பொன்னியின் செல்வன் சீரிஸ்

டிவியில் சீரியல் போட்டால் பார்க்கும் சனம்.ஆங்கில,கொரியன் தொடர்களை ரசிக்கும் சனம்.படங்களில் தொடர் படங்களையும் விடாமல் தேடி ரசிக்கும் சனம்(தூம் சீரிஸ்,ஆஷிக்கி சீரிஸ்,சிங்கம்,எந்திரன்).
என் பொன்னியின் செல்வன் தொடர்பான அலசல் தொடர் வலைப்பூக்களையும் முகரும் என நம்பி தொடங்கி தொடர்கிறேன்.

ஏன் இதை ஒரு ப்ளாக் பதிவாக எழுத முடியாது என்பது தமிழ் நாட்டவருக்கு நன்றாகவே தெரியும்.கல்கி மூன்றரை வருட காலம் வாராவாரம் எழுதி,வெளியிட்ட அற்புத தொடர் இது.பின் நூலாக வெளிவந்தும் சக்கைப்போடு போட்டது.நான் இதை முழுமையாக வாசித்து,இரசிப்பதற்கே 13 மாதங்களுக்கும் அதிகமான கால அவகாசம் தேவைப்பட்டது.அத்தகைய பிரம்மாண்டத்தைப் பற்றிய அலசலும் பிரம்மாண்டமாகத்தான் இருக்க முடியும்,இருக்க வேண்டும்.அதற்காக வேண்டியே இந்த அணில் முயற்சி.

மனிதனால் எழுதப்பட்ட மொழிகளிலேயே தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் தலையாயதே.அதில் வெற்றிக்கண்ட பல எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி.எதற்காக இவ்வளவு இழுவை என்றால் தமிழ் அவ்வளவு நெடிதுயர்ந்த மொழி.அதன் ஆழங்களை,அர்த்தங்களை,வெற்றிகளை-எவ்வளவு முயன்றாலும் சுருக்கி,அடக்கி ஆளமுடியாது.ஆகவே இந்த ஜஸ்டிஃபிகேஷன்.

அப்பேற்பட்ட கல்கியின் படைப்புகளான பொய்மான் கரடு,சேரமான் காதலி,சிவகாமியின் சபதம்,பொன்னியின் செல்வன் போன்ற புதினங்கள் தமிழ் மக்களின் வாழ்வியலோடு அவ்வளவு பின்னிப் பிணைந்தவை.ராஜா கதைகளையும் பாமர பார்வை கொண்டே எழுதி,புரியவைத்தவர் அவர்.நாமெல்லாம் எத்தனாம் தலைமுறை தமிழர்கள்? முரட்டு தூய தமிழை உபயோகிக்காமல்,காலத்திற்கேற்றார்போல் புரிகிற கான்செப்டை எழுதுபவர் கல்கி.

பொன்னியின் செல்வன் என்ற அருள்மொழிவர்மன் என்கிற இராஜஇராஜன் என்கிற சோழ பரம்பரை மன்னனின் கதையையே அவர் வாண ராஜா பரம்பரையாக இருந்தாலும்,பாமர பார்வை கொண்ட ஹீரோ வல்லவரையன் வந்தியத்தேவன் வழியாகவே நமக்கு சொல்கிறார்.கதையின் உச்சம் அருள்மொழியாக இருந்தாலும்,கதையை மொத்தமாக தாங்கிப் பிடிக்கும் தூண் என்னவோ-அது வந்தியத்தேவன் தான்.
அவனிலிருந்தே சீரிஸை ஆரம்பிப்போம்.அதற்கு முன் சோழ பரம்பரை பற்றிய ஒரு இண்ட்ரோ.

1.புறாவுக்கு எடைக்கு எடை தன் சதை கொடுத்து நீதி வழங்கிய சிபி.இவர் வழி வந்ததாலேயே சோழ மன்னர்கள் செம்பியன் என்றழைக்கப்படுகிறார்கள்.

2.கன்றை இழந்த பசுவிற்கு நீதி வழங்குவதற்காக சொந்த மகனையே பலியிட்டு நீதி வழங்கிய மனுநீதி சோழன்.

3.காவரியையும் கொள்ளிடத்தையும் ஒருபுள்ளியில் காலமெல்லாம் கல்லைக்கொண்டு அடக்கி,கங்கை வரை வெற்றிக்கொண்ட கரிகால் பெருவளத்தான்.

