சூப்பர் ஸ்டாரின் கபாலி

image

உட்லண்ட்ஸ் தியேட்டரில் கட் அவுட் பாலாபிஷேகம்

படம் பார்த்தாச்சு.எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

ரஞ்சித் சொல்ல வந்த மெசேஜை சில சமூக தொந்தரவு காரணங்களுக்காக அப்பட்டமா சொல்லாம சில நிகழ்வுகள் மூலமாகவும்,உடைங்கிற அடிப்படை குறியீடு மூலமாகவும் சொல்லியிருக்கிறாரு.

மேட்டுக்குடிகளின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ளே கேட்காது போன்ற வரிகளும்,நான் ஆண்ட பரம்பரை இல்லடா ஆனா ஆளப்பிறந்தவன்டா ங்கிற ஆதங்க வசனங்களும் ரஜினியை தவிர வேற யார வச்சும் ஒரு சமூக களத்துல இறக்கி இருந்தா இந்த பொதுசனம் கொந்தளிச்சிருக்கும்.இப்போ அந்த கொந்தளிப்பு ரஜினி ஏன் இப்டி ஒரு கன்டென்ட்டை endorse பண்ணாருனு மறைமுகமா அவர்மேலக்கூட திரும்பி பல திடீர் எதிர்ப்பாளர்கள் உருவாகக்கூட காரணமாக இருந்திருக்கலாம்.

ரஜினியின் மனைவி,மகள் வேடங்கள் ரொம்ப பிடித்திருந்தது.
குடும்பங்கள் குழுமும் ரஜினி படத்திருவிழாவில் அடித்தட்டு மக்களுக்கான அரசியலை ஹெவியாக இறக்கியிருப்பது வந்த “மாஸ் கமர்ஷியல் ஜாலி” ஆடியன்ஸூக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் ஆச்சரியம் இல்லை.
இது அவுட் அண்ட் அவுட் ரஞ்சித் படம்.ரஜினியின் ஒவ்வொரு ஃபிரேம் கண் அசைவும்,வசனமும்,கண்ணீர்த்துளிகளும்,துள்ளல் நடையும்,உட்காரும் மிடுக்கும்,அதன் பின் உதிர்க்கும் சிரிப்பும் இஞ்ச் பை இஞ்ச் ரசனைப்பொருளானது எனக்கு.

இது பாட்ஷா இல்ல.படையப்பா இல்ல.அருணாச்சலம் இல்ல.அண்ணாமலை இல்லை.

இது கபாலி.அது கபாலியாவே பார்த்தா ஒரு ஏமாற்றமும் கிடையாது. 🙂 /\ #மகிழ்ச்சி
மீண்டும் பார்க்கணும் சூப்பர் ஸ்டாரின் ஒவ்வொரு அசைவுக்காகவும்.

பி.கு: சாதாரண டிக்கட்ல தான் பாத்தேன் ஏஜிஎஸ் ஓஎம்ஆர் தியேட்டர்ல நண்பர்களோட..நிறைவா..! 🙂

Advertisements

பெருமை டா

image

மார்க்கெடிங்–மார்க்கெடிங் தவறு

இது ரெண்டுத்துக்கும் நடுல கபாலி சிக்கிக்கும்னு நீங்க நினைக்றீங்களா?

ஆப்வியஸா 600 ரூவா டிக்கட் அபத்தம்தான்.இந்த படத்துக்குனு இல்ல.எந்த படத்துக்கும்.

ஆனா யோசிச்சு பாருங்க.தாணுவோட மார்க்கெடிங் டீம் என்ன செஞ்சாங்க?

