கசடற கற்று வெற்றிப்படியேறு-2 events

தேர்வுக்கு முன்

*******

31.01.2015.திருவண்ணாமலை அதிர்ந்தது. புதிய தலைமுறை குழுமத்தின் வெற்றிபடிகள் 2014-2015 நிகழ்ச்சி SKP பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள பெருவாரியான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் வருகை என எண்ணிக்கை 5000த்தை தொட்டது.அரங்கம் நிரம்பி வழிந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடி,குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி இனிதே துவங்கியது.வரவேற்புரை யாற்றிய  புதிய தலைமுறையின் மண்டல மேலாளர் திரு.அய்யாதுரை அவர்கள் மாவட்டத்தின் மோசமான கல்வி நிலையை மாணவர்கள் முயன்று மாற்றி திருவண்ணாமலையை மாநிலத்தின் சிறந்த இடத்தில வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கரகோஷங்கள் பறந்தன. முன்னுரையை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர்கள் திரு.ஜிகே ஞானமூர்த்தியும்,செந்தில்குமாரும் மாணவர்கள் நவீன தொலைதொடர்பு சாதனங்களிலேயே மூழ்கி நேரத்தை வீணடிக்கின்றனர்.அதை தவிர்த்தாலே பெருவாரியான மதிப்பெண்களை குவிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினர்.

SKP கல்வி குழுமத்தின் ஒட்டுமொத்த தலைவரான திரு.SKP கருணா அவர்களின் உரை ‘நச்’ என்று இருந்தது. எந்த ஊரிலும் மாணவிகள் சிறப்பாக படித்து விடுவார்கள்.95 சதவிகிதமாவது எட்டிவிடுவார்கள் தேர்ச்சி விகிதத்தில்.அதனால் நம் மாணவிகள் பற்றி எனக்கு பெருமிதம் அதிகம்.கவலைகள் குறைவு.ஆனால் எம் மாணவர்கள் நீங்களோ சினிமா,காதல்,தவறான பழக்கங்கள் இவற்றில் விழாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே வாழ்வில் உயர முடியும் என்பதை பதிகிறேன் என்றார்.இவரது பேச்சிற்கு கிடைத்த கைதட்டல்கள் அடங்க 2 நிமிடங்கள் பிடித்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருமதி.ப்ரீத்தி ஸ்ரீநிவாசன் கலந்துகொண்டார்.இவரது வீல்சேர் மேடையில் ஏறியபோது அரங்கம் இரண்டாக பிளக்கும் அளவிற்கு மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். “நான் இந்திய மகளிர் கிரிக்கெட் அண்டர்-19 அணியில் காப்டனாக இருந்தேன்.அப்போது எனக்கு வயது 18.ஒரு விபத்து நேர்ந்தது.கழுத்து எலும்பு முறிந்து முதுகு தண்டில் காயம் ஏற்பட்டது.இன்று வரை கழுத்திற்கு கீழ் எந்த ஒரு அசைவும் கிடையாது.ஆனால் நான் சோர்ந்து படுக்கையில் விழவில்லை.மாறாக உத்வேக பேச்சாளராக மாறிவிட்டேன்.நான் moviebuff.com என்ற இணையத்தளத்தில் விமர்சகராக இயங்குகிறேன்.ஒரு மென்பொருள் வைத்துள்ளேன்.அது என் குரலை எழுத்துக்களாக மாற்றி விடுகின்றது.கைகள் இல்லாமலே எழுதுகின்றேன்.என்னால் இவ்வளவு முடியும் என்றால் மாணவர்களாகிய உங்களால் என்ன முடியாது? ” என்றார். அரங்கமே இந்த கேள்வியை கேட்டு உருகியது.மெய் சிலிர்த்தது. விசில்கள் முதல்முறையாக பறந்தன.மாணவர்களிடம் மைக் வழங்கப்பட்டது.ஐ ஏ எஸ்,ராணுவம்,அரசியல் போன்ற மாணவர்களின் இலட்சியங்கள் வெளிப்பட்டன.”நான் நிச்சயம் சாதிப்பேன் மேடம்” என்று ஒரு மாணவன் சூளுரைத்தான்.

