ஜூன் மூன்றாம் வாரம்

image

பத்துக்குட்டியின் ஆஸம் ஸ்ப்ளெண்டர்

அன்பார்ந்த பைக் பெருமக்களே!

இன்று தென்சென்னை போக்குவரத்து தொப்பிகளின் வசூல் வேட்டை நாள்.ஸோ ஹெல்மெட்,லைசென்ஸ்,ஆர்சி,இன்ஷியூரன்ஸ் எதையும் மறந்துகூட வீட்ல விட்டுட்டு ஈவ்னிங் வெளில வந்துடாதீங்க..

ஹெல்மெட் எடுத்துட்டு வந்தும் பின்னாடி உட்கார்ந்து இருக்றவங்க கிட்டயோ/டேங்க் மேலயோ வச்சி இருக்றவங்க ஹெல்மட்ட போலீஸை பாத்த உடனே மண்டைகிட்ட கொண்டுவர்றதுக்கு முன்னாடியே நச்சு நச்சுனு புடிக்றாங்க.சிக்னல்ல வச்சே ஓரம் கட்டுவாங்க..பீ கேர்ஃபுல் மை பாய்ஸ்..பீ கேர்ஃபுல்

நேரடி அந்நிய முதலீடு

வேறு எதுல வேணா பொறுத்துக்கலாம்.ஆனா பாதுகாப்பு துறைல 100% அந்நிய முதலீடு என்பது கொஞ்சம் பகீருனே இருக்கு.
பின்வரும் வரிகளை நானும் என் நண்பன் நரேன் மணியும் காங்கிரஸ் யுபிஏ ஆட்சி அப்போ சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிரான குரலா தொடுத்தோம்.

“மேற்கு மட்டும் தான் மேதைத்தனம் என்றால் சூரியன் எங்கே தோழா உதிக்கும்??
நாடி நரம்பெல்லாம் வாடி வருந்தினாலும் உழவன் இருந்தால் தான் உன் அன்னம் சிறக்கும்!!!
அரசே-நம் சில்லறை வாணிபத்தை நீ வெறுத்து ஒதுக்குகிறாய்!!
அதன் கல்லறை மீதே பல கயவர்கள் கோடிகளைக் குவிக்கிறார்கள்!!
மனிதா-நீ விழிக்கும் போதுதான் உன் விடியல் பிறக்கும்!
நீ சிந்தித்த பின்புதான் நம் தேசம் செழிக்கும்!விழித்தெழுவாய்! இப்பிழையை திருத்திடுவாய்!”

இப்போ இந்த வாய்ஸ் கூட செல்லுபடி ஆகுமா மக்களே..பல தரப்பு ஆய்வுகளுக்கு பிறகு எடுத்திருக்க வேண்டிய முடிவு இது..இந்தியாவை இயற்கை காப்பாற்றட்டும்..

Advertisements

இளைய தளபதி விஜய்

image

ஏன் இலக்கியத்தை பற்றி கட்டுரை எழுது.ஒரு நல்ல புத்தகத்தை பற்றி கட்டுரை எழுது.இசையை பத்தி எழுது.சரி சினிமாவை பத்தி எழுதுறியா கமலை பத்தியோ விக்ரமை பத்தியோ எழுது.நீ அஜித் ரசிகன் தான? அதென்ன சம்பந்தமே இல்லாம விஜய் பத்தின விவரனை?

மலையாளம்.இலக்கியத்தை கொண்டாடும் மொழி.மலையாள சினிமா இலக்கியங்களை காவியங்களாக்கும் மாய உலகம்.வைக்கம் முகம்மது பஷீர் எழுத்தையும் காவிய திரைப்படைப்புகளாக்கும் வல்லமை பெற்றவர்கள்.அந்த மாய உலகத்தில் ஒரு கமர்ஷியல் நாயகன் வெறும் டப்பிங்லயே ஜெயித்திருக்கிறான்னா அவன் மக்கள் மனசை எவ்ளோ படிச்சிருக்கணும்? அதான் விஜய்.என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு மகா கலைஞன்.சரியாக பயன்படுத்தினால்.சளைக்காத என்டர்டெயினர்.எவன் பயன்படுத்தினாலும்.