1.ஒரு டீஸர் விட்டாங்க
2.ஒரு சிம்பிளான(எதிர்பார்த்ததை விட) ஆடியோ லாஞ்ச் பண்ணாங்க
3.வழக்கம்போல டிவி,செய்தித்தாள் விளம்பரம்
4.இது போக சமூக வளைதளங்கள்,விளம்பர பதாகைகள்(இப்ப வர்ற எல்லா பெரிய படத்துக்கும் பண்ற மாதிரி)
5.ஏர் ஏஷியா,ஏர்டெல்(அவங்க செஞ்ச ஒரே ‘அதுக்கும் மேல’ விஷயம் இதுதான்)

இந்த அஞ்சாவது விஷயம் ரொம்ப பெருமையாவும் பூரிப்பாவும்தான் இருந்துச்சு எனக்கு.
ஏன்னா யார் யாரோ பிசினஸ்ல கொடிகட்டு ஜெயிச்சிட்டு போறான்.கலைப்புலி தாணுங்கிற சாதாரண கொச்சைத்தமிழ் பேசக்கூடிய தமிழ் பிரொடியூசர் ஜெயிக்றதுல என்ன தப்பு இருக்கு? அந்த அளவு உழைப்பு இருக்கு தானே?

ஆனா இந்த ஓவர் ஹைப்ங்கிற வார்த்தை எப்ப தெரியுமா வருது?

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் கமல்,ரஜினி,அஜித்,விஜய் இவங்க நாலு பேரையும் வச்சு ஒரு நல்ல குழு இணையும் போது.
இது தவிர்க்க முடியாத மாயை.இதை மார்க்கெடிங் error குள்ள கொண்டு வந்தா இந்த நாலு பேரை வச்சு படமே எடுக்க முடியாது.பிரம்மாவே வந்து படம் எடுத்தாலும் critics கிழி கிழினு கிழிப்பானுங்க. 🙂

என் கானலாம்பாடி விக்னேஷ் நண்பா

image

நேத்தைக்கு மொத நாள் வரைக்கும் உயிரோட இருந்தான்.

நான் ஊர்ல இருந்தா,வாராவாரம் என் நண்பர்களோட போய் வழிபடுற சாய்பாபா கோவிலுக்குத்தான் போனான்.

அவன் தண்ணி அடிக்ல ஒண்ணும் பண்ல.ஓவர் ஸ்பீடு ஓட்டல.
யாரோ ஒரு குடிகார நாயோட அலட்சியத்தால அவன் சிதைஞ்சு செத்திருக்கான்.

இந்த சாவுக்கு நான் போகலை.என் பல நண்பர்கள் என்னை தப்பா நினைப்பாங்க.நான் ஊர் எனக்கு கொடுக்ற பட்டத்தை பத்தி கவல படற ஆளில்ல.என் மனசாட்சி அவனோட சடலத்தை,அவனுக்கு நேர்ந்த கொடூரத்தை ஏத்துக்க விரும்பல.

என்னை பொறுத்தவரைக்கும் அவன கடைசியா நான் பாத்தப்ப எப்டி இருந்தானோ அப்டே நினைவுல வாழட்டும்.
திருவண்ணாமலைக்கு போறது ஒரு விஷயம் இல்ல.அவங்க அப்பா அம்மாவை பாத்து சொல்றதுக்கு என்கிட்ட வார்த்தையும் இல்ல.
குடிக்ற யாரா இருந்தாலும் எந்த வண்டியை எடுத்து ஓட்டுனாலும் உங்களால சில உயிர்கள் சரியும்..சில வாழ்க்கைங்க அழிஞ்சிடும் னு மட்டும் நினைச்சு பாருங்க..

பெயர் தெரியாத இலக்கியம்

இது கட்செவி அஞ்சலில் எனக்கு வந்தது.

இதை எழுதியவர் யாரென்று இதை ஃபார்வர்டு செய்த யாருக்குமே தெரியவில்லை.

இருந்தாலும் இதை எழுதியவர் பெரிய ரசனையாளராகவே இருக்கவேண்டும் என்ற ஒப்புதல் மட்டும் அனைவரிடத்திலும் இருந்தது.

அற்புதமான உணர்வோட்டங்கள்.குமட்டலில் ஆரம்பித்து மணத்தலில் முடிகிறது.

கான்செப்ட்: ஜனநாயக வலைப்பூவியல் பதிவு-democratic blogging post

★★காப்பிரைட் கட்செவி அஞ்சலுக்கு மட்டும்..வேறாரும் கோராதீங்க ★★

எழுதியவர் யார் என்று தெரியவில்லை
ஆனா மனச டச் பண்ணிட்டு
படிச்சி பாருங்க. (post from FB)

வாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த…

காட்டுமரம் நான்..

