விருதுகளின் விளைநிலம்–சென்சார் இல்லா வெர்ஷன்

தமிழ்நாட்டின் ஆரவாரமில்லாத மாநகர்களில் ஒன்று வேலூர்.இக் கோட்டை மாநகரின் புறநகர் பகுதி சத்துவாச்சாரி.சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இந்தியாவின் எல்லா புறநகர் பகுதிகளைப் போலவே காட்சியளித்தாலும் இது சாதாரண ஊர் அல்ல.இந்தியாவில்,ஏன் உலகிலேயே இது போன்ற பகுதி இல்லை.நம் தேசத்தின் முக்கிய விளையாட்டு கிரிக்கெட்.ஆனால் இங்கு கிரிக்கெட்டின் சுவடே இல்லை.ஏனென்றால் இந்தியாவின் பளு தூக்கும் தலைநகரம் இது.ஊர் முழுக்க அவ்வளவு க்ரேஸ்  அதற்கு.இந்தியாவின் விளையாட்டு ஐகான்  சச்சின் டெண்டுல்கராக இருக்கலாம்.ஆனால் இங்கு  பார்க்கிலும் ஒரே ஒரு ஆதர்ச நாயகனின் முகம் தான் பொறிக்கபட்டிருக்கிறது.ஏனென்றால் இது கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கமகன் சதிஷ்குமார் சிவலிங்கத்தின் சொந்த ஊர்.அவரின் பேட்டை என்று கூட சொல்லலாம்.

நான்கே தெருக்கள் கொண்ட எளிமையான சத்துவாச்சாரி முழுக்க முழுக்க ஜிம்கள்.ஒரு தெருவிற்கு குறைந்தபட்சம் ஒரு உடற்பயிற்சி கூடமாவது அமைக்கபட்டிருக்கின்றது.எங்கு பார்த்தாலும் திம்சு கட்டையாக இளைஞர்களும் நடுத்தர முன்னாள் சாம்பியன்களும் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.நாம் போர் அடித்தால் டிவி பார்ப்போம்.இவர்கள் போர் அடித்தால் கூட தண்டால் எடுக்கிறார்கள்.அனைவரும் விளையாட்டு கோட்டாவில் தான் கல்லூரி படிக்கிறார்கள்.விளையாட்டில் சாதித்து தான்  வேலைகளான ரயில்வே,பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்(BSF ),ராணுவம்,CISF,IAF, கப்பற்படை என வேலைக்கு சேர்கிறார்கள்.இது காலம் காலமாக இங்கு ஒரு  பாரம்பரியமாக தொடர்ந்து வந்துள்ளது.இந்திய பளுதூக்குதலின் முக்கால் வாசி சாம்பியன்களும் ,இந்திய பாதுகாப்பின் அணைத்து துறைகளுக்கு ஆட்களும் இங்கிருந்துதான் இளம் வயதிலிருந்தே வைரம் போல பட்டை தீட்டப்பட்டு நாட்டுக்காக அர்பணிக்கப்படுகிறார்கள்.பளுதூக்குதலில் ஒரு வீட்டில் ஒருவராவது இங்கிருந்து செல்லாவிட்டால் அது குடும்ப கவுரவத்திற்கு ஒரு அவமானமாகவே பார்க்கப்படுகின்றது. இங்கிருக்கும் எல்லா ஜிம் களுக்கும் துவக்கப் புள்ளி அட்லஸ் உடற்பயிற்சி கூடம்.இங்கிருந்து 7 சர்வதேச சாம்பியன்களும் எண்ணற்ற தேசிய சாம்பியன்களும் இந்தியாவிற்காக பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