மக்களுக்கு புரியாத/பிடிபடாத விஷயம்தான் தரமானது,இலக்கியம்னு நிறைய பேரு நம்புறாங்க.ஆனா ஜனரஞ்சகத்தை சேராத எதுவுமே காத்தோட காத்தா போயிடும்.விஜய் ஒரு இலக்கியன்.ஒரு காவியன்.சில பேருக்கு நான் சொல்றது சிரிப்பா கூட இருக்கும்.ஆனா இதான் ஃபேக்ட்டு.
இதை சொல்றதுக்கு நான் தல ரசிகனா இல்ல சினிமா பைத்தியமாங்கிறதுலாம் சம்பந்தமே இல்லாத விஷயங்கள்.

இளைய தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வர்ட்டா??!!

விளம்பரம் தேடாத நிஜம்

image

இது ரஜினிக்கு வக்காலத்து வாங்கப்போடும் போஸ்ட் அல்ல

மழை அப்போ நீங்க என்ன செஞ்சீங்க? பத்து லட்சம் தான் கொடுத்தீங்க. இப்போ என்ன கபாலில வள்ளல் மாதிரி கேரக்டரா மறுபடி? இந்த மாதிரி ஒரு கும்பல் அடிக்கடி கெளம்பும்.

இதே கும்பல் தான் கமல் “நான் கட்டுன வரிப்பணம் எங்கயா போச்சு?”னு கேட்டப்போ கலாய்ச்ச கும்பல்.இத மழை அப்போ நான் கண்கூடா கவனிச்சிருக்கேன்.ரஜினி தன்னோட ராகவேந்திரா மண்டபத்தை காலவரையில்லாம பொதுத்துறை மற்றும் துப்பரவு ஊழியர்களுக்கு திறந்துவிட்டிருந்தார்.அந்த மண்டபத்துல நானும் என் நண்பர் பத்துவும் ஒரு நாள் இரவு தங்கினோம்.யோசிச்சு பாருங்க.ராகவேந்திரா மண்டபத்துக்கு ஒரு நாளைய வாடகையே பல லட்சங்கள்.இத வெளில சொன்னாலும் விளம்பரம்பீங்க…சொல்லலைன்னா கஞ்சன்பீங்க..

இதுக்குலாம் அவர் பாட்டுதான் அவருக்கே பொருந்தும்.மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும் ஆகாயம்தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு.இந்த மாதிரி சீப் விமர்சனங்களை கண்டுக்காததால தான் மே பி அவரு ஒரு நித்ய மனோநிலைல இருக்காரு..

வர்ட்டா??!!

தவிப்பும் தரமும்

image

நண்பன் பாலா கட்செவி அஞ்சலில் தனக்கு வந்த ஒரு ஃபார்வர்டை குழுவில் ஃபார்வர்டு செய்தான்.அது சிம்பிளாக இருந்தாலும் அழகாக இருந்தது.நச்சென்று தத்துவார்த்தமாக இருந்தது.அதான் நம்ம கேரக்டர்.இதோ அது உங்கள் பார்வைக்காக.

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.

அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!

பால் கதை?”

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.
அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் இருபது  ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் பாலிலிருந்து கிடைக்கும் நெய் விலையைக்கேட்டால் கடைக்காரன் இருபத்தியாறு ரூபா என்று விலை சொல்றான்” என்றாள்.

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் இருபது ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு இருபத்தியாறு  ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள். சவால்களை ஏற்போம்,சாதனைகள் புரிவோம்!

சரி,இதுக்கு எதுக்கு சச்சின் படம்?சச்சின,தல அஜித் இவங்கள தவிர பாப்புலரான எடுத்துக்காட்டுகள் அப்துல் கலாம் ஐயாவும் கூட.விதைத்தவன் யாரா இருந்தா என்ன? விதை வீரியமா இருக்கணும்.அதானே முக்கியம்.

வர்ட்டா??!!

கர்ப்ப தமிழ் மண்ணை யாரோ இசைப்பாரோ?

வடசென்னை

நிப்பான்.நின்னு எவ்ளோ நேரமானாலும் பொறுமையா வழி சொல்லுவான்.எந்த ரூட்டை,எவனை எப்டி கேட்டாலும் சளைக்காம சொல்லுவான்.இதான் டா வட(மேற்கு) சென்னை.
தென்சென்னைல ஆட்டோக்காரரை தவிர யாரை கேட்டாலும் “எனக்கு தெரியாது..வேற யாரயாச்சும் கேளுங்க” 😛

மொத்த சென்னைல இந்த இரண்டு மாசத்துல என் கால் படாத இடமும்,பத்மாநபன்(பத்துக்குட்டி)யோட ஸ்ப்ளெண்டர் டயர் படாத குறுக்கு சந்தும் படுகுறைவு.அப்டி எதாச்சு இருந்துச்சுனா சொல்லி அனுப்புங்க.வந்து அதையும் கவர் பண்ணிட்டு போறேன்.
கெட்ட பய சார் இந்த சக்தி.

