தெறி-Theri

image

அட்லி.ராஜா ராணியை மாடர்ன் மெளனராகமாக நமக்கு பரிமாறியவர்.இப்பொழுது ஆக்ஷன் மாஸ் ஹீரோ விஜயை வச்சு மாடர்ன் சத்ரியன்,என்னை அறிந்தால் கலந்து பரிமாறியிருக்கிறார்.

ஜோசப் குருவிலா.விஜய்குமார்.தர்மேஷ்வர்.விஜய்க்கும் அழகாக கெட்டப் போட்டு வேரியேஷன் கெத்தாக காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் அட்லி.தெறி பிஜிஎம்கள் செம்ம ரகம்.மீனா மகள் நைனிகா தெறி பேபி.மழலை வசனத்தில் விஜயை கலாய்ப்பதில் தியேட்டர் ஆச்சரிய சிரிப்பலைகளில் அதிர்கிறது.நண்பர்களுடன் வடபழனி ஏவிஎம் இராஜேஷ்வரி திரையரங்கில் 40 ரூவா டிக்கட்டில் ஒரு ஞாயிறு இரவு பத்து மணி காட்சியில் இந்த மாதிரி ஒரு மாஸ் படம் பார்ப்பது வாவ்ஸ் அனுபவம்.பரவாயில்லை ரக குஷன் ஸீட்,நல்ல ஏஸி,சூப்பர் டால்பி சவுண்ட் என தரமான லோக்கல் தியேட்டர்.கடைசியாக 3/4 வருஷத்துக்கு முந்தி,மிர்ச்சி சிவாவோட தில்லுமுல்லு ரீமேக் இந்த தியேட்டர்லதான் பாத்தது.அதுக்கு அப்றோம் இப்ப தெறி.

சமந்தா,ஏமி ஜாக்ஸன் செம்ம லவ்லி பெண்கள்.இண்டர்வல் பிளாக் வசனங்கள் பரபர மாஸ்.வில்லனாக லெஜண்டரி இயக்குநர் மகேந்திரன்.அரசியல்வாதி வேஷம் 100 சதவீதம் பொருத்தம்.பார்வையாலே பல வசனங்கள் பேசிவிடுகிறார்.அப்புறம் மொட்டை இராஜேந்திரன் பத்தி சொல்லியே ஆகணும்.எல்லா விதமான ரோல்களும் செய்யக்கூடிய அளவுக்கு திறமையா இருக்கார்.எப்டி மொட்டை பாஸ்? அதுவும் அந்த நேப்பியர் பிரிட்ஜ் ஸீன் தெறி படத்தின் ட்ரேட்மார்க் சிக்னேச்சர் காட்சி.

இரண்டாம் பாதியில் தேவையில்லாத சில ஸீன்கள்.தவிர்த்திருக்கணும்.அதுதான் அட்லி பண்ண தவறு.மற்றபடி இந்த கலவை கதையை வச்சுகிட்டு இவ்ளோதான் எண்டர்டெயிணிங்கா எடுக்க முடியும் படம்.படம் வந்து பத்து நாள் மேல ஆச்சு.ஆனாலும் நைட் ஷோ ஹவுஸ்ஃபுல்.படத்தின் மாஸிவ் வணிக வெற்றிக்கு இது ஒரு குறியீடு.

செல்லாக்குட்டி பாட்டுல சமந்தா உண்மையிலே செம்ம அழகா இருக்காங்க.கிளாமரஸ்.அப்புறம் கிளைமேக்ஸ் பிறகு வர்ற பாடல் வீடியோல ஏமி ஜாக்ஸன்க்கு அதைவிட சின்ன ஜட்டியா தர முடியாதா? அப்டினு ஆடியன்ஸ் யோசிக்ற அளவுக்கு ஒரு குட்டி டிரெஸ்.என்ன அட்லி இப்டி பண்றியேப்பா!