எல்லா மரங்களும் எதாவது…

ஒரு கனி கொடுக்க எதுக்கும் உதவாத…

முள்மரம் நான்…

தாயும் நல்லவள்…

தகப்பனும் நல்லவன்…

தறிகெட்டு போனதென்னவோ நான்…

படிப்பு வரவில்லை…

படித்தாலும் ஏறவில்லை…

இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன்…

பிஞ்சிலே பழுத்ததென்று…

பெற்றவரிடம் துப்பிப்போக …

எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான்…

பத்துவயதில் திருட்டு…

பனிரெண்டில் பீடி…

பதிமூன்றில் சாராயம்…

பதினெட்டில் அடிதடி…

இருபதுக்குள் எத்தனையோ…

எட்டாவது பெயிலுக்கு…

ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும்…

மண்லாரி ஓட்டினால் லோடுக்கு…

நூறு தருவார்கள்…

வாங்கும் பணத்துக்கு…

குடியும் கூத்தியாரும் என…

எவன் சொல்லியும் திருந்தாமல்…

எச்சிப்பிழைப்பு பிழைக்க …

கைமீறிப்போனதென்று…

கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனர்..!

வருபவள் ஓசிதானே…

மூக்குமுட்ட தின்னவும்…

முந்தானை விரிக்கவும்…

மூன்று பவுனுடன் …

விவரம் தெரியாத ஒருத்தி…

விளக்கேற்ற வீடுவந்தாள்…

வயிற்றில் பசித்தாலும்…

வக்கனையாய் பறிமாறினாள்…

தின்னு கொழுத்தேனே தவிர…

மருந்துக்கும் திருந்தவில்லை…

மூன்று பவுன்போட…

முட்டாப்பயலா நான்…

இன்னும் ஐந்து வேண்டுமென்று …

இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க …

கறவைமாட்டை சந்தைக்கு அனுப்பி …

கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான்…

சொந்தம் விட்டுப்போகாமல்…

மாமனாரான மாமன்…!

பார்த்து வாரமானதால்…

பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,

தள்ளிப்போனதென்று தள்ளிவிட்டாள்…

சிறுக்கிமவ இருக்கும் சனி…

போதாதென்று இன்னொரு சனியா..?

மசக்கை என்று சொல்லி…

மணிக்கொருமுறை வாந்தி..,

வயிற்றை காரணம்காட்டி…

வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,

சாராயத்தின் வீரியத்தில்…

சண்டையிட்டு வெளியே அனுப்ப..,

தெருவில் பார்த்தவரெல்லாம் சாபம் விட்டு…

போவார்கள்_கடைசி மூன்று மாதம்…

அப்பன்வீட்டுக்கு அவள் போக..,

தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக…

தகவல் சொல்லியனுப்ப..,

ரெண்டு நாள் கழித்து…

கடமைக்கு எட்டிப்பார்த்தேன்…

கருகருவென என் நிறத்திலே…

பொட்டபுள்ள..!

எவன் கேட்டான் இந்த மூதேவியை…

கள்ளிப்பால் கொடுப்பாயோ …

கழுத்தை திருப்புவாயோ…

ஒத்தையாக வருவதானால் …

ஒருவாரத்தில் வந்துவிடு என்றேன்…,

ஆறுமாதமாகியும் அவள்வரவில்லை…

அரசாங்க மானியம் ஐயாயிரம்…

கிடைக்குமென்று கையெழுத்துக்காக…

பார்க்கப்போனேன் …

கூலிவேலைக்கு போனவளை கூட்டிவரவேண்டி…

பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச்செல்ல…

ஆடி நின்ற ஊஞ்சலில்…

அழுகுரல் கேட்டது..,

சகிக்க முடியாமல் எழுந்து …

தூக்கினேன்_பெண்குழந்தை..!