சத்துவாச்சாரியின் வரலாறு

50 வருடங்களுக்கு முன்(1964) இங்கு ஜிம்களே இல்லை.சிலம்பக் கலை(கோலாட்டம்)தான் இருந்தது.பின் உடற்பயிற்சிகூடமாகவும் பளு தூக்கும் மையமாகவும் மாறியது.1964ல் வேலூர் சிஎம்சி  சவுத்தையாவும், விஐடி வேந்தர் விஸ்வநாதனும் அன்றைய வட ஆற்காடில் பளு தூக்கும்  சங்கம் நிறுவினர்.சதீஷின் தந்தை திரு.சிவலிங்கம் அவர்களின் குரு மாஸ்டர் சிவாவும் பஞ்சாட்சரம் என்பவரும் சத்துவாச்சாரியில் அட்லஸ் ஜிம்மை ஒரு மன்றமாக ஆரம்பித்தனர்.அன்றைய நிலையில் பளு தூக்கும் செட்டே கிடையாது.வசதி இல்லாததால் க்ரோ-பாரில் சிமெண்ட்டிலேயே 5கி,10கி,20கி என்று  ஓட்டைப்போட்டு அதை வைத்து பயிற்சி செய்தனர்.மாவட்ட மாநில போட்டிகளில் வென்றனர்.1970களில் அவர்களின் சிஷ்யபிள்ளைகளான அட்லசின் எம்.வேலு மற்றும் தமிழ்ச்செல்வன் (முதல் அரசு உத்தியோகம் சத்துவாச்சாரியில் பெற்றவர்-ஐசிஎப் )தேசிய அளவில் சாதனை படைத்தனர்.

இவர்களை முன்மாதிரியாக கொண்டு மற்ற ஜிம்கள் உருவாக ஆரம்பித்தன.ஸ்டார்,காந்தி,ப்ளூஸ்டார் போன்ற அனைத்து ஜிம்களும் முதலில் சிலம்புக் கலையை கற்பித்தவையே .நூற்றுக்கனக்கானோர் அரசாங்க வேலை சத்துவாச்சாரியில் பளு தூக்குதல் மூலம் பெற்றுள்ளனர்.அதில் 56 நபர்கள் அட்லஸ் ஜிம்மை சார்ந்தவர்கள்.3 அர்ஜுனா விருதுகள்,4 ஒலிம்பியன்கள் இங்கு செதுக்கப்பட்டவர்கள். சதீஷ் 6வது சர்வதேச சாம்பியன்.ஏற்கனவே வேலு,தமிழ்ச்செல்வன்,மகேந்திரன்,சம்பத்,பிரபு,வினோத்,இளம்பருதி,முது போன்ற ஜாம்பவான்களும் இதே சத்துவாச்சாரியில் இருந்து சென்றவர்கள் தான். வீரர்கள் சொந்த முயற்சி மூலமாக மட்டுமே ஜிம்மை காப்பற்றி வந்துள்ளனர்.

சதீஷ் என்னும் அசுர உழைப்பாளி:

இதே அட்லஸ் ஜிம் மின் தெருவில் தான் சாம்பியன் சதீஷ் குமாரின் எளிமையான வீடும் அமைந்திருக்கின்றது.6ம் வகுப்பு படிக்கும் பொழுதே பளுதூக்குதலில் ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார். சென்றாலும் அதில் முதலிடம்,தங்கபதக்கம் என்று பள்ளி நாட்களிலேயே அசர வைத்து மாவட்ட,மாநில,தேசிய,தற்பொழுது சர்வதேச சாம்பியன் ஆகவும் சொந்த முயற்சியினாலேயே முன்னேறியவர்.18 வயதிலேயே கிழக்கு,தெற்கு ரயில்வேகளில் பணி செய்ய வாய்ப்பு பெற்று,தற்பொழுது தென்னக ரயில்வேயின் காட்பாடி டிவிஷனில் பணியாற்றுகிறார்.

