IRENE தொழில்நுட்பம்

உங்கள் தாத்தா காலத்திலோ அப்பா காலத்திலோ நீங்கள் பழைய இசைத்தட்டுகளை பார்த்திருப்பீர்கள்.அல்லது டிவி,சினிமா,இணையத்திலாவது இவற்றை பற்றி பார்த்து படித்திருப்பீர்கள்.இவற்றில் அன்றைய இசை மட்டுமல்லாமல் பல்வேறு ஆராய்ச்சி,வரலாறு குறித்த தகவல்களும் ஒலி ரூபத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.உலகம்  முழுக்க இவ்வாறு 1 மில்லியன்(10 லட்சம்)பழைய இசைத்தட்டுகள் உள்ளன.தெற்காசியா மற்றும் இந்தியாவில் மட்டும் அரை மில்லியன்.சரி, இவற்றின் இன்றைய நிலை?

உங்கள் வீட்டுச் செல்லபூனை கீறியோ,நீங்களே சிறு வயதில் உடைத்தோ ஏதேனும் ஒரு வகையில் அவை சேதமோ,தொலைந்தோ,அழிந்தோ போயிருக்கும். நமக்கு அது வெறும் இசைத்தட்டு.நம் தாத்தாவுக்கோ அது இசை சக்கரவர்த்தி தியாகராஜரின் கீர்த்தனைகளாக இருக்கலாம்,எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் தெய்வீக குரலாக இருக்கலாம்,ஹனீபாவின் தேன் பாடல்களாக இருக்கலாம். அந்த ஒலிகள் வருங்கால உலகிற்கு தெரியாமலேயே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது.அவை மாபெரும் பொக்கிஷங்கள்.கால பெட்டகங்கள்.

சரி,அவற்றில் உள்ள ஒலியை மறுபடியும் நாம் காப்பற்றவே முடியாதா?கேட்கவே முடியாதா? என்று ஒரு மனிதர் 1877லேயே யோசித்தார்.அவர் தாமஸ் ஆல்வா எடிசன்.அந்த சிந்தனையின் நீட்சி இன்று வரை ஆராய்ச்சியாக தொடர்கிறது.ஆனால் அதற்கான தொழில்நுட்பம் உலகின் ஐந்தே இடங்களில்தான் உள்ளது.அவற்றில் நான்கு அமெரிக்காவிலும் ஒன்று இந்தியாவில்-சென்னை  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும் IRENE(ஐரீன்) என்ற பெயரில் வழங்கி வருகிறது.இது குறித்து அமெரிக்காவின் கார்ல் ஹேபர் போன்ற ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து முயற்சி செய்து வரும் இந்நூலகத்தின் இயக்குனர் திரு.சுந்தர் கணேசனை புதிய தலைமுறை அவரது தரமணி அலுவலகத்தில் நேரடியாக சந்தித்தது.

திரு.சுந்தர் கணேசன்

திரு.சுந்தர் கணேசன்

IRENE என்றால் என்ன?

இது ஒலியை,அதனை பதிவு செய்து வைத்திருக்கும் பண்டைய தளத்தினை,புகைப்படங்களாக பதிந்து மறுகட்டமைப்பு செய்யும் தொழில்நுட்பமாகும்.I-Image,R-Reconstruct,EN-Erase Noise,E-Etcetera என்பதே ஐரீனின் விரிவாக்கம் ஆகும்.

பண்டைய இசைத்தட்டுகள் மெழுகு,பிளாஸ்டிக்,ஷெல்லாக் போன்ற பரு ஊடகங்கள் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.இவை mp3, வேவ் போன்ற இன்றைய எந்த ஒலி வடிவிலும் அடங்காது.தற்போதைய எந்த கருவியாலும் இவற்றை பிரதிபலிக்க முடியாது.அதற்கு பழைய முள்(stylus) மூலம் மறுகட்டமைப்பு செய்ய ஏற்ற வகையில் அந்த பழைய இசைத்தட்டுகள் திடமாக இருக்க வேண்டும்(no damage). ஆனால் அவை அப்படி இருப்பதில்லை.கீறலோ,உடைவோ ஏற்பட்டிருக்கும்.இதற்கு தீர்வுதான் இந்த ஐரீன் தொழில்நுட்பம்,

அமெரிக்காவில் பழைய ராக் இசையை சேகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கண்டோம்.இங்கு நம் இந்திய பாரம்பரிய இசையை ஏன் இந்த தொழில்நுட்பம் கொண்டு டிஜிட்டல் ஆக்கக்கூடாது? என யோசித்ததன் விளைவே இங்கு ஐரீன் வந்தது.