அடையாளம் தெரியவில்லை …

ஆனால் அதே கருப்பு…

கள்ளிப்பாலில் தப்பித்துவிட்டு…

கைகளில் சிக்கிக்கொண்டது..,

வந்தகோபத்திற்கு…

வீசியெறியவே தோன்றியது…

தூக்கிய நொடிமுதல்…

சிரித்துக்கொண்டே இருந்தது,

என்னைப்போலவே…

கண்களில் மச்சம்,

என்னைப்போலவே சப்பைமூக்கு,

என்னைப்போலவே ஆணாக..,

பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க ….

வேண்டியதில்லை…,

பல்லில்லா வாயில்…

பெருவிரலை தின்கிறது,

கண்களை மட்டும்..,

ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,

ஒரு கணம் விரல் எடுத்தால்…

உதைத்துக்கொண்டு அழுகிறது,

எட்டி விரல்பிடித்து…

தொண்டைவரை வைக்கிறது,

தூரத்தில் வருவது கண்டு…

தூரமாய் வைத்துவிட்டேன்…

கையெழுத்து வாங்கிக்கொண்டு…

கடைசி பஸ்ஸுக்கு திரும்பிவிட்டேன்,

முன்சீட்டில் இருந்த குழந்தை…

மூக்கை எட்டிப்பிடிக்க நெருங்கியும்…

விலகியும் நெடுநேரம்…

விளையாடிக்கொண்டு இருந்தேன்!

ஏனோ அன்றிரவு …

தூக்கம் நெருங்கவில்லை,

கனவுகூட கருப்பாய் இருந்தது,

வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்…

போட்ட கையெழுத்து பொருந்தவில்லை…

என_இன்னொரு கையெழுத்துக்கு…

மீண்டும் சென்றேன்,

அதே கருப்பு, அதே சிரிப்பு,

கண்ணில் மச்சம், சப்பை மூக்கு…

பல்லில்லா வாயில் பெருவிரல் தீனி…

ஒன்று மட்டும் புதிதாய் …

எனக்கும் கூட சிரிக்க வருகிறது …

கடைசி பஸ், ஆனால் பேருந்தில்…

எந்த குழந்தையும் இல்லை,

வீடு நோக்கி நடந்தேன்,

பாதிவழியில் கறிவேப்பிலைகாரி…

கைப்பிடித்தாள் உதறிவிட்டு நடந்தேன்…

தூக்கம் இல்லை நெடுநேரம்…

பெருவிரல் ஈரம் பட்டதால் …

மென்மையாக இருந்தது …

முகர்ந்து பார்த்தேன் ….

விடிந்தும் விடியாததுமாய்…

காய்ச்சல் என்று சொல்லி…

ஊருக்கு வரச்சொன்னேன்,

பல்கூட விளக்காமல் …

பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுவிட்டேன்,

பஸ் வந்ததும் லக்கேஜை காரணம் காட்டி…

குழந்தையை கொடு என்றேன்,

பல்லில்லா வாயில் பெருவிரல்! இந்தமுறை பெருவிரலை தாண்டி…

ஈரம் எங்கோ சென்றுகொண்டு இருந்தது…

தினமும் என் மீது படுத்துக்கொண்டு…

பொக்கை வாயில் கடிப்பாள்,

அழுக்கிலிருந்து அவளை காப்பாற்ற…

நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,

பான்பராக் வாசனைக்கு…

மூக்கை சொரிவாள் விட்டுவிட்டேன் …

சிகரெட் ஒரு முறை..,

சுட்டுவிட்டது விட்டுவிட்டேன்…

சாராய வாசனைக்கு…

வாந்தியெடுத்தாள் விட்டுவிட்டேன்,

ஒரு வயதானது உறவுகளெல்லாம்…

கூடி நின்று அத்தை சொல்லு..,

மாமா சொல்லு பாட்டி சொல்லு …

அம்மா சொல்லு என்று…

சொல்லிக்கொண்டு இருந்தார்கள்…

எனக்கும் ஆசையாக இருந்தது,

அப்பா சொல்லு என்று சொல்ல,

முடியவில்லை ஏதோ என்னை தடுத்தது,

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை…

அவள் சொன்ன முதல் வார்த்தையே…

அப்பாதான்!