4.அவன்பின்னர் இராஜகேசரி,கோப்பரகேசரி என மாறி மாறி பட்டப்பெயர் பெற்று கோலோச்சிய மன்னர்கள் இருந்தாலும்

ஒரு கட்டத்தில்  சோழநாடு தஞ்சாவூரையும் பழையாறையையும் அதை சுற்றியுள்ள சில கிராமங்களாகவும் நில அளவில் சுருங்கி போயிற்று.

5.ஆனால் மனதளவில் சுருங்காத,அதன்பின் வந்த விஜயாலய சோழன் சோழநாடு மொத்தத்தையும் மீட்டு இராஜாவாக மீண்டும் முடிசூடினான்.

6.அதன்பின் ஆதித்தன்.நில அளவையும்,சோழ நாட்டின் எல்லைகளையும் பல போர்கள் தொடுத்து விரிவுபடுத்தினான்.

7.அதன்பின் அரிஞ்சய சோழர்.இருக்கின்ற நில அளவை காப்பாற்றி ஆட்சி நடத்தினார்.இவருக்கு பிறந்தவர்களே மூவர்.

8.இராஜாதித்தர்–பாண்டியர்களுடன்
போரின்போது யானைமீது வீர சொர்க்கம் எய்தினார்.

9.கண்டராதித்தர்(இராஜாதித்தரின் தமையன்)–கண்டிராதித்த சோழர் மிகப்பெரிய சிவபக்தர்.தென்னாடு முழுவதும் பற்பல சிவாலயங்களை எழுப்பியும்,சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தும்,சிவாலயங்களை புதிப்பித்து திருப்பணி செய்வதிலும் சிவ மந்திர நூல்களான தேவாரம் முதலியவற்றை ஓலைச்சுவடிகளிலும்,கற்வெட்டுகளிலும் இடம்பெறச் செய்து சிவபதம் அடைந்தார்.

10.இவருக்கு பின் இராஜாதித்தர் மற்றும் இவரின் தமையரான சுந்தர சோழர் அரியணை ஏறி ஆட்சி நடத்தி வந்தார்.
இவர்தம் காலத்திலேயே பொன்னியின் செல்வன் நடக்கிறது.இவருக்கு இரு புதல்வர்கள்.

11.மூத்தவர் வீரத்தில் அர்ஜூனனையும்,அபிமண்யுவையும் ஒத்த சிங்கம்–ஆதித்த கரிகாலன்.சோழ சைன்யத்தின்(வீரர் திரள்படையின்) வடதிசை மாதண்ட நாயகன்.காஞ்சி,வடபெண்ணைக்கு அப்பால் உள்ள சைனயங்களின் தலைவன்.வடக்கே இரட்டை மண்டலம்,இராஷ்டரகூடம்,கன்னரநாடு,கலிங்கர்கள் போன்ற எல்லா பேராபத்துகளையும் எதிர்த்து நிற்கும் சிம்மம்.ஆனால் முரட்டு முன்கோபம்.

12.இளையவர்–அருள்மொழிவர்மர்.தென்திசை மாதண்ட நாயகர்.கதையின் துவக்கத்தில் ஈழத்தில் சிங்கள மன்னன் மகிந்தனை ஓட ஓட ரோஹண வனத்துக்குள் விரட்டி,அவனையும் பாண்டிய நாட்டு மணிமகுடத்தையும்,இரத்தின ஹாரத்தையும் தேடிக்கொண்டிருப்பவர்.இராஜஇராஜன்.இராஜனுக்கெல்லாம் இராஜன்.இதற்கு பின் இப்படியொரு மன்னன் வாழ்ந்ததும் இல்லை.உலக வரலாற்றில் அலக்சாண்டரையும்,இந்திய வரலாற்றில் அசோகரையும் மட்டுமே இவருக்கு ஈடு இணையாக குறிப்பிட தகுந்தவர்கள்.
உலக அரசியல் காரணமாக இன்னமும் அறிவிக்கப்படாத ஆனால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட உலக அதிசயமான தஞ்சை பெருவுடையார் கோவிலின் மூலகர்த்தா.

தொடர்வோம் ருசியான வரலாறு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s