இன்சோம்னியா

இதை பதிவிடும்போது மணி இரவு 2.48.இப்பவும் சிலபேரு ஆன்லைன்ல இருக்காங்க.பலருக்கு பல காரணம்.கொஞ்ச பேரு நைட் ஷிப்ட்.கொஞ்ச பேரு பகல்ல தூங்குன சோம்பேறிங்க.
மத்த மெஜாரிட்டி? தூக்கம் வரல.தூக்க மாத்திரை போட பிடிக்கல.இத்தனைக்கும் நாள் முழுக்க அலைச்சல்,ஓயாத வேலை.லாஜிக்கலா யோசிச்சு பாத்தா அட்லீஸ்ட் 12 மணிக்கு முன்னாடியாச்சு தூங்கியிருக்கணும்.அதுவும் இல்ல.

டாக்டரை போய் பாக்கவும் இஷ்டம் இல்ல.ஏன்னா நைட் அவுலாவே இருந்து பழகிட்டோம்.இரவுநேரம்தான் அயராம நம்மள உயர்த்தியிருக்கு.பத்தாம் பன்னிரண்டாம்
பரீட்சை ஆரம்பிச்சு..பொறியியல் செமஸ்டர் முதல்நாள் இரவுக்கள் படிப்பதற்கு குடித்த ஜாவாகிரீன் கேப்புச்சீனோக்கள்,இனம் தெரியாத டெக்னாலஜிக்கல் வஸ்துக்களான சேட்டிங்,அது நின்றுபோன தனிமை,பல ரேண்டம் சிந்தனைகள்,ஏதோ ஒரு புத்தகம்,வீக் எண்ட் நைட்ஷோ,மதுமகன்களின் குடல் கேட்கும் உணவுப்பசி,காதல் அரட்டைகள் அல்லது அது இல்லாத தனிமை உணர்வு,நேத்து போட்ட நிலைத்தகவலுக்கு எத்தனை லைக்குகள் என்று எழும்பி பார்க்கும் ஜந்துக்கள்,நாளை டெட்லைனை நினைத்து குழம்பி தூங்காமலிருக்கும் நிலை,கடன் தொல்லை,பிரிதுயரம்,அலட்சியப்படுதலின் வலி.

ஒரு இன்சோம்னியாக் தலைமுறை செழிப்பாக வாழ்ந்து வருகிறது.

சறுக்கல்களும் சகஜங்களும்

அம்பாரியில் ஏறவேண்டியவர்கள்
அலங்காரமில்லாம ஆனா சந்தோஷமா நடந்துபோனாங்களாம்..

அப்போ யானை கேட்டுச்சாம்..சொன்னா சிரிப்பீங்க..அந்த யானை கேட்டுச்சாம் “இது எனக்கு விடுதலையா உங்களுக்கு விடுதலையா” னு.

அம்பாரி இல்லாத யானைய சகிக்காத ஊர்மக்கள் அதை கோவிலுக்குக் கூட மதிக்காம தெருவில விட்டாங்களாம்.

தப்பு யார் மேல?
யானை மேலயா? அந்த மேன்குலத்தோர் மேலயா? இல்ல ஊர்மக்கள் மேலயா?
அவரவர்க்கு அவரவர் நியாயம்.

#நிஜவாழ்க்கை

தண்ணி மீனாட்சி கிணறு

இது சிறுகதையா/நிஜ சம்பவமா தெரில.இது கட்செவி அஞ்சல்(வாட்ஸ்ஏப்) மூலம் என் நண்பன் ஒருவன் முகநூலில் தான் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் கூறி ஃபார்வர்டு செய்தான்.இதை எழுதியவர் அருமையாக சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.

1.இலக்கிய தரத்திலானா உரையாடல்
2.அந்த காலத்து உண்மை நிகழ்வுகளின் பதிவு
3.குடும்ப அமைப்பு மற்றும் மாற்றங்கள்
4.பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி
5.அவளுக்கும் ஆசைகள் உண்டு என்பதைக்கூட உணராத முட்டாக்கூக்கள் சிலர் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது.நீங்களும் வாசிங்க.