இவரின் தந்தை திரு.சிவலிங்கம் முன்னாள் பளுதூக்கும் அத்லெட்,ராணுவ வீரர்.20 ஆண்டுகள் ராணுவத்தில் தேசத்திற்காக பணி புரிந்திருக்கிறார்.தற்பொழுதும் விஐடி பல்கலையின் பாதுகாப்பு பிரிவில் தலைவராக பணி செய்து வருகிறார்.இவரே சதீஷின் ஆர்வத்திற்கு ஊக்கமளித்து உறுதுணையாய்,அவரின் ஆரம்பகால கோச்சாகவும் இருந்து அவரை சாம்பியன் ஆக உருவாக்கி இருக்கிறார்.உடற்பயிற்சி,உணவுமுறை,பழக்க வழக்கங்கள் என்று மகனின் உடல்,பொருள்,ஆன்மா அனைத்தையும் முறுக்கேற்றிய தந்தை என்னும் குரு.சதீஷின் தம்பி பிரதீப்பும் அண்ணனை போலவே பளுதூக்கும் வீரராக பயிற்சி பெற்று வருகிறார்.தற்பொழுது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிக்காக அண்ணா பல்கலை சார்பாக பஞ்சாப் சென்றுள்ளார்.இவர் ஆற்காட்டில் உள்ள அப்துல் ஹகீம் பொறியியல் கல்லூரியில் பி.இ மெக்கனிக்கல் பயில்கிறார்.

பேட்டி:சிவலிங்கம்,சதீஷின் தந்தை,ஆரம்பகால பயிற்சியாளர் (தற்போதைய பயிற்சியாளர் திரு நாகராஜன் அவர்கள் டீமுடன் போட்டிக்காக ஜலந்தர் சென்றுள்ளார்):

“சிறு வயதிலிருந்தே இரவுப்பகல் பாராம உழைப்பார் சதீஷ்.போட்டிகளில் ஜெயித்த பணம்,வேலையில் கிடைக்கும் சம்பளம் இவற்றை மூலதனமாக வைத்துதான் தன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த உத்வேகத்துடன் உழைத்துத்தான் தேசிய பதக்கங்களை வென்றார்.ஆனால் இது மட்டும் போதாது.ஒரு மாத காலம் லண்டனில் சிறப்பு பயிற்சி,உணவுமுறை பின்பற்றி 18 கிலோ அதிகமாக பளு அதிகமாக தூக்கும் திறனை வளர்த்தார்.இவருடைய இதே மனநிலையில் தொடர்ந்தால் இந்தியாவிற்கு 2016 ரியோ டி ஜெனிரோ(பிரேசில் நாட்டில்) ஒலிம்பிகில் பளு தூக்கும் போட்டியில் நிச்சயம் ஒரு தங்கம் காத்திருக்கின்றது.

இன்று வரை 71 நாடுகள் கலந்துகொண்ட காமன்வெல்த் போட்டியில் இவர் செய்த உலக சாதனை தொடர்கிறது(77.6 கி).ஆனால் அணைத்து நாடுகளும் பங்கேற்கும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இன்னும் 10 கிலோ அதிகமாக பளு தூக்க வேண்டும்.அதற்கு ஒரு வருட அதிநவீன பயிற்சி அவசியம்.அது வெளிநாடுகளில் எல்லா தட்பவெப்ப நிலையையும் தாங்கக் கூடிய சிறப்பு பயிற்சியாகும்.இதற்கு ஒரு நாளைய செலவு 20,000-30,000 இந்திய ரூபாய்கள் ஆகும்.ஆனால் சத்தியம் செய்துகூட சொல்லலாம் அந்த தங்க பதக்கம் நமதாகும் என்று.இதனை சதீஷ் குமாரின் வருமானம் மட்டும் கொண்டு செய்ய இயலாது.

சீனா போன்ற அரசுகள் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் தகுதியுடைய வீரர்களை தத்தெடுத்து கொள்ளும்.அவர்களக்கு உயரிய பயிற்சிகளை பல்வேறு நாடுகளில் வழங்கும்.இயல்பிலேயே போராட்ட வீரரான சதீஷை இந்திய அரசின் விளையாட்டு துறை தத்தெடுத்து கொண்டால் அவரால் உசேன் போல்ட் ஓட்டப் பந்தயத்தில் அசைக்க முடியாத வீரராக தொடர்வதைப் போல பளுதூக்குதலில் இந்தியாவை மாற்ற முடியாத சக்தியாக உருவாக்க முடியும்.