புதிய தலைமுறையின் சார்பாக இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய நிகழ்ச்சி மேலாளர் திரு.சூர்யா தங்கராஜ் அவர்கள் மாணவ கண்மணிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும்.அதில் கிடைத்த உற்சாகத்தை கொண்டு அயராது படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு பாடத்திற்கும் அதில் விற்பன்னரான ஆசிரியர்கள் கொண்டு டிப்ஸ் வழங்கப்பட்டது.அதை எழுதும் பேடில் மாணவர்கள் சீரியஸ் ஆக குறித்துக் கொண்டனர்.

கணித ஆசிரியர் திரு.R. சம்பத் அவர்கள் “கணிதத்தை கடப்பது வெகு சுலபம்.தேற்றங்கள்,பார்முலாக்கள் இவற்றை விரல் நுனியில் மாணவர்கள் வைத்திருக்க வேண்டும்.200 மதிப்பெண்கள் பெறுவது ஒரு மதிப்பெண் வினாக்களின் தன்மையை பொறுத்தே அமையும்” என்றார்.

இயற்பியல் ஆசிரியரான 13 வருட அனுபவம் கொண்ட திரு.சுந்தரம் அவர்கள் “இயற்பியலின் சாரமே அலகுகள்(SI Units) தான் என்றார்.கட்டாய கேள்விக்கு அலகுகளின் தன்மையை உணர்ந்து பதிலளித்தால் 200க்கு 200  மதிப்பெண்கள் என்பது மாணவர்களுக்கு துச்சமே”என்றார்.

வேதியயிலில் சீனியர் ஆசிரியையான திருமதி.ஜமுனா அவர்கள் “வேதியியல் இல்லாத இடமே இல்லை.ஆனால் வேதியியல் கற்பதை வேப்பஞ்சாரை குடிப்பது போல மாணவர்கள் உணர்கிறார்கள்.இதில் முக்கிய வில்லனே ஆர்கேனிக் கெமிஸ்டரி தான்.இதிலுள்ள சூட்சுமங்கள் என்னவென்றால் இதற்கென்று தனியாக ஒரு நோட்டில் அத்துணை வேதி விளைவுகளையும்(REACTIONS) எழுதி வைத்து படித்தால் எளிதாக வெற்றியை உரிதாக்கலாம்” என்றார்.

தாவர புலியான(!) திரு.மு.பிரசன்னா “ஒரு செம்பருத்தி பூ உங்கள் கண்ணை பறிக்கும் போது கூட அதன் அறிவியல் பெயரான hibiscus rosasinensis என்பது உங்களுக்கு தெரியும் வகையில் ப்ரிபேர் செய்தால் உங்களை அடிச்சுக்க தமிழகத்தில் யாரும் உண்டோ?” என வினவினார்.

கல்விசோலை இணையதளத்தை நடத்தி வரும் திரு.தேவதாஸ் அவர்கள் விலங்கியல் டிப்ஸ் அளித்தார்.”விலங்கியலின் அழகே அதன் வரைபடங்கள் தான்.அவற்றில் உள்ள பகுதிகளை மார்க் செய்து விவரித்தாலே விலங்கியல் வசப்படும்” என்று ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முடித்தார்.

பொருளாதாரம் தொடர்பாக மினி ஆடிடோரியத்தில் திரு.கோவிந்தராஜன் அவர்கள் “பொருளாதாரம் என்னும் சுவையை ருசிக்க ஆரம்பித்தால் உங்களால் நிறுத்த முடியாது.மிகவும் நல்ல ஸ்கோப் உள்ள துறை இது” என்றார்.

வணிகம் மற்றும் கணக்கு வழக்கியல்(Commerce and Accountancy) துறை வல்லுனரான ஜி.பி.ராம் “பாடத்தில் உள்ள கணக்குகளை புரிந்து கொள்ள இப்பொழுதே ஆசிரியர் உதவியை நாடுங்கள்.” என்றார்.