செக்குக்கு மாடு கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பொண்ணு கொடுக்கக்கூடாது என்ற பழமொழி நிலவி வந்த காலம் அது. காரணம் 80களில் திண்டுக்கல்லில் நிலவி வந்த கடும் தண்ணீர் பஞ்சம். பொண்ணு கொடுத்தா தண்ணி தூக்க வச்சே கொன்னுபுடுவாங்கப்பேய் என்று சுற்று வட்டார மக்கள் எல்லாம் பேசிக்கொள்வார்கள். நல்ல தண்ணி என்று சொல்லப்படும் தண்ணீர் வாரத்துக்கொருமுறை நகராட்சி பொதுக் குழாயில் வரும். அதற்கு இப்போது மண்ணெண்ணெய்க்கு வரிசை போடுகிறார்களே கேன்களை, அது போல குடங்களை வரிசையாய் வைத்திருப்பார்கள். ஆளுக்கு நாலு குடத்துக்கு மேல் பிடிக்க விட மாட்டார்கள். சில சமயம் சண்டை வந்துவிட்டால் அவ்வளவுதான். இந்த பேச்சு வாங்கி  தண்ணி பிடிக்கிறதுக்கு பதிலா பூச்சி மருந்த குடிச்சிட்டு குடும்பத்தோடு போய்ச் சேர்ந்துடலாம் என்று நினைக்கும் அளவுக்கு வைது தீர்த்து விடுவார்கள்.

இப்போது போல் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திராத காலம் அது. வீட்டுக்கொரு குழாய் போடவும் முடியாது. கனெக்‌ஷன் வாங்குவதும் லேசு பட்ட பாடில்லை. மோட்டார் பம்ப் வைத்து தண்ணீர் எடுப்பதெல்லாம் பெரும் லக்சுரியாக கருதப்பட்ட காலம். மேலும் போர் போடவும் இடம் வேண்டுமே. வரிசையாக இடைவெளி இல்லாமல் வீட்டைக் கட்டி வைத்திருப்பார்கள்.

இந்த நாலு குடம் நல்ல தண்ணி, குடிக்கவும் சாம்பார் வைக்கவும் மட்டும்தான். மற்றதுக்கெல்லாம் உப்புத்தண்ணி எனப்படும் கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீர்தான். நாலைந்து தெருவுக்கு பொதுவாக அப்படி ஒரு கிணறு அமைந்திருக்கும். வடுகமேட்டுராசா பட்டிக்கும் யாதவ மேட்டுராசா பட்டிக்கும் நடுவே அப்படி அமைந்த கிணறுதான் ராணி மங்கம்மா கிணறு. மங்கம்மாள் மதுரையை ஆண்ட போது தோண்டிய கிணறு என்று சொல்வார்கள். 20 ஆள் மட்டம் என்று ஆழத்தைச் சொல்வார்கள். அறுவதுக்கு நாப்பது என நல்ல அகலம் சகலமாக இருந்த கிணறு. பக்கத்துக்கு பத்து பேர் நின்று தண்ணீர் இறைக்கலாம்.

அந்த ஏரியாவில் இருந்த வீட்டுப் பெண்கள் எல்லோருமே அந்தக் கிணற்றில் நீர் இறைத்திருப்பார்கள். ஆளுக்கு 10 நடை எடுத்தாத்தான் பொழப்பு ஓடும். இளந்தாரிகள் அருகாமையில் நல்ல தண்ணி கிடைக்கும் இடத்துக்கு சைக்கிளின் இரண்டு பக்கமும் குடங்களை வைத்து சைக்கிள் டியுபால் கட்டி நாலு நடை போய்வருவார்கள். தண்ணீர் எடுப்பதிலேயே தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்கள் உண்டு. நதிக்கரை நாகரீகத்தால் கலைகள் செழித்து வளர்ந்தன என்பார்கள். திண்டுக்கல்லில் தண்ணீர் பஞ்சத்தால் மக்களின் நாகரீகம் தான் குறைந்தது.

இந்த விதிக்கும் மீறிய ஒரு வீடு அந்தப் பகுதியில் இருந்தது. அதுதான் லாரி செட்டுக்காரர் வீடு. பெயர் சுந்தரம். சுந்தரத்தின் வசதி அப்போது குறைவு என்றாலும் பழைய மெதப்பிலேயே இருப்பவர்.

அவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. சமையல் மட்டும் எப்படியாவது தட்டித்தடுமாறி செய்து விடுவார். ஒரு மகன் அடுத்து இரண்டு மகள்கள். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம்.அதில் மூத்தவள் தான் தங்க மீனாட்சி.