IRENE எப்படி இயங்குகிறது?

முதலில் இமேஜிங்.அதாவது ஆப்டிகல் மெட்ராலஜி  என்ற முறை கொண்டு இசைத்தட்டின் தளம் முழுவதும் புகைப்படம்(high resolution) அதிக சக்திவாய்ந்த,ஒளி பாய்ச்சும் கேமராக்கள் மூலம் பிடிக்கப்பட்டு சேகரிக்கப்படும்.பின்,இசைத்தட்டில் ஊசியானது(stylus) எவ்வாறு நகர்ந்தது என்பதற்கேற்ப சில எண்ணியல் கோட்பாடுகள் மூலம் அந்த புகைப்படங்களிலிருந்து அந்த ஒலி மீண்டும் கட்டமைக்கபடுகிறது.

IRENE

IRENE

இதற்கு edge detection என்னும் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.சாதாரண இசைதட்டுகளுக்கு 2 டைமென்ஷன் முறையும்,உருளை வடிவ ஒலி சேகரிப்பான்களுக்கு 3 டைமென்ஷன்(2 டைமென்ஷன்+ஒரு நுண்ணிய மைக்ரோஸ்கோப்)முறையும் பின்பற்றப்படுகிறது.இந்த தொழில்நுட்பம் க்ரூவ் உள்ள பழங்கால இசைத்தட்டுகள் அனைத்திலுமுள்ள ஒலியை  சேகரிக்கும் திறன் கொண்டது.

IRENE மூலம் வேறு என்ன செய்ய முடியும்?

வெறுமனே பழைய ஒலி மறுகட்டமைப்பு மட்டுமில்லாமல்,அதை மேம்படுத்தவும் முடியும்.க்ரூவ்களின் இருப்பிடம் இசைத்தட்டு முழுவதும் எங்குள்ளது?என்பதை படம்பிடிக்கும் பொது அதில் தொடர்தலின்மை(discontinuity) தென்பட்டாலோ,உடைவு இருந்தாலோ நாமே அதை டிஜிட்டலாக நிரப்பி சரி செய்துகொள்ள முடியும்.எப்படி photoshopல் புகைப்படத்திலுள்ள தேவையில்லாத அம்சங்களை நீக்கிவிட்டு,தேவையான அம்சங்களை சேர்க்கிறோமோ அதே போன்று இந்த தொழில்நுட்பம் கொண்டு ஒலியில் உள்ள சின்ன சின்ன பிழைகளையும்,இடைவெளிகளையும் நீக்கி மேம்படுத்தலாம்.

இப்பொழுது ஆராய்ச்சி ரீதியாக உங்களின் தேவை என்ன?

தற்பொழுது வணிகரீதியில் நாங்கள் உற்பத்தி ஆரம்பிக்கவில்லை.இந்த ஆராய்ச்சிக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகின்றனர்.அவர்களுக்கு இசை பற்றிய கலை புரிதலுடன்,ஒலி மற்றும் தொழில்நுட்பம் போன்ற விஞ்ஞான அறிவும் இருத்தல் அவசியம்.ஐஐடி,அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் முன்வந்தால் இந்திய பண்டைய இசையையும் ஒலிகளையும் அழியவே முடியாத வகையில் அமரத்துவம் பெறவைக்க முடியும்.

இப்பொழுது 3000 இசைத்தட்டுகளை டிஜிட்டைஸ் செய்யும் பணி இங்கு நடந்து வருகிறது.வெளிநாட்டு ஆராய்ச்சி அமைப்புகள் இந்திய கலாச்சார அடையாளங்களை காத்து ஆவணப்படுதுவதில் பெருமுயற்சி செய்து வருகின்றன.அவற்றில்  சம அளவு இல்லாவிடிலும் ஒரு பங்காவது இங்குள்ள நிறுவனங்கள் செய்ய முன்வர வேண்டும்.இது வெறும் இசையோ ஒலியோ அல்ல.நம் தேசத்தின் பண்டைய வரலாற்றை மீட்கும் ஒரு ஆபத்பாந்தவ தொழில்நுட்பம்.

உண்மையில் ஐரீனின் பணி அளப்பரியதுதான்.உங்களையும் இந்த உன்னத முயற்சியில் இணைத்துக்கொள்ள

தொடர்பு கொள்க:

திரு.சுந்தர் கணேசன்,

இயக்குனர்,

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்,

சிபிடி வளாகம்,

தரமணி,சென்னை-113

தொலைபேசி: 044-22542551/22542552

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s