வரலாறு முக்கியம் மந்திரியாரே என்பதர்கேற்ப வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் சி.ஸ்ரீனிவாசனை பூக்களை மொய்த்த தேனீக்கள் போல மாணவர்கள் சூழ “வரலாற்றில் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவர்களின் வரலாறும்,உலக வரலாறும் மிக முக்கிய பகுதிகள்.இவற்றை ரசித்து படியுங்கள்” என்றார்.

********

தேர்வுக்கு பின்

மாணவர்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவர்களை அரவணைத்து வழிநடத்தி வருகின்றது புதிய தலைமுறை குழுமம்.பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளில் சாதனை படைத்து சிறகடிக்க “வெற்றிப்படிகளை” உருவாக்கி நடத்தி வரும் குழுமம் தான்,அவர்கள் +2விற்கு பின்னும் குழம்பி விடாமல்,சரியான துறையை தேர்ந்தெடுத்து தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்திட “கற்க கசடற” நிகழ்ச்சியினை வருடாவருடம் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.இந்த வருடம் வேலூரில் கோலாகலமாக “கற்க கசடற” துவங்கியிருக்கிறது.புதிய தலைமுறை வழங்கும் இக் கருத்தரங்கினை எஸ்.ஆர்.எம் பல்கலையும்,சாஸ்தா கல்வி குழுமமும் ஏப்ரல் 18 அன்று வேலூர் எத்திராஜ் அம்மாள் திருமண மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தியது.

விழாவில் ஹைலைட்-பேச்சாளர்களே குறிப்பிட்டது போல் பெற்றோர்கள் துணையின்றி மாணவ-மாணவிகள்,குறிப்பாக மாணவர்களை விட அதிகமாக வருகை தந்த மாணவிகள் தான்.9.30 மணிக்கு ஆரம்பித்த விழாவிற்கு 8.45,9 மணி அளவிலேயே ஆர்வமுடன் அரங்கின் உள்நுழைந்தனர்.பெயர் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.பேச்சாளர்கள் கையால் ஒரு திடீர் பரிசை மாணவர்கள் பெயரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து,அவர்களை மேடைக்கு அழைத்து,கருத்தரங்கின் இடையிடையே வழங்கப்பட்டது.

சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர் திருமதி.பர்வீன் சுல்தானா,டாக்டர் திரு.மாறன் மற்றும் டாக்டர் திரு.சாரோன் ஆகியோர் வருகை தந்து மாணவர்களை உத்வேகப்படுத்தி,உற்சாகத்தின் எல்லைகளுக்கு அழைத்து சென்றனர்.அந்த முத்தான மூவர் பேசியதன் சாரம் இதோ உங்கள் முன் ஒரு தொகுப்பாக.

டாக்டர்.பர்வீன் சுல்தானா:

மகாகவி பாரதியின் வார்த்தைகளான

“கற்பவனாக இரு அல்லது கற்றதை கற்பிப்பவனாக இரு அல்லது கற்பவருக்கு உதவி புரிபவனாக இரு”வுடன் ஆரம்பித்த பர்வீன் “வேலூர் என்றவுடன் நினைவுக்கு வருவது-இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் சுதந்திர போராட்டதிற்கான விதைகளை சிப்பாய் கழகம் மூலம் முதன்முதலில் விதைத்த இடம்.இது ஒரு பிரம்மாண்டமான அரங்கம்.நான் அரங்கத்தின் அளவை சொல்லவில்லை.இங்கு வந்திருக்கும் பிள்ளைகளின் மனத்திண்மையைத் தான் சொல்கிறேன்.பெற்றோர்கள் துணையின்றி இங்கு வந்திருக்கிறீர்கள்.முதலில் அதற்கு என் வாழ்த்துக்கள்.

உங்கள் இடது,வலது பக்க எதிரிகளை மறந்துவிட்டு(ஆம்,இந்த நேரத்தில் உங்கள் நண்பர்கள் கூட எதிரிகள் தாம்) உங்களை கவனியுங்கள்.நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதை முதலில் தெளியுங்கள். போராட்டத்தில் இருந்து நமது வாழ்க்கையை பிரிக்க முடியாது.ஒவ்வொரு சவாலிலும் உங்களுக்கு உள்ள வாய்ப்பை மட்டும் பாருங்கள்.மாவீரன் நெப்போலியன் வார்த்தைகள் என்னவென்றால் ”நீச்சல் தெரியாத நான் சுறாக்கள் நிறைந்த ஆழ்கடலிலேயே நீச்சல் பழக விரும்புவேன்”. உங்கள் படிப்பை நீங்கள் முடிவு செய்யுங்கள்.உங்கள் நண்பர்கள் தேர்ந்தெடுக்கும் துறையை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள்.

