடம் தெரியாமல் மழை பெய்தது.அவ்வளவு மழை.வருண பகவான் அங்கு வள்ளலாய் இருக்கின்றான்.இங்கோ கையை பிசைகின்றான்.
காவிரி அங்கு பிறப்பதால் மட்டுமே அவள் கருநாடகத்திற்கு மட்டும் உரியவளாவாளா? இல்லவே இல்லை.நம் வழியே பல மைல்கள் கடந்து தான் சமுத்திர ராஜனை அடைகிறாள்.நம் தமிழகத்தின் கருவூலம் என்றழைக்கப்படும் தஞ்சையின் நெல் தானியங்கள் பூத்து குலுங்கி தலைசாய்த்து வெட்கப்படுவதற்கு ஒவ்வொரு வருடமும் உதவி புரிபவள் காவிரியே.பொன்னியின் செல்வன் என்றுதான் நம் அருள்மொழி ராஜராஜசோழன் அழைக்கப்பட்டான்.நம் பண்டை வரலாற்றின் தலைமகனான ராஜராஜனையே நாம் காவிரியின் புதல்வனாகத்தான் புனைந்திருக்கிறோம்.அந்த அளவிற்கு காவிரி நம் உயிரோடு கலந்தவள்.
டெல்டா மாவட்டங்கள் பாலையாக வேண்டுமா?
இரு ஆற்று தீவான ஸ்ரீரங்கம் தன் தீவு அந்தஸ்தை இழக்க வேண்டுமா? கரிகால் பெருவளவன் கட்டிய
கல்லணையும் நம் மேட்டூரும் ஒரு சொட்டின்றி காய வேண்டுமா?
சித்தராமையா ஏற்பாடு செய்துவிட்டார்.இனி நமக்கும் நீருக்கு பிச்சையெடுத்து பிச்சையெடுத்து தம்பிராமையா போல அதுவே பழகிடும்.
சொந்த தாயிடம் பிச்சை கேட்கும் பிள்ளை தான் நம் தமிழக மக்கள் இப்போது.இந்த கொடுமையெல்லாம் எங்கு சென்று மனசாந்தி அடைவது.

Advertisements