கைவிடப்பட்ட திருவண்ணாமலை தியேட்டருங்க

சென்னை பேருந்திலிருந்து திருவண்ணாமலை பெரியார் சிலை நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு வழக்கம்போல ஆட்டோ பிடித்தேன்.

ஆட்டோ பைபாஸ் சாலை வழியே சென்றது.பெரிய தண்ணீர் டேங்க்கை தாண்டியதும் இடதுபுறம் கம்பீரமான VBC தியேட்டர் கட்டடம்.படையப்பா,வானத்தைப்போல,சந்திரமுகி போன்ற ப்ளாக்பஸ்டர்கள் ஓடிய கிளாஸ் திரையரங்கு.நானும் என் குடும்பமும் வசூல்ராஜா எம்பிபிஎஸ்,பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களை ரசித்து பார்த்தது இங்குதான்.

கூடவே அந்த மல்டிபிளெக்ஸ் வராத காலத்திலேயே VNC என்றொரு குட்டி உப தியேட்டரும் உண்டு.மஞ்ச காட்டு மைனா பாட்டை பார்த்து அடம் பிடித்து என் தங்கை என் சித்தப்பாவை நச்சரித்து VNCக்கு போய் படம் மொக்கை என புரிய தொடங்கியவுடன் சித்தாவும் பாப்பாவும் தியேட்டரைவிட்டு இடைவேளையின் போதே எஸ் ஆன ஜாலி கதைகளும் உண்டு.

நடுவில் தியேட்டருக்கு மவுசு போய்விட்டது.காட்டு மொக்கை படங்கள் திரையிட ஆரம்பித்தார்கள்.இல்லையென்றால் மற்ற பிரதான தியேட்டர்கள் கல்லா கட்டிய பின்பு போனால் போகிறதென்று டாப் படங்களை இரு வாரங்களுக்கு பிறகு தருவார்கள்.இடையில் ஏதேரு பி கிரேடு பட போஸ்டர்கூட பார்த்த ஞாபகம்.விபிசி பக்கமே பல நாட்கள் தலை திரும்பியதில்லை வண்டியில் செல்லும்போது கூட.
இந்த ஆட்டோவில் செல்லும் போது தான் அதர்வாவின் ஹிட் படமான ஈட்டி வாங்கப்பட்டு திரையிடப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு மனசு சற்று நிம்மதி அடைந்தது.விஎன்சி யில் தலயின் பிளாக்பஸ்டர் வேதாளம்.நிம்மதி பெருமூச்சு.ஆனாலும் பிசினஸ் lag தான்.பழைய கெத்து திரும்புமா?

அடுத்து மீனாட்சி தியேட்டர்.பல வருஷமாக இழுத்து மூடப்பட்டு மறக்கப்பட்ட திருவண்ணாமலையின் பிரதான தியேட்டர்.1000 பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் படம் பார்க்கும் வசதி கொண்ட பிரம்மாண்ட திரையரங்கு.தமிழகத்தின் பத்து பெரிய திரையரங்குகளில் நிச்சயம் இதுவும் இடம்பெறும்.அவ்வளவு பெரிய ஸ்கிரீன்.சிறு வயதில் அம்மா,சகோதரிகளுடன் நடிகர் கார்த்திக்கின் ரோஜாவனம்,உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடி ட்ரீட்களை ரசித்திருக்கிறேன்.இடைவேளையில் குட்டி மசால் வடை விற்கும் ஆயா தியேட்டர் முழுக்க நடந்தே வியாபாரம் பண்ணும்.இன்றோ அது டஞ்சன் குடோன்.உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாது.அந்த இடம் தியேட்டர் உரிமையாளரிடம் தான் உள்ளதா என்றே தெரியவில்லை.பாம்பு பூச்சி போட்டு கிடக்கிறது.அருணை நகரின் பாழ்படுத்தப்பட்ட சினிமா பாரம்பரியம்.