இந்த மீனாட்சிதான் அந்த வீட்டில் தண்ணீர் எடுக்க நேர்ந்து விடப்பட்டவள். அவள் அண்ணனும் தங்கையும் ஒரு பாத்திரத்தைக் கூட நகட்டி வைக்க மாட்டார்கள். காலையில் 20 நடை பின் பள்ளிக்குப் போய் வந்து 20 நடை மீனாட்சிதான் மாங்கு மாங்கென்று தண்ணீர் எடுப்பாள். அந்தக்காலத்தில் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் பால்காரர்களுக்கு சைக்கிளை மிதித்து மிதித்து தொடை சிறுத்து, முழங்காலுக்கு கீழ்  பகுதி வலுவேறி காணப்படுமே, அதுபோல, தங்க மீனாட்சிக்கு தண்ணீர் இறைத்து இறைத்து கையெல்லாம் காய்ப்பு காய்த்திருக்கும். புஜங்கள் எல்லாம் வலுவேறி இருக்கும். பாவாடையின் மேல் அப்பா அல்லது அண்ணனின் சட்டையை போட்டுக் கொண்டு, பர பர வென்று நடந்து போவாள்.

நம் நாட்டில் தான் ஒரு பழக்கம் இருக்கிறதே. யாராவது ஒருவர் ஒரு வேலையை பங்கமின்றி செய்து விட்டால், அவர் தலையிலேயே அந்த வேலையை கட்டி விடுவது என்று, அதுபோல அவர்கள் வீட்டிலும் தண்ணி எடுக்க மீனாட்சி என்று ஆகிப்போனாள். பள்ளிக்கு போக, தண்ணி எடுக்க, வீட்டு வேலைகளையும் செய்ய என நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பாள். தலையை சீவக்கூட நேரமிருக்காது அவளுக்கு. உண்மையில் அந்தத் தெருவிலேயே அவள்தான் அழகி ஆனால் வேலைகளால் நைந்து நளினம் இழந்து போனவள் அவள்.

அவள் மீது அக்கறை கொண்ட சில தெருப்பெண்கள், அவளின் அம்மாவிடம் , அதான் ஓரளவு வசதியா இருக்கீங்கல்ல, தண்ணி எடுக்க ஒரு ஆளக்கூட போடலாமில்ல, சின்னவ மெழுமையா இருக்கா, பாவம் மீனாட்சி உருக்குலைஞ்சு போயிட்டா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.

எங்க வீட்டுக்காரரப் பத்தித்தான் தெரியுமில்ல. வேத்தாளு உள்ள வரக்கூடாதும்பாரு. எங்க ஆளுகள்ள யாரு தண்ணியெடுக்க வருவா? முடியாட்டியும் நீதான் சமைக்கணும்னு என்னயவேற பாடாப் படுத்துறாரு என்று அவளாலும் புலம்பத்தான் முடிந்தது.

மீனாட்சியின் சோட்டுப் பெண்களும், என்னடி இப்படி இளிச்சவாச்சியா இருக்க? உன் தங்கச்சி தண்ணியெடுக்க மாட்டாளா? உங்கண்ணன் சைக்கிள்ல போயி பிடிக்கக் கூடாதா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். நீ நாலு நாளைக்கு தண்ணி எடுக்காத என்றும் சொல்லிப்பார்த்தார்கள். அவர்கள் பேச்சைக்கேட்டு இரண்டு நாள் தண்ணி எடுக்காமல் இருந்தாள் மீனாட்சி. ஆனால் அவளின் அண்ணனும் தங்கையும் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் மீனாட்சியின் அம்மா தண்ணி எடுக்க வந்து, கிணற்றில் வழுக்கி விழுந்தது தான் மிச்சமாயிற்று.

சில தெருப்பெண்கள், இந்த நிகழ்வுக்குப் பின், பொட்டச்சிக்கு இவ்ளோ ஆங்காரம் ஆகாதுடி, வீட்டுக்கு தண்ணியெடுத்தா குறைஞ்சா போயிடுவ? என்றும் பேசினார்கள்.

மீண்டும் தண்ணிக்குடம் மீனாட்சியின் இடுப்பில் ஏறியது. காலம் ஓடியது. மீனாட்சியின் அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. மீனாட்சியின் படிப்பு பிளஸ் 2 உடன் நிறுத்தப்பட்டது. சுந்தரத்தின் மிச்சமிருந்த சொத்துக்களும் கரையத் தொடங்கி இருந்தது. மீனாட்சியின் தங்கை அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தாள். பின் ஒருவனை காதலித்து மணம் செய்து கொண்டாள். நான் மட்டும் மட்டமா என்ன, என்று மீனாட்சியின் அண்ணனும் ஒரு வேற்று சாதி பெண்ணை காதலித்து மணந்து கொண்டான்.

