5.ஏன் இந்த கடைக்கண் பார்வை?

திருவண்ணாமலையைப் பற்றி என்ன அறிவீர்கள்? வருடத்தில் இரண்டு மூன்று முறை ஆன்மிகத்துக்காக உங்களுக்கு நினைவுக்கு வரும் ஊர்.ஆனால் இங்கு வாழும் மக்களின் பார்வைகளும் விருப்பங்களும் என்ன? காண்போம்.

ஒன்றரை லட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி.திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை,தேனிமலை என இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம்.42 தொழிற் சங்கங்கள்,250 தொழிற்சாலைகள்,7476 சிறுதொழில் நிறுவனங்கள்,153.36 கோடி மதிப்புள்ள உணவு மற்றும் உணவு சார் உற்பத்தி,70.82 கோடி மதிப்புள்ள உணவுசாரா பணப்பயிர் உற்பத்தி(cash crops) என ஆண்டுக்கணக்கு. ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 725 டன் கனிமவளம் உள்ள மாவட்டம்.

இருந்தும் நிலை என்ன?குங்குமப்பூ அருந்தி, பெறப்போகும் குழந்தையை கற்பனையிலேயே கொஞ்சும் தாய்க்கு, குழந்தை குறைப்பிரசவமாய் பிறந்தால் என்ன துயரம் ஏற்படுமோ அதுதான் இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலை.

தமிழகத்தின் தொழில் வரைபடத்தில் சிறு புள்ளியாய் கூட இடம்பெறாத உண்மை.ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை ஆலையான செய்யார் ஆலையும், ஆரணி பட்டுத்தொழிலும் கூட நலிவை சந்தித்து வருகின்றன.இது மாவட்ட தொழிற் ஆய்வாளரின் புள்ளிவிவரப்படி.அரசின் இணையதளத்தில் துழாவிப் பார்த்தால் தி.மலை மாவட்டத்திற்கு எனத் தனியாக தரக்கட்டுப்பாட்டு முறை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, வர்த்தக தகவல்களின் நிலையறிக்கை எதுவும் இல்லை. மரபு சாரா சக்தி உற்பத்தியும் கிடையாது.

அன்றைய தொண்டை மண்டலத்தின் விளிம்புப்பகுதியாக வரலாற்றில் பதியப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் வேலூருடன் இணைந்து வட ஆற்காடு மாவட்டமாக செப்டம்பர் 30,1989 வரை இருந்த இந்த மாவட்டம் இன்று தனி போக்குவரத்து கோட்டமோ, எந்தவொரு செய்தித்தாளின் தனிவெளியீடும் பெறாமலும், வானிலை அறிக்கையில் நாளை மழைக் காரணமாக விடுமுறை என்று அறிவிக்கப்படும் மாவட்டங்களில் ஒன்றாகக்கூட இராது.கூறினால் கடைசியாக கூறப்படும்.ஒரு மதுரையையோ, கோயம்புத்தூரையோ, திருப்பூரையோ தொழில் ரீதியாக திருவண்ணாமலையோடு ஒப்பிட முடியுமா? அறநிலையின் உச்சம் தொழில்துறையிலும் வேண்டும்.

இங்கு ஒரு தொழிற்புரட்சி மாவட்டத்திற்கு வரமாக அமைய மேற்கொள்ளப்பட வேண்டும்.கல்வியில் மாநிலத்திலேயே கடைசி இடம், தொழில்களில் பிற மாவட்டங்களோடு போட்டியிட முடியாத நிலை, சுகாதாரம் வேலைவாய்ப்பில் பின்தங்கிய இடம் என்னும் நிலைகள் மாறி தமிழகத்தின் முக்கிய நகரம் ஆக வேண்டிய தருணம் வந்துவிட்டது.
பக்தர்கள் வரவால் இங்குள்ள 415 பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வேண்டுமானால் இலாபம் வரலாம்.ஆனால் கலை, மருத்துவக் கல்லூரிகள் இருந்தும்கூட நாம் பின்தங்கியிருப்பது குற்றமே.ஊடகங்களில் புதிய தலைமுறை போன்ற பத்திரிகைகள் மட்டும்தான் இங்குள்ள மலைவாழ் இளைஞர்களின் உயிரினைப் பறிக்கும் செம்மர வேட்டை பற்றி பதிவு செய்துள்ளன.

வன்முறைதான் வீரத்தின் அடையாளம் என்றால் அது இங்குள்ள மக்களுக்கு குறைவுதான்.ஆனால் விஜயநகர மன்னர்கள் நிர்மாணித்த கோவிலும், மலையமானின் அரசாட்சியும் வீரச் சின்னங்களாய் உள்ள திருவண்ணாமலை இன்றைய மக்களாட்சியில் வெகுஜன ஊடகங்களால் அடையாளம் மறுக்கப்பட்டு வரும் ஊர்களில் ஒன்று.

இதெல்லாம் ஒரு ஆதங்கமா? என்ற கேள்வி எழும்பொழுது-பிற ஊர்களை நாடியே பிழைத்துப் பழகிவிட்டும், புறக்கணிக்கப்பட்ட மனோபாவம் மாவட்டத்து மக்களிடையே இழையோடிக் கொண்டிருக்கிறது.நடுநாட்டு தனித்தமிழ் அகராதி என்று ஆராய்ச்சி புத்தகம் வெளிவரவில்லையென்றால் தெக்கத்தி தமிழ் மட்டும் தமிழ், இது தமிழ் அல்ல என்று கூட சொல்லப்படலாம்.ஆச்சரியமில்லை.

இத்தகைய சூழலை களைய ஒரு சமூக குரல் தேவை, அரசியலைத் தாண்டி.புரிதலுடன், இந்த குரலை தங்கள் தேடலின் விடிவாக உணர்ந்து, மக்கள் நம் பத்திரிக்கை நண்பர்களின் துணையுடன் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.தொழில்முனைவோராக, சமூக பொருளாதார முன்னோடிகளாக ஜொலிப்போம்(socio economic pioneers&entrepreneurs).

நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று அருணையைக் கூறுவார்கள்.இன்று அது மட்டும் போதாது.வாழும் மக்களின் உயர்வுக்கு வழிவகுப்போம்.அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிடுவோம்.அவர்கள் முகங்களுக்கு வெளிச்சம் கொடுத்து, ஆரோக்கிய போட்டியினை அரவணைப்போம்.அது தான் முக்கியம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s