தெறில எதிர்பார்த்து போயே என்ஜாய் பண்லாம்னு சொல்லக்கூடிய அளவு ஸீன்கள்:

1.ஜோசப் குருவிலா ஃபைட் ஸீன் வித் பிஜிஎம்
2.டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்-ரவுடிகளுக்கு மூணாப்பு எடுப்பது
3.குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் கும்பலை அடியால் வறுத்தெடுக்கும் ஸீன்.
4.நிர்பயா கேஸ் போன்ற ரேப்பிஸ்டை எப்டி கையாளணும்னு சொல்ற நேப்பியர் பாலம் ஸீன்.
5.வில்லன் இயக்குநர் மகேந்திரனுக்கும் விஜய்க்குமிடையேயான இண்டர்வல் பிளாக் மாஸ் உரையாடல் ஸீன்.
இதுலாம்தான்.

வர்ட்டா??!!

Advertisements

தி ரெவனென்ட்-The Revenant

image

லியோ உலகை திகைக்க வைத்த பல படங்களில் ஒன்று.ப்ளூ ரே கச்சித தரத்தில் ரசித்த காவியம்.அலயேண்ட்ரோ ஜி.இன்னாரிட்டு அவ்வளவு அருமையாக இயக்கியிருக்கிறார்.ஆஸ்கர் மூலம் லியோவின் காயங்கள் ஆறியிருக்கின்றன.

செவ்விந்தியர்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையேயான ரத்த உரசல்கள்.பூர்வீக பூமிக்காகவும் மட்டு மரியாதைக்காகவும் இயற்கைக்காகவும் வாழும் அந்த பழங்குடிகளின் பார்வையிலிருந்து அழகாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.செவ்விந்திய மனைவியை இழந்த லியோ,மகனையும் கண் முன்னே வில்லன்-கூடவே இருந்து குழி பறிக்கும் டாம் ஹார்டி கொல்வதையும் பார்க்கிறார்.கரடியுடனான சண்டை,பல போராட்டங்கள்,துரோகங்களை சந்தித்து மகனின் உயிருக்கு பதில் வாங்கிவிடும் தருணம் நீண்ட நெடிய பயணம் தாண்டி கிட்டுகிறது.அதற்கு பிறகு லியோ முகம் குளிரில் நடுங்கி,ஸ்கிரீனை பார்க்கும் போது நமக்கும் உடல் நடுங்கி,சிலிர்க்க ஆரம்பிக்கிறது.ஒளி,ஒலிப்பதிவுகள்,பிஜிஎம் தெய்வ லெவல்.

லியோ கேரக்டராக மாறி பச்சை கறிகளை உண்கிறார்.இறந்த குதிரை வயிற்றை கிழித்து,உள்ளே உள்ள சதையை முழுவதும் நீக்கிவிட்டு அம்மணமாக குளிருக்கு உள்ளே சென்று அமர்ந்து,சில காலம் கழித்து வெளியேறி நடந்து செல்லும் காட்சி பல மறுபிறவிகளில் ஒன்று.

டாம் ஹார்டி மிகக் கொடூரமான வில்லன்.பச்சை துரோகி.சுயநலவாதி.படம் பார்க்கும் பொழுது அவர்மேல் பிறக்கும் கோபம் கதையில் அவர் இறந்த பிறகும் தொடர்கிறது.அவ்வளவு நேர்த்தியான கதாபாத்திரம்.வாழ்வியலுக்கான தத்துவம் தெறிக்கிறது,செவ்விந்திய கவிதைகள் மூலம்.

“புயலில் நீ ஒரு மரத்தை காணும் போது அதன் கிளையை பார்த்து,கலக்கம் கொள்வாய்.இது நிச்சயம் வீழ்ந்துவிடும் என்று.ஆனால் அதன் வேர்கள் உறுதியாக இருப்பதை நீ மரப்பட்டையை பார்க்கும்போதுதான் உணர்வாய்”-கேவலமான மொழிபெயர்ப்புதான்-பொறுத்துக்கொள்ளவும்.போல அற்புதமான கோட்பாடுகள்.
மனிதன் தவறவிடக்கூடாத அற்புத படைப்புகளுள் ஒன்று-தி ரெவனென்ட்.