சுந்தரத்துக்கு, மகன் வேறு சாதிப் பெண்ணை மணந்து கொண்டது பெரும் வருத்தத்தை தந்தது. இவள்லாம் எனக்கு காரியம் செஞ்சு, அமாவாசை சாப்பாடு சாப்பிடணுமா என்று புலம்புவார். என்னமோ பெரிய மகராஜா போல.

தொடர் சோகங்களால் மீனாட்சியின் அம்மாவும் காலமானார். ஆனால் மீனாட்சி தண்ணீர் எடுப்பது மட்டும் நிற்கவில்லை. எழவுக்கு, காரியத்துக்கு கூட அவள்தான் தண்ணீர் எடுக்க வேண்டி இருந்தது. அவள் சோட்டுப் பெண்கள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போன பின்னர், அந்தக் கிணறுதான் அவளின் தோழியாகிப் போனது. இறைக்கும் போது கிணற்றுடன் பேசிக் கொண்டேயிருப்பாள்.

சுந்தரம் திவாலாகும் நாளும் வந்தது. இருந்த வீட்டை கடனுக்கு கொடுத்து விட்டு நாலுதெரு தள்ளி ஒரு லைன் வீட்டுக்கு குடி போனார்கள். தன் மெதப்பில் இருந்து இறங்கி, ஒரு கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பித்தார். ஒரு நடைப்பிணமாகத்தான் அவரின் செயல்பாடுகள் இருந்தது. மீனாட்சிக்கு இப்போது நாலு நடையோடு வேலை முடிய ஆரம்பித்து இருந்தது.

கொஞ்சநாள் தான் ஆகியிருக்கும். மீண்டும் மீனாட்சி தண்ணீர் எடுக்க ஆரம்பித்தாள். இம்முறை பேய் மாதிரி. காலை முதல் மாலை வரை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஹோட்டல்களுக்கும் தண்ணீர் எடுத்து ஊற்ற ஆரம்பித்தாள். ராத்திரி ஆனால் பேய்த்தீனி தின்பாள். தண்ணீர் ஊற்றும் கடைகளில் இருந்து சாப்பாடை வாங்கி வந்து கிணற்றடியில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். இருளில் இது நடப்பதால் முதலில் யாருக்கும் தெரியவில்லை. பின் சில பெண்கள் விவரம் அறிந்து விசாரித்த போது காரணம் சொல்ல மறுத்தாள். தண்ணி எடுத்து ஊற்றுவதால் தண்ணி மீனாட்சி என்றே அவள் பெயர் அங்கே மாறிப்போனது.

சில மாதம் கழித்து, அவளின் நெருங்கிய தோழியை சந்தித்த  போது மட்டும் அதைப் பகிர்ந்து கொண்டாள். அந்தக் காலத்தில் லைன் வீடுகளில் வாடகைக்கு விடும்போது ஒரு சின்னக் குழந்தை இருப்பவர்களுக்கோ அல்லது புது மணத்தம்பதிகளுக்கோ தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அப்படி மீனாட்சியின் வீட்டுக்கு இரண்டு பக்கமும், புது மணத்தம்பதிகள். பொது சுவர் என்பதால் அவர்கள் சரசம் இவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனை காலம் அடக்கி இருந்த உணர்ச்சிகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கவும் அவளால் தாங்க முடியவில்லை. தூக்கம் தொலைந்திருந்தது. அதனால் பகல் முழுவதும் பேயாய் உழைத்து, ராத்திரியில் அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு தூங்கி விரகத்தை கட்டுப்படுத்த பழகிக் கொண்டாள்.

ஏண்டி, உன் தந்தையிடம் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லலாமிலே என்று தோழி கேட்டதற்கு, அப்பனிடம் எப்படி இதைக் கேட்க முடியும்? நான் குஷ்டரோகியா இருந்தாக் கூட பரவாயில்லை கட்டிக்கிடுவேண்டி. ஆனா, எங்கப்பா குஷ்டரோகியா இருந்தாலும் நம்ம ஆளுகளா இருக்கணும்பார். சொந்தம்னு இருக்கிற  அவரையும் விட்டுட்டு நான் என்ன செய்யுறது என்று விரக்தியுடன் பதிலளித்தாள்.

