3.ஆரணி MGNREGA

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத(உறுதி) திட்டம் செயல்படுத்தப்படும் விதம்-களத்தில்(grassroot level)

பேச்சு வழக்கில் இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாகட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இன்றைய ஆட்சியாகட்டும் கட்சி சார்பற்று செயல்படுத்தும் உலகின் தலைசிறந்த திட்டங்களில் ஒன்று.திருவண்ணாமலையில் உள்ள 860 கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 574 பேர் விவசாயக் கூலிகள்(agricultural labourers).இது உழைப்பாளர் வர்க்கத்தில் 39.74 சதவிகிதம் ஆகும்.

365/66 நாட்களில் 100 நாட்கள் வேலை நிச்சயம் என்ற நிலையில் ஏழையின் வீட்டில் வருடம் முழுவதும் ஒரு வேலையாவது உலை பொங்கும் என்னும் உத்தரவாதத்தை அளிக்கும் அருமையான திட்டம்.இந்தியாவில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் விவசாயக் கூலிகள் வறுமையிலிருந்து தப்பிப்பதற்காக, கால் வயிற்று கஞ்சிக்காக உருவாக்கப்பட்ட திட்டம்.

இது களத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆரணிக்கு பஸ் பிடித்தேன் என்னைப் போன்ற பலரோடு.ஆரணியிலிருந்து 5 கி.மீ தொலைவில் கெங்காபுரம் என்னும் சிற்றூர்.ஏரி ஒன்றை வெட்டி தூர்வாரிக் கொண்டிருந்தனர் மக்கள்.MGNREGAவால் விவசாயக் கூலிகள் வராமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறும் வாதம் ஓரளவிற்குத்தான் உண்மை என்று புரிபடுகின்றது.பெரும்பாலான கூலிகள் இன்றும் விவசாயப் பணிகளை மேற்கொள்பவர்களாகவே இருக்கின்றனர்.இத்திட்டம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படும்.பெரும் லாபம் ஈட்டிவிட்டு விவசாயத்திற்கு செல்ல வேண்டாம் என்ற நிலையில் இவர்கள் யாரும் இல்லை. MGNREGAவிற்கு சென்று மாளிகையா வாங்கிவிட்டனர் மக்கள்? மண்வெட்டி, கடப்பாரை சுமந்து கொண்டு வாய்க்கால் வரப்பு தான் வெட்டி வருகின்றனர்.

இங்கு வேலை நடக்கும் இடத்தில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருந்தது நம் கண் முன்னே.அதிர்ச்சி என்னவென்றால் ஊழியத்திற்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படாமை.இங்கு வருகைப் பதிவேட்டின் படியே வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, அனைவருக்கும் வங்கியின் பாஸ்புக் கொடுக்கப்படுகின்றது.இதில் தான் ஊதியம் பட்டுவாடா செய்யப்படுகின்றது.நூறு நாட்கள் காலவரையில்(ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, கிராம சபைகளின் திட்டங்களுக்கு ஏற்ப) எவ்வளவு நாட்கள் இம்மக்கள் வேலைப்பார்த்திருக்கின்றார்கள் என்பது பதிவாகிவிடும்.அதற்கேற்ப பணம் வழங்கப்பட வேண்டும்.2014 பிப்ரவரி 13ம் தேதி ஊரக வளர்ச்சித் துறையின் கெசட் நோடிபிகேஷனின் படி ஒரு நாளைக்கு 167 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் இவர்களின் வருகை சதவீதத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியத்தில் 20 முதல் 30 சதவிகிதம் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.

கூலிவேலை செய்யும் ஏழை மக்களில் பலரும் கல்வியறிவு இல்லாதவர்கள்.கையெழுத்து வகையறாக்கள் இல்லை.கைநாட்டு இடுகின்றார்கள்.இதனால் இவர்களுக்கு வங்கி அதிகாரிகள் சரிவர பதிலளிக்க மறுக்கிறார்கள் என என்னிடம் புகார் கொடுத்தார் ஒரு மூதாட்டி, “அது என்னன்னு கொஞ்சம் கேட்டு சொல்லு தம்பி!” என்று கெஞ்சலாக,அதிகாரம் முழுவதும் என் கையில் இருப்பதாக அவர்கள் நம்பியபோது நெஞ்சு உறுத்தலாகவும், சிறிது நெகிழ்வு யாருக்கும் ஏற்படத்தான் செய்கின்றது.உழைத்து, களைத்து மதிய வேளை உணவிற்காக எல்லோரும் மரத்தடிகளில், புல்வெளியில் அமர்கின்றனர்.இவ்வளவு ஏய்ப்புகள் நடந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் நல்லது நடக்கும் என்று உன்னதமான ஒளி கண்களில் தெரிய,அந்த அன்றாடங்காய்ச்சி வாழ்விலும் அயராது உழைத்து ஏதோ ஒரு நிறைவை பெற்றுவிடுகின்றனர் மக்கள்.

இந்த மண்ணின் மைந்தர்களை ஏய்த்து தான், அப்பாவி மனிதர்களை ஏமாற்றித்தான் பணம் சம்பாதிப்பதா? யார் கைகளுக்கு இந்த பணம் செல்கின்றது? வங்கி அதிகாரிகள் கூட ஏன் மக்களிடம் ஓரவஞ்சனை காட்டுகின்றனர்? பணமுதலைகளின் பசிக்காக ஒன்றுமறியா மக்களின் வாழ்வாதாரம் வீணாவது சமூகத்தின் இழுக்கல்லவா? இங்கு மட்டும் தான் இந்த நிலையா? இல்லை பல்வேறு இடங்களிலும் பழகிவிட்ட ஒன்றா இது? பல கேள்விகள் எழுகின்றன.மேலும் ஆராய்வோம்.குரல் கொடுப்போம்.பதில்களையும், தீர்வுகளையும் நோக்கி பயணிப்போம்.

(நான் அங்கிருந்து நகர ஆரம்பித்த பொழுதே மண்வெட்டி, கடப்பாரை சத்தம் மீண்டும் கேட்க ஆரம்பித்து விட்டது)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s