அடுத்து புகழ் தியேட்டர்.இன்றும் அந்த தெருவை நாங்கள் புகழ் தியேட்டர் down(சருவல்) என்றுதான் நண்பர்களிடையே உரையாடி கொள்வோம்.பல சூப்பர் படங்களான 1999 ஷங்கரின் முதல்வன்,அஜித்தின் சிட்டிசன் போல நிறைய படங்கள்.அம்மா கையை பிடித்துக்கொண்டு தியேட்டர் சென்று ரசித்திருக்கிறேன்.இன்றோ கேட்பாரற்று பூட்டி கிடக்கிறது.அதே தியேட்டரில்தான் நண்பர்களோடு அமீரின் கிளாசிக்கான பருத்திவீரனை கிளைமேக்ஸ் தவிர எல்லா காட்சிகளையும் பிடித்து ரசித்து பார்த்தோம்.இன்று அதுவும் இன்னொரு பாழடைந்த கட்டடம்.

அன்பு தியேட்டர் இன்றும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,சீயான் விக்ரமின் தூள்(ஏ சிங்கம் போலே நடந்து வாரான் செல்ல பேராண்டி),ஹரி காம்போவில் சாமி(அல்டிமேட் கமர்ஷியல்) என ரசித்திருக்கிறோம்.ஆனால் இன்றோ அங்கு அவ்வளவு வருவாய் இல்லை.அன்பு தியேட்டர் பட காட்சிகளின் சவுண்டு அருகிலுள்ள நகராட்சி கேர்ள்ஸ் ஸ்கூலின் வகுப்பறைகளில் ஃபிரேம் பை ஃபிரேம் எதிரொலிக்கும்.

இப்பொழுது ஓரளவு நல்ல வருவாயுடன் இயங்குவது அருணாசலா சினிமாஸ்(2 நவீன டால்பி ஸ்கிரீன்கள்,புஷ்பேக் ஸீட்,ஆன்லைன் புக்கிங்,முக்கிய படங்கள் விநியோகம்–அண்ணாமலை ஸ்கிரீன்,அருணாச்சலா ஸ்கிரீன்),சக்தி தியேட்டர் மற்றும் பாலசுப்ரமணியர் சினிமாஸ்(3 திரையரங்குகள்–பாலசுப்ரமணியர் பெரிய தியேட்டர்,குட்டி டீலக்ஸ் தியேட்டர் ஏசி டிடிஎஸ் மற்றும் பாரடைஸ் ஏசி,புஷ்பேக்,டால்பி டிஜிட்டல் சவுண்டு) ஆகியவைதான்.

பார்ப்போம் காலச்சக்கரம் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரும் என்று.

Advertisements

நீர்ஜா

image

சோனம் கபூர் எவ்வளவு அழகு நமக்கு தெரியும்.
அவர் எவ்வளவு அருமையாக கதை தேர்வு செய்கிறார் என்பதை நீர்ஜா டிரெயிலர் மூலம் உணர முடிகிறது.

1986ல் பான் அமெரிக்கன் விமானத்தில் 336 பயணிகள் (பாகிஸ்தான் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் பயணிக்கும்) இருந்தார்கள்.இதனை கடத்தல் செய்த தீவிரவாதிகள் கையிலிருந்து அத்தனை பேரையும் ஒரு 23 வயது இந்திய விமான பணிப்பெண்,தன் உயிரை தியாகம் செய்து மீட்கிறாள் இதுவே கதை.

image

எக்ஸ்பிரஷன் க்வீன் சோனம்.லவ்ஸ்..

சஷி தரூரின் ட்வீட் இந்த டிரெயிலருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
வீ ஆர் வெயிட்டிங் லாம் வேண்டாம்.நாஞ்சில் சம்பத் ஸ்டைலயே காத்திருக்கிறோம்.

image

திருவண்ணாமலை கிளைமேட்

ஏற்கனவே மலை காரணமா எங்க ஊரு குளு குளு ஜிலு ஜிலுனு இருக்கும்.இப்போ மழை காரணமா இன்னும் கூலா ஆகிடுச்சு.செம்ம ரிலாக்ஸ்டு கிளைமேட்.

செட் ஆக ஒரு நாள் ஆச்சு.ஆனா இப்போ செம்மயா இருக்கு.என் நண்பன் கணேஷ் இரண்டு வருஷமா காலேஜ்ல செர்டிபிகேட் வாங்காம இருக்றேன் டா..வா போகலாம்னு கூப்டான்.
வண்டி எடுத்துட்டு சும்மா ஜம்முனு அப்டே ரவுண்டு அடிச்சுட்டு இருக்கேன்.மணலூர்பேட்டை ரோட்ல இருக்கற ஷண்முகா காலேஜ் வாசல்ல நின்னுட்டு இருக்றேன்.என்னாமா காத்து வீசுது!! சொர்க்கம் யா..