இன்றுகூட ஆஸ்திரேலியாவில் 6,50,000 ரூபாய் மாத சம்பளத்தில்,சமையற்கலை படித்த இந்திய செப்களுக்கு வேலை உண்டு.ஆனால் அவை நம் கண்களில் தெரிவதே இல்லை.இன்றைய இளைஞர்களின் பெரிய பலவீனம்- உங்களுடைய நேரத்தையும்,சிந்தனையையும்,கனவுகளையும் பிறர் களவாடுவதை நீங்கள் அனுமதிக்கிறீர்கள். தடுத்தால் மட்டுமே நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.எந்த வேலையையும் சோர்வுறாத தீவிரத்தன்மையுடன் செய்பவர்கள் எல்லா துறைகளிலும் விற்பன்னர்களாவர்.நீங்கள் புத்தகங்கள் வாசிக்காவிடிலும் பத்திரிக்கைகளாவது உங்கள் கைகளில் இருக்கவேண்டும்.

ஒரு ஓவியர் மரம் வானத்தை தொடுவதுபோல வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து தான் முட்டாளாக்கப் பட்டதாக நினைத்துகொண்ட ரசிகன் ஒருவன் அவரிடத்தில் “இது பொய் இல்லையா?” என்றான்.அவர் அமைதியாக,”இது பொய் ஆகாது.நான் ஒவ்வொரு மரத்தின் கனவினை வரைந்திருக்கிறேன்” என்றார்.பதில்களல்ல வாழ்க்கை.நிறைவுறாத கேள்விகளின் தேடல்களே வாழ்க்கை.தடாகத்தில் ஒரு மீனும் பறவையும் மோதிக்கொண்டிருப்பது போன்றது உங்கள் மனம்.அதில் ஒன்று உங்கள் இலக்கு.இன்னொன்று இச்சை.இலக்கு ஜெயிக்க இச்சையை தவிருங்கள்.வாழ்வு உங்கள் வசப்படும்.” என்று சரங்கள் பல வெடித்தார்.

டாக்டர்.மாறன்:

“கல்வி இல்லையேல் செல்வமில்லை.கல்வி இல்லையேல் இன்றைய வாழ்வில்லை.இந்தியாவின் மதிப்பு உலகரங்கில் நம் கல்வியை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.வேலை செய்பவர்களாகவே காலத்தை தள்ளி விடாதீர்கள்.குறைந்தபட்சம் 5 வருடங்களாவது ஒரு துறையில் வேலை புரியுங்கள்.பிறகு சுயதொழில் ஆரம்பித்து பிறருக்கு வேலை கொடுப்பவர்களாக வாழுங்கள்.பொறியியல் இன்னும் 20 வருடத்திற்கு இந்தியாவில் கோலோச்சும்.நம் அரசின் திட்டங்கள் உற்பத்தி துறையை நோக்கியே அமைந்துள்ளது.அதற்கேற்ப உங்கள் துறையை திட்டமிடுங்கள்.

பி.ஏ வரலாறு படித்தாலும் வேலை உண்டு.சி.ஏ படித்தாலும் வேலை கிடைக்காது.வேலை என்பது படிப்பை பொறுத்ததல்ல.அதை படிக்கும் தனிநபரை பொறுத்தது. ஆட்டு மந்தையைப்போல முடிவெடுக்காமல் நின்று யோசியுங்கள்.சூரியனுக்கு கீழ் ஏகப்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன.குறுகலான கண்ணோட்டத்துடன் நோக்கினால் அவை தென்படாது.தேடலின் மூலமே தென்படும்.(எ.டு) மெக்கட்ரானிக்ஸ்,ரோபாடிக்ஸ்,மெடலர்ஜி,ஆட்டோமொபைல்,பயோ-தொழில்நுட்பம்,நானோ-பொறியியல்,பெட்ரோ கெமிகல்,கன்ஸ்ட்ரக்ஷன்,ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்,இன்டீரியர் டிசைனிங்,குவாலிடி சர்வேயிங்.