வர்ட்டா??!!

டெட்பூல்-Dead Pool

image

#மார்வெல் காமிக்ஸ்.உலகின் தலைசிறந்த இரண்டு காமிக்ஸ் சாம்ராஜ்யங்களுள் ஒன்று.மற்றொன்று #டிசி காமிக்ஸ்.மார்வெல்லின் பிரசித்தி பெற்ற படைப்புகள் #எக்ஸ்-மென், #வுல்வரீன், #அயர்ன் மேன், #அவெஞ்சர்ஸ், #கேப்டன் அமெரிக்கா போன்றவை.வெறும் #காமிக்ஸ் புத்தகங்கள்,தொடர்கள் போன்றவை மட்டுமல்லாமல் முழு நீள #ஹாலிவுட் திரைப்பட பிளாக்பஸ்டர்களாகவும் மாற்றுவதில் மார்வெலுக்கு நிகர் மார்வெல்லே.

இவ்வளவு நாட்களும் மார்வெல்லின் பணம் காய்ச்சி மரமாகவும்,சிறந்த பிளாக்பஸ்டராகவும் ராபர்ட் டவ்னி ஜூனியர் கலக்கும் அயர்ன் மேன் கோலோச்சி வந்தது.அந்த இடத்தை டெபூவில் செஞ்சுரி அடித்து,முதல் ஆட்டத்திலேயே ஹேட்ரிக் கோல் அடித்து,முதல் செர்விலேயே ஏஸ் போட்டு முறியடித்து பிடித்திருக்கிறான் இந்த டெட்பூல்.

உலகம் முழுக்க மார்வெல்லின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாக,சிம்ம சொப்பனமாக தன்னைத் தானே முடிசூட்டிக்கொண்டுவிட்டான் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதல் படத்திலேயே சம்பாதித்து.அப்படி என்ன கதை? கதை பழைய தகர டப்பா ஹாலிவுட் ஹீரோ கதைதான்.வில்லனை ஹீரோ #பழிவாங்குவது.ஆனால் அதை டெட்பூல் கேரக்டர் மூலம் நகர்த்தியிருக்கும் விதம் நிச்சயம் டீன்-ஏஜ்களுக்கும் இளைஞர்-இளைஞிகளுக்கும் ஐஸ்வைக்கும் விதமாக எடுத்திருக்கிறார்கள்.டெட்பூல் டயலாக் டெலிவரி ஓவர் மாஸ்.நக்கல் நையாண்டி வில்லத்தனம்.நம்மூர் #சத்யராஜூக்கு சூப்பர் ஹீரோ பவர் குடுத்து டிரெஸ் போட்டா எவ்ளோ ரகளையா இருக்கும்? அதைதான் படமாக எடுத்திருக்கிறார்கள்.நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றாங்க என டெட்பூல் மாஸ் காட்டுகிறார்.

செக்ஸி அடல்ட் ஒரு-வரி துணுக்குகள் வசனங்களிடையே நிறைந்து கிடக்கின்றன.அதற்கு உயிரளிப்பது போலவே டெட்பூலின் கேர்ள்ஃபிரண்ட் வனெஸா இருக்கிறாள்.வனெஸா லவ்லி அழகி.செக்ஸி அழகி.அன்பான காதல் துணை.டெட்பூலுக்கு கேன்ஸர் வந்து,அவன் அவளை பிரிந்து,வில்லனிடம் மாட்டி கோரமாக திரும்பினாலும் அவனை லிப்கிஸ் அடிக்கும் அளவு கிக்கான லவ்வுக்காரி.
டெட்பூல் சொல்வது போல அவன் ஒரு சூப்பர் ஹீரோவே கிடையாது.அவன் கெட்டவங்களை துன்புறுத்தும் மற்றொமொரு கெட்டவன்.அவ்வளவுதான்.இந்த சிம்ப்ளிஸிட்டி தான் டெட்பூலை மக்களிடம் மரண மாஸாக ஹிட்டடிக்க வைத்திருக்கிறது.
சீக்வல் கண்டிப்பாக வரும் என நம்பலாம்.