இந்த மலை அடிவாரங்கள்.சுத்தி இருக்கற ஊருங்க.சுத்தமான காத்து.இனிப்பான தென்பெண்ணையாத்து தண்ணி.இதுதாங்க நானு.இதுதான் எங்க ஊரு.எங்ககிட்ட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைகள் நிறைஞ்சு இருக்கு.என் சொந்த கிராமமான பவித்திரம் பேருக்கு ஏத்தது போலவே பவித்திரமான ஊரு.
அங்க இருக்ற ஏரில நான் சின்ன பையனா இருக்ற அப்போ கோடி(வெள்ளம்) போச்சாம்.மறுபடி இப்பதான் கோடி போகுது.எல்லா நீர்நிலைகளும் நிரம்பி கெடக்குதுங்க.சில்லுனு ஒரு குளிர்ச்சி.இதை தாண்டி வேற எதுவும் பெருசா தேவையில்லை.ஆனா பொழப்பு..இந்த மனுஷ பொழைப்புதான் இந்த அமைதியை விட்டுட்டு வேற ஏதோ ஏதோ ஊர்களுக்கு நம்மளை தேடி போகச்சொல்லுது.

அந்த தேவைகள் சில சமயம் வாழ்க்கையாவும் மாறிடுது.ஆனா எதார்த்தம் எதுனு நமக்கு தானே தெரியுது.வந்து இரண்டு நாளாகுது.சென்னை வெள்ள நிவாரணம்,நண்பர்கள் பாதுகாப்பு இது பத்தியே யோசிச்சிட்டு இருக்றதால வேற எதுவும் நினைப்புல இல்லை.அருணாசலேஷ்வரர் கோவிலுக்கு போகணும்,நண்பர்களோட கிரிவல பாதைல பைக்ல சுத்திட்டு கெடக்கணும்,சாய் பாபாவை போய் பாத்துட்டு வரணும்.முடிஞ்சா லோக்கல் தியேட்டர்ல ஒரு படத்தை பாக்கணும்.
இதுதாங்க ஊரு.

சிவாஜி ராவ் டு சிவாஜி

இப்பொழுது மழைக்கு ரஜினி 10 லட்சம் மட்டுமே கொடுத்தார்.
படத்தில் தான் அவர் வள்ளல்.நிஜத்தில் இல்லை என்று பலர் வாட்ஸ்ஏப்பில் பரப்பி தூற்றி வருகிறார்கள்.ராகவேந்திரா கல்யாண மண்டபம் இப்பொழுதும் ஏழைகளுக்காக திறந்தே இருக்கிறது.அங்கு அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது என்பதை இவர்கள் வெளியில் சொல்வதில்லை.

இன்னொரு புறம் கமல் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார்.நான் நேர்மையாக உழைத்து சம்பாரித்து கட்டிய வரிப்பணமும்,மக்களின் வரிப்பணமும் என்னவாயிற்று என்பதுதான் அந்த நியாயமான கேள்வி.உண்மை சுடத்தானே செய்யும்.எதிர் தரப்பு அவரை தணலாய் சுட்டெரித்திருக்கிறது.
நடிகர்கள் நிதி தந்து பேரிடரை சமாளிக்கும் நிலையில் தான் நாடுள்ளது என்பதே ஒரு இழுக்கு.இதில் அவர்கள் இவ்வளவுதான் கொடுத்தார்கள் என்று புகார் வேறு.

அதை விடுங்கள்.சிவாஜி திரைப்படம் 2007 வெளிவந்தது.அதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே விகடன் ரஜினியின் வாழ்க்கையை சிவாஜி ராவ் முதல் சிவாஜி வரை என்ற தொடராக வெற்றிகரமாக வெளியிட்டு வந்தது.ரஜினியின் மென்மையான பக்கங்களை,பல இளைஞர்களுக்கான போராட்ட படிப்பினையாக அவரது இள வயது காயங்களும் அதை மீண்டு அவர் பெற்ற வெற்றிகளையும் பதிவு செய்த தொடர்.அதை ஒரு தொகுப்பாக புத்தக வடிவில் வெளியிட்டது விகடன்.அதன் பிடிஎப் வடிவத்தை வாசித்தேன்.