அவளுக்காக எல்லாவற்றையும்…

விட்ட நான் அப்பா என்ற

அந்த வார்த்தைக்காக…

உயிரைகூட விடலாம் என்று தோன்றியது,

அவள் வாயில் இருந்து வந்த..,

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,

இந்த சாக்கடையை…

அன்பாலேயே கழுவினாள்…

heart emoticon

அம்மா சொல்லி திருந்தவில்லை,

அப்பா சொல்லி திருந்தவில்லை ,

ஆசான் சொல்லி திருந்தவில்லை ,

நண்பர்கள் சொல்லி திருந்தவில்லை ,

நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுதாய் மூன்று வார்த்தை பேசவராத …

இந்த முகத்தை பார்த்து திருந்திவிட்டேன்..

வளர்ந்தாள்..,

நானும் மனிதனாக வளர்ந்தேன்…

படித்தாள்,

என்னையும் படிப்பித்தாள்…

திருமணம் செய்துவைத்தேன் ,

இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள்,

இரண்டு குழந்தைகளுமே…

பெரியவர்களாய் வளர்ந்துவிட்டார்கள்,

நானும் கூட தாத்தாவாகிவிட்டேன் ,

என்னை மனிதனாக்க…

எனக்கே மகளாய் பிறந்த…

அந்த தாய்க்காக காத்திருக்கிறது …

‪#‎இந்த_கடைசி_மூச்சு‬..!

ஊரே ஒன்று கூடி..,

உயிர் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத்தெரியாதா என்ன,

யாருடைய பார்வைக்கப்புறம்…

பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்து காத்திருக்கிறேன்…

………………….வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,

என் பெருவிரலை யாரோ தொடுகிறார்கள் ,

அது அவள்தான், மெல்ல சாய்ந்து …

என் முகத்தை பார்க்கிறாள் …

என்னைப்போலவே…

கண்களில் மச்சம்,

சப்பைமூக்கு, கருப்பு நிறம்,

நரைத்த தலைமுடி தளர்ந்த கண்கள்,

என் கைகளை முகத்தில் புதைத்துக்கொண்டு,

அப்பா அப்பா என்று அழுகிறாள்,

அவள் எச்சில் என் பெருவிரலிட,

உடல் முழுவதும் ஈரம் பரவ…

ஒவ்வொரு புலனும் துடித்து…

‪#‎அடங்குகிறது‬………………..
…………………..

தாயிடம் தப்பிவந்த மண்ணும்…

கல்லும் கூட மகளின் ..,

கைப்பட்டால் சிலையாகும்!

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

இவர் எழுத்தில் என்ன ஒரு தீர்க்கம்.வாழ்க வளமுடன்.

வர்ட்டா??!!

சவுரவ் “தாதாகிரி” கங்குலி

image

கங்குலி

சச்சின்,திராவிட்,சேவாக்,லக்ஷ்மண்,கங்குலி..இந்திய கிரிக்கெட்டின் பஞ்சபாண்டவர்கள்.

தாதா கொல்கத்தா இளவரசர் மட்டுமல்ல.பல இந்திய இதயங்களின் ராஜா.நேர்பட பேசு,ரௌத்ரம் பழகு,அச்சம் தவிர்,நையப் புடை,ஆண்மை தவறேல்,மனதில் உறுதி வேண்டும்,வீழ்வேனென்று நினைத்தாயோ போன்ற ஆத்திச்சூடி,பாரதி கவிகளுக்கு அரிதாரம் கொடுத்ததுபோல நிஜவாழ்க்கையில் நடந்தவர்.

கையை உயர்த்தி ஸ்டைலாக ஃபீல்டு செட் செய்வதாகட்டும்,சொன்ன பேச்சை எவனாச்சு கேக்கலைனா பார்வையாலயே மிரட்டுவதாகட்டும்,பேட்டிங் செய்யும் போது பொளந்து கட்டும் சிக்ஸர்களாகட்டும்,கிரீஸை விட்டு வெளியே வந்து,ஸ்டம்ப் லைனை விட்டு நகர்ந்து ரூம் விட்டு விளாசும் ஆஃப் ஸைடு பவுண்டரிகளாகட்டும் இன்னொரு கங்குலி நமக்கு திரும்ப கிடையாது.