DOMS-60ம் ஆண்டு வைரவிழா கவி

தூங்கிக் கொண்டிருந்த தருணங்கள் பல
ஆட்டுமந்தையின் ஆர்வமிலா அலட்சியத்தோடு…
உடும்பின் பிடியாய் சோம்பல் நுழைந்திருக்க,
உயிரற்றிருந்த மனதிற்குள் என்றாவது வந்துசெல்லும் புத்துணர் எண்ணங்கள்….
தவிர்த்து-பெரும்பாலும் மடையில் சிக்குண்ட மதிகெட்ட பெருவெள்ளம்
உடுக்கையின் அதிரலாய் ஒலிகேட்டு திகைத்தது;
பின் உணர்ந்தது-அது வெறும் ஒலி அல்ல;அசரீரி.
வாழ்வின் பதத்தை, ஈடில்லா தலைமையை உணர்ந்து கொள்ளடா!
என்று உறைந்து கிடக்கும் என் தலைவனை தட்டியெழுப்பி
நீ ஆடில்லை; அதன் மேய்ப்பன்!
மதியை உலுக்கி விதியை வெல்பவன்!
போதும் இந்த போலி அரைத்தூக்கம்!
திண்மையின் பலனாய் வாழ்ந்திரு..
அதை வென்றிடும் வரையினில் விழித்திரு
இயன்ற வரையில் முயன்றிடு-மேலே
முயன்ற வகையில் வாழ்ந்திடு-அவ்வாறே
வாழ்ந்த வகையில் நிலைத்திடு..என
அறைகூவி அசரீரி ஓய்ந்தது..
அது என் மேஜையிலிருந்துதான் ஒலித்தது;
எழுத்தின் ஒலியாம் அதன் பெயர் திருக்குறள்;
அதன் முழுப்பொருள் மேலாண்மை!

அதை முழுமூச்சாய் நம்முள் நிரப்பும்
நிகரற்ற பேரிடமாம்
நம் சென்னை பல்கலைக்கழக டாம்ஸ் மேலாண்மை துறை..
அதன் 60ம் ஆண்டு பெருவிழா இன்று..
புதையலுக்கு வயது ஏற ஏறத்தான் மதிப்பு கூடும்..
போன்றே நம் துறையும்..
இது வைர விழா மட்டுமல்ல..
பல வைரங்களை பட்டைத்தீட்டும் விழாவும் கூட…
செழுமை படைத்திடுவோம் நல்மனித வளம் கொண்டு…

நன்றி. வணக்கம்.

சேஷாத்ரிநாதன் ஐயா

தாளாத துயரம் இன்று.நான் வாழ்வில் நேசிக்கும் மிக அருமையான மனிதர்களுள் ஒருவரான எனதருமை பேராசிரியர் திரு.சேஷாத்ரிநாதன் ஐயா இறைவனடி சேர்ந்தார்.

முதல் செமஸ்டரிலிருந்தே அவரது ரசிகன் நான்.பிள்ளைத்தனமான முகம்.சிரிக்கும்பொழுது மனதுவிட்டு சிரிப்பார்.மாணவர்களின் சேட்டைகளுக்கும் நக்கல்களுக்கும் பதில் நையாண்டி அருமையாக செய்வார்.70 வயது அருகில் இருக்கும்.முழுமையான வெண்முடி.அந்த காலத்து ஸ்பெக்ஸ்.இன்ன் செய்த ஷர்ட்டு-பேண்ட்டு.சாண்டா கிளாஸ் போன்ற தொப்பை.பிரஜக்டரின் ஒளியில் அவரது குழந்தைத்தனமான கண்கள் மின்னுவதை பார்ப்பதே  மாணவர்களுக்கு ஒரு ஆச்சரியமான அனுபவம்.ஹியூமர் சென்ஸ் அதிகம்.