பெண்களை ஃபாலோ செய்து வம்பிழுக்கும் முரட்டு முரடன் சிவாஜி ராவை பெங்களூர் அனுமந்த் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நாள் முழுக்க உட்கார வைத்திருந்தார்கள்.அதிலிருந்து அவரது அப்பா,அவரது அண்ணன் அவரை ஒதுக்கினார்கள்.பேசுவதே இல்லை.விரக்தி அடைந்த சிவாஜிராவ் தற்கொலை செய்ய நாள் குறித்துவிட்டு தன் நண்பரான ஒரு ஓவியரை காண மலைப்பாறைகள் நிரம்பிய பிரதேசத்திற்கு சென்றார்.

தன்னை யாரும் புரிந்துகொள்வதில்லை என்ற மனக்குறை அவருக்கு.அந்த ஓவியர் பாறைகளில் பல அருமையான ஓவியங்களை பாறைகள் மீது வரைந்துக்கொண்டிருந்தார்.அவர் ஒரு ராமர் ஓவியம் வரைந்து முடித்துவிட்டு சிவாஜி ராவிடம் பேசுவதாக சொன்னார்.அதனால் சிவாஜி ராவ் மற்ற ஓவியங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க-அவர் கண்ணில் ஒரு ஓவியம் தென்பட்டது.ஒரு வெண்தாடி உடைய பெரியவரின் ஓவியம்.கண்களை பார்த்தார்.தற்கொலை எண்ணம் பறந்தது.மனதில் ஒரு தெம்பு நுழைந்தது.யார் இந்த பெரியவர் என்று ஓவியரிடம் விசாரிக்க அவர் “அசடு! ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் அவர்.மந்த்ராலயத்தில் வாழும் மனித தெய்வம்” என்றார்.அதிலிருந்து சிவாஜிராவுக்கு வாழ்வின்மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டது.

எந்த வேலை செய்தாலும் அதை முழுமையாக செய்வது என்ற முடிவு எடுத்தார் சிவாஜிராவ் கேக்வாட் என்ற மராத்திய கன்னடிகர்.மூட்டை தூக்கினார்.அடுத்து கொஞ்ச நாள் கழித்து கர்நாடகா போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் வேலை கிடைக்க அதை ரசித்து செய்தார்.சீட்டு கிழித்து கொடுப்பது ஒரு ஸ்டைல்,சில்லறை எடுத்து கொடுப்பது ஒரு ஸ்டைல்,வித்தியாசமாக ஸ்டாப்பிங் பெயர் சொல்வது ஒரு ஸ்டைல் என்று ஏழையாக இருந்த காலத்திலிருந்தே ஸ்டைல் அவரோடே ஒட்டிக்கொண்டு வந்தது.அனுமந்த் நகர் முதல் பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன் வரை அந்த பஸ் 10ஏ சென்றது.

அவரது ஸ்டைலை பார்க்கவே பெண்கள் கூட்டம் அலைமோதும்.ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் சும்மா உள்ளே உட்கார்ந்து கொண்டு இருக்க மாட்டார்.படிக்கட்டில் இறங்கி இறங்கி பற்றவைத்தது போல ஏறுவார்.மாலை ஆறு மணி வரை இந்த வேலை.நடிகர் திலகம் சிவாஜி மீது கொண்ட ஆசையால் நாடகம் மீது தற்செயலாக ஈர்ப்பு வந்தது.சிவாஜிராவ் கண்டக்டராக வேலை செய்த பஸ்ஸின் டிரைவர் ராஜ்பகதூர் அவரது உயிர் நண்பர்.