எப்படி ரிட்டையர் ஆகவேண்டும் என்பதற்கு உதாரணம் சச்சின்.எப்படி ரிட்டையர் ஆனதுக்கு அப்றோம் அசிங்கப்படக்கூடாதுங்கிறதுக்கு உதாரணம் கங்குலி.ஆனா அதுக்குலாம் அடங்குற ஆளா நீ..?

இப்போ கூட கமெண்ட்ரில வெளுத்து வாங்கரீங்களே!
செலக்ஷன் கமிட்டில உங்க செல்வாக்கு அப்டே இருக்கு..ரவி சாஸ்திரி உடனான சொற்போர்களெல்லாம் சுவையோ சுவை.

மொத்தத்தில் அதிரடி.சரவெடி.இதுலாம் என்னன்னு தெரியாம விரல் சூப்பிட்டு இருந்த சின்னப்பசங்களுக்குலாம் இலக்கணம் கொடுத்தவர் சவுரவ் கங்குலி.

உண்மைலயே நீ உன் ஃபீல்டுல தாதா தான் யா!!

image

வர்ட்டா??!

பிரெக்ஸிட்

image

இதுவரை தகவல் திரட்டும் படலம் தொடர்ந்ததால் இதப்பத்தி வாயை தொறக்கலை.

1.பிரிட்டன் ஆரம்பத்திலிருந்தே ஒருங்கிணைந்த ஐரோப்பியா என்ற கான்செப்ட்க்கு எதிராகவே இருந்துள்ளது.

2.யூரோவும் பவுண்டும் தனித்தனி நாணயங்களாக இருப்பதற்கு காரணமும் இது

3.மார்கரெட் தாட்சர் காலத்தில் பிரசல்ஸ் தலைமைக்கும் லண்டன் தலைமைக்கும் அடிக்கடி உரசல் நடந்து வந்தது.

4.பிரட்டனுக்கு பொறுப்பை தட்டிக் கழிக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்திருக்கிறது.
காலனிகள் உருவாக்குவார்கள் ஆனால் அகதிகளுக்கு சோறு போட மாட்டார்கள்.சுரண்டல் பேர்வழிகள்.அதே போல ஐரோப்பிய யூனியனிலும் பொதுச் சந்தை வேணுமாம்..ஆனால் அகதிகள் நடமாட்டம் கூடாதாம்..
பருப்பு வேகுமா?

5.இரு முறை சுயநல நோக்கங்களுக்காக பிரட்டன் ஐரோப்பிய யூனியனில் வேண்டா வெறுப்பாக சேர விரும்பியது.இரு முறையும் பிரெஞ்சு அதிபரின் வீட்டோவால் அது நிராகரிக்கப்பட்டது.அந்த காண்டும் உண்டு.

7.யூரோ பேரோமீட்டர் என்றொரு சர்வே மக்கள் மனசை படிக்க EUவால் ஐரோப்பா முழுக்க நடத்தப்படும் ஒன்று.இதில் நான் பிரிட்டிஷா இருக்க பெருமைப்படுறேன் ஐரோப்பியனா அல்ல என்று சொல்லிய இரு தேசங்களும் பிரிட்டனும்,இன்னொன்று கிரீஸூம்..மற்ற நாடுகளும் நாட்டுமக்களும் ஐரோப்பிய தலைமையை பொதுநலனுக்காக ஏற்றுக்கொண்டனர்.

பிரிட்டிஷாரோக்கோ நாங்கள் வெள்ளையனுக்கெல்லாம் வெள்ளையன்டா என்ற தற்காலத்துக்கு ஒப்புதல் இல்லாத திமிர் பிடித்துக் கொண்டது..

பிரெக்ஸிட்டை பற்றி படிக்க படிக்க தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது.
சென்ற வருடம் சீன யுவான் மறு(குறை)மதிப்பீடு…

இந்த வருடம் பிரெக்ஸிட்.உலக பொருளாதாரத்தை ஆட்டம் காட்ட ஒவ்வொரு நாடும் ஒரு வழி வைத்திருக்கின்றன.