எல்லாவற்றையும் பக்காவாக முன்கூட்டியே பிளான் செய்து,அதை செயல்படுத்துவதில் வல்லவர்.அவர் பாடங்களான TQM(முதல் செமஸ்டர்) மற்றும் MRCB(இரண்டாம் செமஸ்டர்) போன்றவற்றில் நான் செய்த அசைன்மெண்ட்டுகள்,நான் எடுத்த செமினார்,அவர்முன் ஒரு சமயம் நான் சொன்ன கவிதை,அவருடன் நான் கொண்ட உரையாடல்கள்,ஒருதடவை என் சேட்டையை கட்டுப்படுத்த என்னுடன் அவர் அமர்ந்தபோது அதை நண்பர்கள் விளையாட்டாய் புகைப்படமும் எடுத்து,அதை நான் இன்ஸ்டாகிராமிலும் அமரத்துவம் ஆக்கியாயிற்று.இவ்வாறு பல அனுபவங்கள்.

15 வகுப்புகள் ஒரு பாடத்துக்கு ஒரு செமஸ்டர் முழுவதும்.அதை பக்காவாக பிரித்து,எப்பொழுதெல்லாம் வகுப்பு நடக்கும்,எப்பொழுதெல்லாம் அவர் வரமாட்டார் என்பதை பக்காவாக முதல் வகுப்பிலேயே சொல்லிவிடுவார்.அதன்படியே நடந்து காட்டுவார்.எப்போது தேர்வு எழுதவேண்டும்,எப்பொழுது அசைன்மெண்ட்டு கொடுக்க வேண்டும் எல்லாமே பெர்ஃபெக்டாக நடக்கும்.ஒழுங்காக எல்லாவற்றையும் திருத்தி டயத்துக்கு கொடுத்துவிடுவார்.

அசைன்மெண்ட்டில் மாணவர்கள் சுயமாக சிந்தித்து எழுதி தந்தால் அவருக்கு பிடிக்கும்.அதிக மதிப்பெண்கள் கொடுப்பார்.காப்பி எடுத்து எழுதி இருந்தால் மதிப்பெண்கள் குறைவாகத்தான் வரும்.கண்டுபிடித்து விடுவார்.அதை வகுப்பில் சுட்டியும் காட்டுவார்.எத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ்? அவ்வளவு எளிதில் ஏமாறுவாரா என்ன?

கடைசி வரை சுறுசுறுப்பாகவே நடந்துகொண்டு,காரை தானே ஓட்டிக்கொண்டு,கலகல என பேசிக்கொண்டு,அப்துல் கலாம் ஐயா போன்றே தனக்கு மிகப்பிடித்த ஆசிரிய சேவையையே முழுமூச்சாக செய்து டக்கென கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் எங்களுக்கு குட்பை சொல்லாமலே சென்றுவிட்டார்.