இருவரும் நாடகம் போட மாலை அழைக்கப்படுவார்கள் போக்குவரத்து கழகத்தால்.சிவாஜிராவ் வாழ்வில் போட்ட முதல் வேஷம் துரியோதனன்.கைதட்டல் அதிர்வதை கேட்க கேட்க நடிப்பு போதை ஏறியது.தனக்கும் போஸ்டர் ஒட்டமாட்டார்களா?கட் அவுட் வைக்கமாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு வேலையை விட்டுவிட்டு சென்னை திரைப்பட சேம்பர் கல்லூரியில் சேர்ந்தார்.அவரது அண்ணா சத்யநாராயண ராவ் அனுப்பிய காசு சாப்பிட பத்தாது.அதனால் அதை வைத்து பாக்கெட் பாக்கெட்டாக பிரிஸ்டல் சிகரட் வாங்கி வைத்துக்கொள்வார்.வாரத்தில் ஐந்து வேளை(ஒரு நாளைக்கு ஒரு வேளை) மட்டும் நண்பன் ராஜ்பகதூர் அனுப்பிய காசில் சாப்பிடுவார்.அதில் பாதி சாப்பாட்டை திரைப்பட கல்லூரியில் தன்னோடு படிக்கும் விட்டல் என்ற நண்பருக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவார்.

நாளில் மற்ற இரண்டு வேளை? இருக்கிறதே சிகரட் பேக்கெட்.காய்ந்த தன் வயிறை தடவிக்கொண்டே சிகரட் புகையை வளையம் வளையமாக விட்டுவிட்டு நடிப்பு பயிற்சிக்கு எழுந்து சென்றுவிடுவார்.அபூர்வ ராகங்கள் வந்த பின்புதான் ஒரு வேளை சோறு மூன்றை தொட்டது.
அந்த வெறிதான் இன்றுவரை இல்லாதவரை கண்டால் உருகிவிடுவார் ரஜினி.
பல்லாயிரம் இலவச திருமணங்கள்,மருத்துவ உதவிகள்,திருப்பணிகள்,அன்னதானம் என்று போற்றுவார் போற்றட்டும் தூற்றட்டும் என்று இன்றுவரை அவர் போக்கில் வாழ்ந்துவர 600 கோடி சொத்திருக்கிற ரஜினி என்ன செஞ்சான்? என்று வாய்க்கு வந்தபடி ஏசுகிறார்கள்.
ரஜினி உழைச்சார்.சம்பாதிச்சார்.வரியும் கட்டுனார்.நல்லதும் பண்ணுனார்.உனக்கு என்டர்டெயிண்ட்மெண்டும் கொடுத்தார்.நீ கட்டுன வரி எங்க போச்சு? அத கேட்க உனக்கு திராணி இல்லாம போச்சே தமிழா!!

சென்னை பேய் மழை

இது எப்போ துவங்குச்சி..இல்ல முடிஞ்சு போயிடுச்சா? தெரில..
கடந்த சில நாட்களாகவே அதிக மழை.வரலாறு காணாத மழை.99 வருடங்களில் பெரிய மழை.பெயர் தெரியாத ஏரிகளையெல்லாம் உடைப்பெடுத்து ஓட வச்சு நமக்கு அறிமுகம் செஞ்சு வச்ச மழை.

சென்ட்ரல்.மீனம்பாக்கம்.கோயம்பேடு.எழும்பூர். எல்லாத்தையும் செயலிழக்க செஞ்ச மழை.மனிதர்களை சாகடிச்ச மழை.
மனிதத்தை மீட்டெடுத்த மழை.
அரசியலை அடையாளம் காட்டுன மழை.

வேளச்சேரி.முடிச்சூர்.தரமணி.மாம்பலம்.பில்லர்.ஓஎம்ஆர்.அடையார்.வடசென்னை.எதையும் விட்டுவைக்கலை.

அமைச்சர்கள் விழிபிதுங்கி நிற்க இளைஞர்கள் விழித்துக்கொண்ட மழை.கடலூரையும் காவு வாங்கிய மழை.டிஆர்பி வெறியர்களை வெறுக்கவைத்த மழை. முகநூலை அன்பின் பூங்காவாக மாற்றிய மழை.
4 மணிநேர பயணங்களை நாள் முழுக்க நீளச்செய்த மழை.
பொறுப்பற்ற நகரமயமாதலை நாரடித்த மழை.

இதில் கற்றது என்ன.உங்களுக்கு தெரியாததல்ல நான் சொல்றது.