பிரபஞ்சனின் “மயிலிறகு குட்டி போட்டது”

image

எனக்கு பாண்டிச்சேரியை தெரியும்.அதன் கடற்கரைகளை கண்டதில்லை.நான் பிரபஞ்சனை கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர் எழுத்துக்களை அனுபவித்ததில்லை.புதுவை எனக்கு தொப்புள்கொடி உறவு.நான் பிறந்த ஊர்.பிரபஞ்சனும் அதே ஊர்.ஒரே ஊர்க்காரர் என்ற சிந்தனையே போதை ஏற்றியது.பல நாட்களாக புதுவையின் பிரஜையாக நான் பிறப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், திருவண்ணாமலையிலேயே ‘not found’ சான்றிதழ் கொடுத்து தமிழக பிறப்பு சான்றிதழையே பெற்றுவிடலாம் என்று சோம்பலாக திரிந்து கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான் நூலகத்தில்(திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம்) பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது கையில் கிடைத்தது.இன்னும் இரண்டு புத்தகங்களோடு வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன்.எனக்கு அவர் எழுத்து மிகப் பிடித்திருக்கிறது.

அவர் சொல்கிறார் “புதுவையில் என்றும் மதுவிலக்கு கிடையாது.புதுவைக்காரர்கள் நாங்கள் மது அருந்துகிறோம்.தமிழ்நாட்டுக்காரர்கள் மது குடிக்கிறார்கள்”

எவ்வளவு பெரிய பிழையை போதிக்காமல் சுட்டிச் செல்கிறது அவரது எழுத்து? புதிய தலைமுறை வார இதழில் இப்போது கிட்டத்தட்ட 8 மாதமாக நான் வேலைபார்த்து வருகிறேன், வாழ்ந்து வருகிறேன் பயிற்சி பத்திரிகையாளனாக.
அவர் இந்த கட்டுரை தொகுப்பை இதே புதிய தலைமுறை இதழில் வாராவாரம் 2010/2011 காலக்கட்டத்தில் எழுதியிருக்கக் கூடும்.அவரும், என் ஆசான் ஐயா திரு.மாலன் அவர்களும் குமுதம் பத்திரிக்கையில் இரு வருட காலம் ஒன்றாக வேலைப்பார்த்திருக்கிறார்கள்.இந்த பிணைப்புகளெல்லாம் போக என்னையும் அவரையும் இணைக்கும் மற்றொரு புள்ளி-சுதந்திரமான எழுத்துநடை.பத்தி எழுத்துக்கு எந்த கட்டுப்பாடும் இல்லைதான்.இருந்தாலும் இவர் என் அலைவரிசை.அது எனக்கு அச்சாணியாய் பதிந்துவிட்டது.

சிறுவயதில் தான் பார்த்து வாழ்ந்த புதுவையை சிலாகிக்கிறார்.காதல் என்பது பல முறை முளைக்கும் என்பதனை என் வயது சக நண்பர்கள் பிரேமம் நிவினை பார்த்து புரிந்து கொள்கிறார்கள்.நான் பிரபஞ்சன் மூலம் புரிந்து, நிம்மதி அடைகிறேன்.இன்னொரு பெண்ணை காதலித்தால்-அது நடந்து முடிந்த/நடக்கமறந்த முந்தைய முதற் காதல்களுக்கு துரோகம் இழைப்பதாகாது என்ற அட்டக்கத்தி ஃபார்முலாதான் ரியாலிட்டி என்பதை இன்றைய தலைமுறைக்கு ஹாஸ்யமாய் சொல்கிறார்.பிரபஞ்சன் பல பெண்களை காதலித்திருக்கிறார்.இறுதியாக காதலித்தவரே தற்பொழுது அவர் மனைவி இராணி.

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்,அதை தடுக்கும் டைக்குகள், காந்தி சிலை,ரோமைன் ரோலந்து நூலகம் என்று என்னை புதுவையின் காதலனாக்குகிறார்.

பாரதி, அரவிந்தர், பாரதிதாசன், வ.சுப்பையாவை அறிமுகம் செய்து வைக்கிறார்.வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, தன் வாழ்வில் சந்தித்த பிறகு அனுபவங்கள் கொண்டு புரிய வைக்கிறார்; ஏட்டுக் கல்வி மட்டுமன்றி கலை-இலக்கியத்தை மாணவர்களிடையே புகுத்தினாலன்றி அவர்களை முழு மனிதனாக்க முடியாது என்ற கருத்தை உணர வைக்கிறார்.

ஆஷ்(சப்-கலெக்டர்,திருநெல்வேலி) யின் அராஜகத்தை, வ.உ.சி அழிப்பை கண்முன் நிறுத்துகிறார்.மணியாச்சி வாஞ்சியாய் உருமாறிய போராட்ட வரலாற்றை சொல்கிறார்.