சென்ற வாரம் செவ்வாய்கிழமை அவரது கடைசி வகுப்பு.ஃபீட்பேக் எழுதச்சொன்னார் ஒரு அரைத் தாள்(ஹாஃப் ஷீட்) எடுத்து.அவரது டீச்சிங் பற்றி மூன்று பாசிடிவ் பாயிண்ட்,மூன்று நெகடிவ் பாயிண்ட்.நெகிழ்ந்து போனேன்.அவரது அனுபவம் சாலப் பெரியது.அவரே இன்னமும் தன்னால் தற்போதைய நிலையை விட பெட்டராக செய்யமுடியும் என்ற அர்த்தத்தில் அவ்வாறு சொன்னார் என்றால் நம் நிலை என்ன? என்ற அர்த்தம் வாய்ந்த கேள்விகள் எழுந்தன.அதுதான் ஒரு ஆசிரியரின் அல்டிமேட் வெற்றி.மாணவர்களின் மனதில் தீராத தாகத்தையும் அதற்கான தேடலையும் விதைப்பது.அதை செய்வதில் அவர் ஜெயித்துவிட்டார்.அவரிடம் என்னால் பாசிடிவ் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர ஒரு நெகடிவ் கூட சொல்லும்படி இல்லை.அதனால்
1.நோ
2.நன்
3.நாட் அட் ஆல்

என்று நிரப்பினேன் நெகட்டிவில்.அப்பொழுது தெரியாது அவரது கடைசி பேட்ச் நாங்கள்தான் என்று.இறைவனின் எண்ணமும் அதுதான் போல.ரெஸ்ட் இன் பீஸ் ஐயா.அமைதியாக இளைப்பாறுங்கள்.ஓயாது உழைத்துவிட்டீர்கள்.அவர் மனைவி இவர் இறந்த அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அதுவே அவர் எவ்வளவு நல்ல பாசமான மனிதன்,கணவன் ஒரு குடும்ப தலைவன் என்பதற்கு நமக்கு ஆதாரமான சாட்சி.

உங்களைப்போன்ற ஆசிரியர்களை பெருமைப்படுத்துவேன் ஐயா,வாழ்வில் நீங்கள் சொன்ன ஆகப்பெரிய கருத்துகளை கொண்டு நான் பெறும் மாபெரும் வெற்றிகள் மூலம்.
என்றும் என்னைப்போன்ற பல மாணவர்களின் உள்ளத்தில் வாழ்வீர்கள் நீங்கள்.லவ் யூ ஐயா.

மதுரை

image

மா மதுரை.
தூங்கா நகரம்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம்.
பாண்டியர்களின் கோட்டை.
கண்ணகி.
காவியம்.
ஜிகர்தண்டா.அசால்ட் சேது.
அம்மா மெஸ்.கோனார் மெஸ்.

மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அடைந்தேன் காலை 9 மணி அளவில்.இரவு 10.30க்கு கோயம்பேட்டில் தொடங்கிய எஸ்இடிசி பேருந்து.வரும் வழியில் மேலூர் கூட்ரோடு பைபாஸிலிருந்து தனியாக பிரிந்து செல்வதை காண முடிகிறது.மதுரையில் எனக்கு சொந்த பந்தம் என்றால் என் நண்பர்கள் மட்டும் என் உடன் வேலை செய்த அண்ணன் பாலா மட்டும்தான்.அவரையும் பார்ப்பது ரேர்.

கோயம்பேட்டை விட சுத்தமாகவும் சிஸ்டமேட்டிக்காகவும் இருந்தது மாட்டுத்தாவணி.முகம் அலம்பி,வெளியே வந்து ஒரு டீக்கடையில் காபி குடித்துக்கொண்டிருக்க,நான் கேட்ட உரையாடல் மதுரையின் ரௌத்ர குணம் பற்றி என்னுள் வெளிச்சம் பாய்ச்சின. டீக்கடை அண்ணனும் வெளியில் தம்மடித்துக்கொண்டிருந்த ஆட்டோக்காரர் ஒருவரும் “என்ன மாப்ள? நேத்து ஒரு சம்பவம் ஒரண்டை இழுத்து,கத்த உட்டு செஞ்சிருக்காங்க போல” என அசால்ட்டாக பேசிக்கொண்டனர்.பெரும் ஆச்சரியம் எல்லாம் இல்லை.சினிமா கட்டமைத்த பிம்பங்கள்,பத்திரிக்கையில் அடிக்கடி பார்க்கும் செய்திகள் எல்லா நாட்களிலும் இல்லையென்றாலும் அவ்வப்போது ஊர்ஜிதம் தானே செய்கின்றன.மதுரை வெறும் ரவுடிக்கார ஊர் இல்லைதான்.அதற்கு பல வேறு முகங்கள் உண்டு.ஆனால் மற்ற ஊர்களைவிட இந்த மண் மக்களுக்கு ரௌத்திரம் பற்றிய ஈர்ப்பு ஜாஸ்தி என்றே சொல்லணும்.