பயிற்சியாளர் சத்துவாச்சாரி ரவி:

                  முன்னாள் தேசிய சாம்பியன்.இந்நாள் பளுதூக்குதல்,வலுதூக்குதல்,உடல் கட்டமைப்பு கோச்.”நான் எனக்கு நினைவு தெரிந்த வயதில் இருந்தே ஜிம்மை நேசிப்பவன்.உடற்பயிற்சி மேல் உள்ள காதலே தற்போது 54 வயதாகும் என்னை உத்வேகபடுத்தி இன்றளவும் செயல்பட வைக்கின்றது.என் பீனிக்ஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் ஏராளம்.நான் 1988,1989,1990 களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேசிய அளவில் ஓவரால் சாம்பியன் பட்டம் பெற்றேன்.அதுபோலவே என் மக்களும்,மாணாக்கரும் பெற அவர்களை உருவாக்கி வருகின்றேன்.இங்கு வரும் மாணவர்கள் ஒட்டுமொத்த உடலையும் வலுப்படுத்தி போட்டிகளில் தங்கள் முழுத்திறனை வெளிக்கொணர செய்வதே இன்றுவரை “சத்துவாச்சாரி ரவி” என்ற பெயரை தேசிய அளவில் தொடர்ந்து ஒலிக்க செய்கின்றது.இன்னும் பல சாம்பியன்களை உருவாக்குவதே சத்துவாச்சாரிக்கு நாங்கள் செய்யும் பெருமை.எனக்கு கலெக்டரேட்டில் அரசாங்க உத்தியோகம் கிடைத்தது போலவே எல்லா இளைஞர்களுக்கும் வேலை கிடைக்க பயிற்சி கொடுக்கின்றேன்.”
பிரதீப்,தேசிய வீரர்

                 “முதலில் எனக்கு பளு தூக்குதலில் ஆர்வம் ஏற்பட்டதற்கு காலம் காலமாக நான் சத்துவாச்சாரி வீரர்களை பார்த்து வளர்ந்ததே காரணம்.முதலில் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு தன்னம்பிக்கை வளர்த்தேன்.பின் வட்ட,மாவட்ட அளவில் ஜொலிக்க ஆரம்பித்தேன்.கல்லூரி அளவிலான TIES போட்டிகளிலும் எளிதாக வெற்றிபெற முடிந்தது.தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறேன்.கூடிய விரைவில் சர்வதேச அளவில் களம் இறங்க என்னை தயார்படுத்தி வருகிறேன்.
                 போட்டிகள்,அதன் பயிற்சியினால் ஏற்படும் சோர்வுகளிலிருந்து உடலை வலுப்படுத்த சுழற்சி முறையில் வாரம் முழுவதும் மீன்,முட்டை,இறைச்சி,பால் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.இவற்றில் உள்ள புரத சத்துகள் மட்டும் இல்லாமல் supplementகளும் முக்கியம்.அப்பொழுதுதான் ஆற்றலை சீராக வைக்க முடியும்.”
நரேஷ் குமார்:

              2008,2009,2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் தேசிய அளவில் பல பட்டங்களை வாரி குவித்தவர்.தற்பொழுது போட்டிகளில் பங்கேற்கும் தன் சத்துவாச்சாரி தம்பிமார்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கின்றார்.
உடலை ஒரு கோவில் போல பராமரித்து வரும் இவர் தற்பொழுது பாடி பில்டிங்,பளு தூக்குதல்,வலு தூக்குதல் போன்ற பல்வேறு துறைகளில் சத்துவாச்சாரியின் விசிடிங் கார்ட்.இந்த துறையில் பயிற்சி பெற விரும்புபவர்கள் அனைவருக்கும் இவர் ஒரு மைல்கல் நிபுணர்.
            “ஐ படத்தில் நாடு முழுக்க உள்ள சிறந்த பாடி பில்டர்களை தேர்ந்தெடுத்து போட்டிகளையும் பயிற்சியையும் காட்சி படுத்தினர்.ஜிம்மே கதி என்று சிறு வயதிலிருந்தே உடலை கட்டுகோப்பாக வைத்து வரும் வீரன் ஆதலால் நானும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.தேசிய அளவில் நான் பெற்ற பதக்கங்கள்,கோப்பைகள்,சாம்பியன்ஷிப் போன்றே இதையும் என் உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே கருதுகிறேன்.”
பிரகாஷ்,இளம் வீரர்:

                “முந்தைய நாட்களில் பளுதூக்க வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்.மார்புப் பகுதியில் ரத்தம் கட்டி விடும் என்று கூறி அச்சப்படுத்தினார்கள்.ஆனால் முறையான பயிற்சி மேற்கொண்டு சாம்பியன்ஷிப்களையும் ,அரசாங்க வேலைகளையும் சத்துவாச்சாரி இளைஞர்கள் பெற துவங்க ஆரம்பித்தவுடன் இந்த அச்சம் முற்றிலும் நீங்கி விட்டது.நானும் முறையான பயிற்சி பெற்று வருகிறேன்.உத்தியோகம் என் முதல் குறிக்கோள்.அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு முழுக்க போட்டிகளில் கவனம் செலுத்துவேன்.”
[பின்குறிப்பு: 1.இவர்கள் மட்டும் அல்லாது பிரபல கோச் திரு.நாகராஜன் அவர்கள் இல்லத்திற்கே சென்று பேட்டி எடுக்க முயன்றேன்.அவர்,தன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதால் ஊடகங்களுக்கு சிறிது காலம் பேட்டி தர அனுமதி இல்லை என்று கூறி மறுத்துவிட்டார்.
2.கோச் திரு.முத்து அவர்கள் செலெக்ஷன் காக கொல்கத்தா சென்றிருப்பதாக அவர்கள் இல்லம் அருகே தகவல் கூறினார்கள்.]
                     27793-004

சதீஷின் எளிமையான இல்லம்

சதீஷின் எளிமையான இல்லம்

பெற்றோர்

பெற்றோர்

சிறு வயதிலிருந்து பெற்ற கோப்பைகள்

சிறு வயதிலிருந்து பெற்ற கோப்பைகள்

அட்லஸ் ஜிம்

அட்லஸ் ஜிம்

20150102_161857

அரசு வேலை பெற்றவர்கள்

அரசு வேலை பெற்றவர்கள்

முன்னாள் வீரர்கள்

முன்னாள் வீரர்கள்

CS_Vishwanathan Sathish+Sivalingam+20th+Commonwealth+Games+0ybm3QMWVtql sathish-sivalingam-honoured-by-velamma-school-stills-6 sathish-sivalingam-honoured-by-velamma-school-stills-13 SATISH_SIVALINGAM__2028421f

இப்பொழுதே சத்துவாச்சாரியின் சின்னஞ்சிறிய வாண்டுகள் குச்சியில் டயர் சொருகி “சதீஷ் அண்ணன் போல வரணும்னு ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்து விட்டன.அது என்றும் தொடரணும்” என்ற ஏக்கப்  பெருமூச்சோடு முடித்தார் இந்த இலட்சிய தந்தை.

மத்திய மாநில அரசுகளே! தனியார் ஸ்பான்சர்களே! ஒரு ஒலிம்பிக் சாம்பியனை  உருவாக்கிய பெருமை நம் தமிழகத்திற்கு வேண்டாமா?லட்சங்கள் என்ன?கோடிகள் என்ன?இந்தியாவின் ஒலிம்பிக் தலையெழுத்தை மாற்றவல்ல இந்த தமிழக பிதாமகனை கண்டுகொள்ளாமல் விட்டால் நம் தேசிய விளையாட்டு வரலாற்றில் ஒரு கறுப்பு புள்ளி அது.

களத்தில் இறங்குவோம்.தங்கத்தை அறுவடை செய்ய இன்று சதிஷ்குமார் என்ற தங்கமகனுக்கு,வீரிய விதைக்கு உரமளிப்போம்.

Workout

Workout

Pradeep

Pradeep

Prakash

Prakash

Young Ravi master

Young Ravi master

Sathuvachari,NH-Chennai route

Sathuvachari,NH-Chennai route

Sathuvachari Ravi

Sathuvachari Ravi

The street towards gyms

The street towards gyms

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s