சுயநலமாக துறையை தேர்ந்தெடுக்காதீர்கள்.நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை மூலம் நம் நாட்டிற்கு நலம் பயக்க வேண்டும்.இந்தியாவிலேயே போராடுங்கள்.தோற்றாலும் போராடுங்கள்.வெற்றி ஒருநாள் நிச்சயம்.அன்று வரும் வெற்றி உங்களை விட்டு அகலவே அகலாது.எழுச்சி முக்கியம்.சுயதொழில் முனைவோர்கள் நம் கண்முன்னே வெற்றி பெறுகிறார்கள்.அந்த ஆரோக்கியமான முன்மாதிரியை முழுமனதுடன் பின்பற்றுங்கள்.ஊரக மாணவர்கள் திணறும் ஒரே விஷயம் ஆங்கிலம்.ஒரு ஆறு மாதம் லிமிட் வைத்துக்கொள்ளுங்கள்.தரமான ஆங்கில நாளிதழை வரிவிடாமல்,வெறித்தனமாக வாசித்து வாருங்கள்.எந்த ஆங்கில கோர்ஸும் உங்களுக்கு தேவைப்படாது.உங்கள் வாழ்க்கை நீங்கள் நிர்ணயிப்பதுதான்.”

டாக்டர்.சாரோன்:

“இயலாமையை வெற்றியாக்குவதுதான் வாழ்வின் சுவாரஸ்யமே.இதே வேலூரில் படித்த உங்கள் மூத்த சகோதரன் நான்.இன்றைய மாணவர்கள் தெளிவானவர்கள்.அவர்களை குழப்புவது பெற்றோர்கள் தான்.முதலில் அவர்கள் தங்கள் அதீத பாதுகாப்புணர்ச்சியில் மாணவனின் திறனையும் விருப்பத்தையும் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு பிடிக்காத துறையை அவர்கள் சார்பில் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.இது தவறு.அவர்கள் வாழ்க்கையை அவர்களே அமைத்துக்கொள்ளும் பக்குவத்தை நாம் வழங்க வேண்டும்.அது சுதந்திரம் அல்ல.அவர்களின் உரிமை.முகநூல்,ட்விட்டர்,வாட்சப்ப் நீங்கள் ஜெயித்த பின்பும் இருக்கும்.அதை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி உங்கள் நேரத்தை வீணடித்து வாழ்விழந்துபோனால் அதைவிட துயரில்லை.

நாம் கற்கப் போகும் துறையை மேலோட்டமாக பார்த்து பணம் சம்பாதிப்பதில் மட்டும் நம் சிந்தையை சிதற விடுகிறோம்.மாறாக அதில் முழு சிந்தையை செலுத்தி நிபுணத்துவம் பெற்றால் வெற்றி பெற இயலும்.வேலூரில் டாக்டர் இல்லாமல் ஒரு கர்ப்பிணி பெண் இறந்ததை பார்த்து கதிகலங்கிய ஒரு அமெரிக்க பெண்ணின் முயற்சி தான் இன்று உலக புகழ் அடைந்திருக்கிற சிஎம்சி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை.அந்த பெண்மணி ஐடா ஸ்கட்டர்.ஒரு சிறு பொறியே பெரும் காட்டுத்தீயினை உண்டாக்கும்.இதற்கு பாரதியின் “அக்கினி குஞ்சொன்று கண்டேன்”பாடலே சாட்சி. கல்வியை கண்ணாக நினையுங்கள்.கைவிடப்பட மாட்டீர்கள்.அது உங்களுக்கு வாழ்வளிக்கும்.தவறு செய்யாமல் கற்றுகொள்வது கடினம்.அந்த தவறை திரும்ப செய்யாதிருப்பதே வெற்றி.நம் படிப்பினை.”

Dr.Parveen Sultana 1

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s