ஒரே நாளில் நண்பர்களுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவில்(சிம்மக்கல் ஸ்டாப்) சுற்றி,தரிசித்து,அற்புதமான அனுபவங்கள் பெற்றேன்.சாமி கும்பிட போற இடத்துல சாமி மட்டும் கும்பிட்டா பரவாயில்லை.நமக்கு வர்ற லைன்களோட சிக்னலயும் கவனிச்சா வேற லெவல் புளங்காகிதம் தான்.தரிசனம் முடிச்சு,சுந்தரேஸ்வரர் பார்த்து,குளத்தாண்டை உட்கார்ந்தெழுந்து,மனசுக்கு நிம்மதியா வெளில வந்து ஒரு ஜிகிர்தண்டா போட்டாச்சு.

அப்புறம் தங்கரீகல்ல மேட்னி ஷோ கார்த்தி,நாகார்ஜூனா,தமன்னா,பிரகாஷ்ராஜ் நடிச்ச தோழா படம்.ஜாலியா இருந்துச்சு.காசில்லாததால வயித்துக்கு வெஜ் பஃப்ஸ் போட்டு,தண்ணி குடிச்சு நிரப்பிட்டு சுத்திகிட்டு திரிஞ்சோம்.120 டிக்கட்.செம்ம பெரிய தியேட்டர்.ரொம்ப நாளா இருக்கும் போல.ஆனா நல்லா மாடர்னைஸ் பண்ணிருக்காங்க.
இரவு தட்கல் ல சென்னை எக்ஸ்பிரஸ் புக் பண்ணி இருந்ததால உசிலம்பட்டி போய் தெரிஞ்சவங்க ஒருத்தங்களை சந்திச்சுட்டு வந்தேன்.

உசிலம்பட்டி போற வழியெல்லாம் செங்க சூளைங்க.அங்க போன பிறவு எல்லாம் பசும்பொன் தேவரு பெயிண்டிங்கு,சிலை,போஸ்டரு,கட்டவுட்டு,பேனரு எல்லாம் எல்லாம்.அவர் பொறந்த ஊராச்சே அது.இருக்காதா என்ன?தேனி போற ரூட்ல தான் கெடக்கு உசிலம்பட்டி.அங்க மாலை நேரத்துல இரண்டு மலைங்களோட அழகு இருக்கே! காவியம்.ஆரஞ்சு பெயிண்ட் டப்பாவை எடுத்து அதுல குழந்தை மனசோட கடவுள் மலைலாம் பெயிண்ட் பண்ண ஆரம்பிச்சா எப்டி இருக்கும் அப்டி இருந்துச்சு.

தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய மாநகரம் மதுரை(சென்னை,கோவை அடுத்து).ஏர்போர்ட்,ஜங்ஷன்,மாட்டுத்தாவணி என எப்போதும் படபடக்கும் ஊரு.வெள்ளந்தியான ஆனா ராவான ரௌத்ரமான மக்கள் மனசு என தனி கலவை மதுரை.பெரியார் நிலையம்(மற்றொமொரு பேருந்து நிலையம்),மீனாட்சி அம்மன் கோயில்,தங்கரீகல் தியேட்டரு,மதுரை ஜங்ஷன் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் இருப்பது மாநகரமானாலும் மதுரையோட ஒரு ஸ்பெஷாலிட்டி.

ஐ லவ் மதுரை.மறுபடி பல தடவை வரணும்.

வர்ட்டா..