பின் ஒரு நாளில், ஹோட்டல்கள், வீடுகள் எல்லாம் மோட்டர் பம்ப்செட் புகுந்து, வேலை கிடைக்காத நேரத்தில், தன் தோழியாய் இருந்த ராணி மங்கம்மாள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இப்போதும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இறங்கி வடுக மேட்டுராசா பட்டி போய் தண்ணி மீனாட்சி கிணறு என்று கேட்டால், யாராவது வழி காட்டுவார்கள்.

பெட்டி கேஸ்-ஜட்டி கேஸ்

வார்னிங்: இந்த போஸ்ட் ரசிப்பதற்கு மட்டும் மற்றும் உண்மையாவே அப்டிதான் நடந்தது என்பதால் எங்களால டைம் மெஷினில் போய் மாத்த முடியாது என்பதாலும் “இந்த இளைஞர்கள் மைண்ட்செட் திருந்தற மைண்ட் செட்டே இல்ல” என்று உணர்ச்சி பொங்கல் வைச்சு ஒரு முடிவுக்கு வரவேணாம்னு முன்கூட்டியே தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2013.மின் மற்றும் மின்னனு பொறியியல்.மூன்றாம் ஆண்டு.கல்லூரி.கோடை விடுமுறையின் போது சம்மர் இன்பிளாண்ட்-டிரெயினிங் மாணவர்கள் செல்வது வழக்கம்.

அவ்வாறு நானும் என் சில நண்பர்களும் சென்றது தெற்கு ரயில்வேவுடைய எலக்ட்ரிகல் பட்டறை.பெரம்பூரில் இருந்தது.தினமும் சென்ட்ரலில் இருந்து மின்சார ரயில் புடிச்சு போகணும்.ஒரு வாரம் சுமூகமா போச்சு.எல்லா நாளும் ரயில்ல ஃபுட்போர்டு அடிச்சிட்டு போறது வழக்கம்.ஒருத்தரும் புடிக்ல.
ஒரு பிரச்னைல.

எட்டாவது நாள்.சர்டிபிகேட் வாங்க போகும் கடைசி நாள்.அன்று சான்றிதழ் வாங்கிட்டு, வழக்கம்போல ஃபுட்போர்டு அடிச்டு சென்ட்ரல் நோக்கி வந்துட்டு இருந்தோம்.அன்னைக்கு கலெக்ஷன் வேட்டை நாள்னு தெரியாது.

ரயில்வே போலீஸ் பாத்து எங்கள்ல சிலரை இறக்குனாங்க.எல்லாரையும் ஒரு ஆட்டோல ஏத்தி கொருக்குப்பேட்டை குட்ஷெட் பக்கத்துல இருக்ற ஒரு போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போறாங்க.என் நண்பன் வேற பதறுறான்.மச்சா போச்சு டா..நம்ம மேல கேஸ் போட போறாங்க.நம்ம வாழ்க்கையே ஓவர்டானுலாம் சொல்றான்.

எனக்கு இது பத்தி முன்கூட்டிய எந்த அறிவும் இல்லாததால,போலீஸா இருக்ற எங்க மாமா ஒருத்தருக்கு ஃபோன் பண்ணி கேட்டேன்.
அவர் விஷயத்தை கேட்ட உடனே “அட மடையனுங்களா! எல்லா நாளும் இவங்க இப்டி பிடிக்றது இல்ல.என்னிக்கு கலெக்ஷன் வேணுமோ அன்னைக்கு ரூல்ஸ ஃபாலோ பண்ணுவாங்க.உங்கள யாருடா ஃபுட்போர்டுலாம் அடிக்க சொன்னது?” னு கொஞ்சம் கடுமையா கேட்டார்.
“இதுலான் எங்களுக்கு தெரியாது மாமா.இனிமே அடிக்க மாட்டோம்.ஏதாச்சு பிரச்னை இருக்கா?”னு கேட்டேன்.பக்கத்துல என் ஃபிரெண்டு அழுவற நிலைல உட்கார்ந்துட்டு இருக்றான்.
“அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லடா.சென்ட்ரல் கோர்ட்ல ஒரு பெட்டி கேஸ் போட்டு 300 ரூவா ஃபைன் கட்ட சொல்லுவாங்க. இனிமே இப்டி பண்ணாத!”னு சொல்ட்டு காலை கட் பண்டார்.எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.ஆனாலும் நான் சொல்றத என் நண்பன் நம்பவே மாட்றான்.போச்சுடா நம்மள எங்கியும் வேலைக்கே சேத்துக்கமாட்டாங்க.நாம அக்யூஸ்ட் டானு” உளர்றான்.
நான் “டேய்! நாம அவ்ளோ வொர்த்லான் இல்லடா.தெரியாம பண்ணிட்டோம்.ஃபைன் கட்டிட்டா விட்ருவாங்க.இனிமே ஒழுங்கா இருப்போம்!” அப்டினு சொல்லிட்டே இருக்கேன்.
ஒரு போலீஸ்காரர் ஸ்டேஷன் உள்ள வந்து பெஞ்சை தட்டி “தம்பிகளா! இங்க பாருங்க..நீங்க ஒழுங்கா ஃபைன் கட்டிட்டீங்கன்னா இது பெட்டி கேஸ்.இல்லனா மவனே ஜட்டி கேஸ் ஆக்கிடுவேன் பாத்துகுங்க”னு பஞ்ச்லாம் பேசறார்.நண்பனின் பீதி அதிகமாயிடுச்சு.அவங்க அப்பாவுக்கு கால் பண்ணிட்டான்.அவர் என்னமோ ஏதோனு லாயரெல்லாம் கூட்டிட்டு வந்துட்டார்.அப்பயும் இவங்க தங்க கடமைய செஞ்சிட்டுதான் வெளில விட்டாங்க.