வில்லியனூர் கண்ணுப்பிள்ளையும், நாகசாமியும் எவ்வாறு வாஞ்சிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தனர், மறைந்து மறைந்து பாகூருக்கு எவ்வாறு அழைத்து சென்றனர், எப்படி மணியேற்றினர்? புல்லரிக்கிறது.

இந்த வாஞ்சி சம்பவத்தை ஆராய்ச்சி செய்ய ஒருவர் லண்டன் செல்கிறார்.ஆஷின் வம்சாவளியினர் தேவையான தகவல்களை அளித்துவிட்டு, டோஸ்ட் சொல்லும்போது வாஞ்சி நினைவாகவும் டோஸ்ட் சொல்கிறது.அங்கு மனிதம் வெல்கிறது.

பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்திலிங்கம்.வைத்தீஸ்வரன் கோவிலில் வரம்பெற்று பிறந்தமையால் வைத்தியநாதன் என்று பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டவர், பிறப்பு சான்றிதழ் பதியும் அலுவலகத்திற்கு சென்ற தன் மாமனின் வாய்ப்பிழையால் வைத்திலிங்கம் ஆனார்.நான் புதுவை உழவர்கரை நகராட்சியின் ஏதோ ஒரு ஊழியரின் பிழையால் விக்னேஷ்வரிலிருந்து விக்னேஷ்வரன் ஆக்கப்பட்டேன்.அதனால் இன்றுவரை பாஸ்போர்ட் கிடைக்காமல் அலைந்து வந்துள்ளேன்.இதுவும் மற்றொமொரு கனெக்ஷன்.

அவரின் தங்கை பானு படுசுட்டி.மயிலிறகு குட்டி போடும் என்று புத்தகத்திலும் நோட்டு புத்தகத்திலும் வைத்து உறங்குகிறாள், கனவுகளோடு.அதிசயமாய் கனவுகள் பலிக்கின்றன.ஆம், பானுவின் குழந்தைமை சாகாதிருக்க அவர்களின் தந்தை-குட்டிகளை பிறப்பிக்கின்றார்.குழந்தைமை சாகவில்லை.குழந்தை அம்மையால் செத்து போகிறது,தன் தம்பியுடன்(பிரபஞ்சனுக்கு பிறகு பிறந்த இரு குழந்தைகள்).ஆனாலும் தன் வீட்டு முற்றத்தில் வளரும் முருங்கையின் மறுபிறவியை பார்த்து-உயிர்கள் அழிவதில்லை, அவை வெறும் மாற்றம் மட்டுமே அடைகின்றன என்ற பேருண்மையை உணர்ந்து, மனத்தில் இருத்திக் கொள்கிறார்.அந்த கரு “பிரும்மம்” என்கிற கதையாகிறது.இலக்கிய சிந்தனை பரிசு பெறுகிறார் அதற்காக.வருங்காலத்தில் சாகித்திய அகாதெமி விருதையும் பெறும் மாபெரும் எழுத்தாளராகிறார்.

ஒப்பற்ற துணிச்சலும், நேர்பட பேச்சும் கொண்டவர் பிரபஞ்சன்.உள்ளதை போட்டு பட்டென்று உடைத்து விடுவார்.உதாரணம் கேளுங்கள்.
குமுதம் குப்பை பத்திரிகை என்று அதில் வேலை செய்யும் பிரபஞ்சனே கூறுகிறார் என்ற தகவல் தவறாக பரப்பப்பட்டு குமுதம் ஆசிரியர் திரு.அண்ணாமலையை அடைகிறது.அந்த கருத்தை நான் சொல்லவில்லை-ஆனால் எனக்கும் அதே கருத்துதான் என்று சச்சின் பட காதல் பிரபோஸல் போல அன்றே ஆசிரியர் முன் தைரியமாக சொல்லியிருக்கிறார்.
காரணம் கேட்ட ஆசிரியரிடம் “ஆபாசம்” என்று பிரபஞ்சன் கூற,”நிர்வாணம் ஆபாசம் என்று நினைக்கிறீர்களா?” என்று ஆசிரியர் கேட்டிருக்கிறார்.

“நடிகை/பெண்களின் நிர்வாணமோ, அரை நிர்வாணமோ ஆபாசம் அல்ல.ஆனால் அவள் மேலும் தன் ஆடையை தூக்க மாட்டாளா? தூக்கினால் என்ன ஆகும் என்று வாசகன் மனதில் ஏக்கத்தை தூண்டி நஞ்சாக்குவதுதான் ஆபாசம்” என்று ஷாக் உண்மை கொடுத்திருக்கிறார்.அந்த தெளிவுதான் பிரபஞ்சன்.

பின்குறிப்பு : புதுவை பிறப்பு சான்றிதழை பெற்று விட்டேன். 🙂

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s