4.தட தட ரயிலோசை கேட்குமா? விடை எப்பொழுது?

திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தின் நிலைதான் என்ன?

தமிழகத்தில் 679 ரயில் நிலையங்கள் தென்னக ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் இயங்கி வருகின்றன.அதில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நடந்து அடையும் பொழுது நீங்கள் வாயடைத்துத்தான் போவீர்கள்.
வெறிச்சோடிய சாலை-அதில் ஒரு பழமையான கட்டடம்.2 பிளாட்பாரங்கள் மட்டும்.இது தான் ஒரு மாவட்ட தலைநகரத்தின் முக்கிய ரயில் நிலையம் என்று சத்தியமாக நம்ப முடியாது.அவ்வப்போது தென்னகத்திலிருந்து மைசூர், மும்பை செல்லும் ‘பை-வீக்லி’ பாசஞ்சர், அதி விரைவு மட்டுமே நெடுந்தூர பயணத்திற்கான நம்பிக்கை.சரக்கு ரயில் போக்குவரத்து அவ்வப்போது இருக்கும்.24 லட்சத்து 68 ஆயிரத்து 965 மக்கட்தொகை(2011 சென்சஸ்) கொண்ட ஒரு மாவட்டத்திற்கு உருப்படியாக ஒரு ரயில் நிலையம் கூட இல்லை.

கோயம்புத்தூர்,ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமா? நீங்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்காரராக இருந்தால் வேலூர் மாவட்டம் காட்பாடி ஜங்ஷனை அடைந்தாக வேண்டும்.மதுரை,திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் என்றால் நீங்கள் விழுப்புரம் ஜங்ஷனை வந்தடைய வேண்டும்.அதிகரித்து வரும் மக்கட்தொகை, விழாக்கால கூட்டம்-இவற்றை சிறப்பு பேருந்துகளால் கூட சமாளிக்க முடியவில்லை.தீபாவளியா, பொங்கலா, திருக்கார்த்திகை தீபமா, சித்திரை பௌர்ணமியா, அமாவாசையா, மற்ற கிரிவல நாட்களா?
வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை வர விரும்பும் உள்ளூர்க்காரர்களின் கதி அதோகதிதான்.அதிலும் சென்னையிலிருந்து 5 நிமிடத்திற்கு 1 பேருந்து விடப்பட்டாலும், கோயம்பேடு cmbt கே சென்று பார்த்தாலும்-திருவண்ணாமலை பேருந்தில் உள்நுழைவது ஒரு சாதனை, இருக்கையில் அமர்வது பெருஞ்சாதனை, நின்று கொண்டு வருவது மகாசாதனை, படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வருவது உயிரை துச்சமாக எண்ணி மக்கள் செய்யும் சாதனை.

இத்தனை சாதனைகளுக்கும் அடிப்படை காரணம் திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து நேரடி ரயில் போக்குவரத்து அறவே இல்லை.பெண்களின் நிலைமையே வேறு. அவர்கள் ஊருக்கு வரும் யோசனையையே கைவிட்டு விடுவார்கள்.ஆண்கள் பாடு “ஃபுட்போர்டு”.இது திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீண்டகால கனவு, நிறைவேற்றப்படாத கோரிக்கை.ஆட்சிகள் மாறினாலும் நீடித்து வரும் பிரச்னை.உள்ளாட்சி தேர்தலிலிருந்து சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் வரை திருவண்ணாமலை மாவட்ட அரசியல் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கையில் தவறாது இடம் பெறும் அம்சம்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருவண்ணாமலை ரயில் நிலையம் மேம்படுத்தப்படும்.சென்னைக்கு நேரடி ரயில் போக்குவரத்து துவங்கப்படும்” என்பது.ஆனால் அரசியல் பேதங்கள் இல்லாமல், அனைத்துக் கட்சிக்காரர்களும் கட்சி சார்பற்று ஒற்றுமையாக நிறைவேற்றும் சபதம் “தேர்தல் முடிந்ததா? காற்றில் விடு கோரிக்கையை!”

மீட்டர் கேஜ் பாதையிலிருந்து, அகல ரயில் பாதையாக மாற்றப்படும் என்ற அறிவிப்புடன் அன்றொரு நாள், தி.மலை மக்களே மறந்துவிட்ட நாள் இந்த ரயில் நிலைய தடம் மூடப்பட்டது.கட்டடத்தின் வெளியே எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் “திருவண்ணாமலையில்” மூன்று சுழி ணகரம் பழைய ணகரமாகும்.

“ண”கரமே 20ம் நூற்றாண்டோடு வளைந்து நின்று விட்டது.இதில் நகரமாவது கால் போட்டு 21ம் நூற்றாண்டில் கம்பீரமாக உட்காருவதாவது?
அதிகாரிகளின் மந்த மெத்தனங்களுக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த மூன்றுச்சுழி பழைய “ண”கரம்.

24.6 லட்ச மக்கள் வாழ்கிறார்கள்,50 லட்ச மக்கள் வருடாவருடம் வருகை புரிகின்றார்கள்.இருப்பினும் கண்டுகொள்ளப்படாத நிலை.இவர்கள் தமிழக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் எண்ணிக்கை.வாய்ப்பேச்சை விட்டுவிட்டு, கண்துடைப்பு போக்குவரத்தை பிரதானப்படுத்தாமல் Gauge conversion முடிந்த நிலையில், இந்நிலையம் அதிவிரைவு பயணிகள் ரயில்களுக்கான முக்கிய தடமாக மாற்றப்பட வேண்டும்.குறிப்பிட்ட நேர அளவையில் (frequency)இங்கு மக்கள் போக்குவரத்திற்காக ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

பயணிகள் காத்திருக்கும் கட்டடம், ஸ்டேஷன் அதிகாரி அலுவலகம், நடைமேடைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.முற்றிலும் சிதிலமடைந்த பகுதிகளை அறவே களைந்துவிட்டு புதிய பகுதிகள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.அதிக பிளாட்ஃபார்ம்கள் ரயில்களின் வருகைக்கேற்ப அமைத்திடல் வேண்டும்.

இத்தனை “வேண்டும்”களும் அடிப்படை தேவைகளே.இது முற்றிலும் கடல் சம்பந்தப்படாத, நிலங்களால் சூழப்பட்ட (land locked)மாவட்டம்.இங்கு துறைமுகம் சாத்தியப்படாத ஒரு வணிக வசதி.இவர்கள் விமான நிலையம் ஒன்றும் கேட்கவில்லை.இருக்கின்ற ரயில் நிலையத்தில் தேவைப்படும் சேவைகளை மட்டுமே கேட்டுக்கேட்டு நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.இந்த ரயில் நிலையம் சரிவர இயங்க ஆரம்பித்தால் கூட்ட நெரிசல் குறையும்,பேருந்து கார் செலவினங்களை விட 60% கட்டணம் குறையும்.வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வளம் பெருகும்.இப்பொழுதாவது கவனிப்பீர்களா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s