மூணு மணிநேரம் காக்கவச்சு சென்ட்ரல்ல இருக்ற ரயில்வே கோர்ட் உள்ள போறதுக்கு வரிசைல நிக்க வச்சிருந்தாங்க.எங்கள மாதிரி ஃபுட்போர்டு அடிச்ச பசங்களுக்கு பின்னாடி பிச்சை எடுத்து நியூசென்ஸ் பண்ணவன்,யூரின் போய் மாட்னவன்லாம் நின்னுட்டு இருந்தான்.காலக்கொடுமை சகோதரா..இதுவும் கடந்துபோகும்னு நினைச்சிட்டு நின்னுட்டு இருந்தோம்.

கோர்ட் உள்ள போனா அங்க ஒரே ஒரு நீதிபதி.ஒரு கூண்டு அவர் எதிரில.அவர் கீழ ஒரு எழுத்தர்.பக்கத்துல சில ஸ்டாஃபுங்க.ஃபுட்போர்டு அடிச்ச ஒரு முப்பது பேரை மொத்தமா (குற்றவாளி) கூண்டுல ஏத்தி “இனிமே ஃபுட்போர்டு அடிக்காதீங்க.லைன்ல நின்னு ஃபைனை கட்டிட்டு போங்க” என்றார் நீதிபதி.வெளில வந்து ஒரு டீக்கடைல டீ குடிச்சுட்டு நின்னோம்.சட்டம் என்னாமா வேலை செய்துல்ல?சிரிக்ற லெவல்லயும் இல்ல.நடுல போலீஸ் ஸ்டேஷன்ல நியூஸ்பேப்பர் கட்டிங்க கொடுத்து ஃபுட்போர்டுல இருந்து கீழ விழுந்து  செத்தவன் கேஸைலாம் வேற எக்ஸ்பிளெயின் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.அதுல இருந்து சென்ட்ரல்-ஆவடி ரூட்டுல மட்டும் நாங்க ஃபுட்போர்டு அடிக்றது இல்ல. 😛

இன்கிரடபிள் இந்தியா-Incredible India(plog)

பல இந்தியர்கள் உலகை காண செல்வர்.இந்தியாவில் உலகமே இருக்கிறது என்பதை உணராமல்.இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமுமே ஒரு சுற்றுலா சொர்க்கம்.
குறிப்பாக காஷ்மீர,இமய,வடகிழக்கு ஏரியாக்கள்.
இவற்றில் பல நான் பார்க்க வேண்டிய லிஸ்டிலும் இருக்கின்றன.வெளிநாடுகளை கண்டு களியுங்கள்.தவறில்லை.இந்த இயற்கையின் கொடைகளையும் தவற விடாதீர்கள்.அதுவே என் கோரிக்கை.

அந்த வகையில் இந்தியாவில் பார்த்தே ஆகவேண்டிய இடங்களின் அழகிய புகைப்படங்கள் இதோ.

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

நன்றி: முகநூல் பொதுவுடைமை பகிர்தல் தத்துவம் 🙂 😛

வர்ட்டா??!!