பார்ப்போம் இதனால் நமக்கென்ன விளைவுகள் என்று.

வர்ட்டா??!

யான் கவிஞனல்ல.

மன்னிக்கவும்..

நான் தமிழ்ல எழுதறதால நிறைய பேரு என்னை செல்லமா கவிஞரே,புலவரே ங்கிறாங்க.சத்தியமா சொல்றேங்க..அது செல்லத்துக்காகவே இருந்தாலும் என்னை அப்டி கூப்டாதீங்க..ஏன்னா அடிப்படை தமிழ் இலக்கணம் தெரியாதவன் நான்.
தமிழ் வெண்பா/கவி நடை எப்படி இருக்கணும்னு எனக்கு சுட்டு போட்டாக்கூட வருமான்னு தெரில..பாரதியார்,பாரதிதாசன்,கவிக்கோ,கவியரசு,கவிப்பேரரசு இவங்களாம் வாழ்ந்த வாழ்ந்துட்டிருக்கிற மண்ணுல போய் இந்த கிறுக்கனை எழுத்தாளன்னு கூட அங்கீகரிச்சிடாதீங்க..அதுலாம் தவம்..

மத்த எல்லாரும் இங்கிலீஷ் பேசுற கூட்டத்துல நான் தமிழ் பேசுனா/எழுதுனா பெரிய ஆள் ஆகிட மாட்டேன்.நீங்களும் சாதாரணமா அதை பண்ணியிருக்க வேண்டியது.கூகுளுக்கும் ஆண்ட்ராயிடுக்கும் தெரியுது.நமக்கு இன்னும் புரியலைன்னா பிரச்னை அங்க இல்ல.

சரி வேற எப்டி என்னை டிஃபைன் பண்றது? என்னையலாம் டிஃபைனே பண்ணாதீங்க..அப்டே உட்டுடுங்க..அதான் தமிழுக்கு நீங்க குடுக்ற மரியாதை..நான் தமிழ்ல அதுவும் கொச்சை கலப்பு தமிழ்ல எழுதிட்டு இருக்ற ஏதோ ஒரு கிறுக்கன்..அவ்ளோ தான்..

சரி அப்றோம் ஏன் தமிழ்ல எழுதறேன்?

எப்டி ரோமன்(roman) ஸ்கிரிப்ட்(எழுத்து வடிவம்) ஆங்கிலம் மூலமா அமரத்துவம் பெற்றுவிட்டதோ அதே போல தமிழ் பெற-அது கொச்சை பேச்சு தமிழ் ஆகிடினும் னு பல தமிழ் அணில்கள் முகநூல்,ட்விட்டர் போன்ற நவீன அரங்குகள்ல இயங்கி வருகிறார்கள்.அந்த ஆயிரக்கணக்கான துறுதுறு அணில்கள்ல நானும் ஒருத்தனாவே இருந்துக்குறேன்..

/\

சமுத்திரக்கனியின் அப்பா

image

அப்பா திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கலை.இது என் அம்மா தன்னுடைய ஆசிரியர் கூட்டமைப்பு ஒன்றில் ஒரு புதுக்கோட்டை ஆசிரியர் எழுதிய பதிவினை கட்செவி அஞ்சலில் அனுப்பியிருந்தார்.

அப்பா – கல்வி வணிகத்திற்கு எதிரான ஓர் திரைப்படம்

கல்வி வணிகத்திற்கு எதிரான ஓர் திரைப்படம்:
தைரியலெட்சுமி 1040 மதிப்பெண்களை பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். 4 ஆண்டுகளுக்கு முன்னர். தேர்வு முடிவுகளால் உலகளவில் அதிகமான தற்கொலைகள் நடைபெறுவது நம் நாட்டில் தான். அதிலும் முதலிடம் தமிழ்நாடு தான்.
இதற்கான காரணங்களை தெளிவான கண்ணோட்டத்தில் அலசி நன்கு படமாக்கப்பட்ட அப்பா திரைப்படம் பல உண்மைகளையும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளையும் சமரசமின்றி தோலுரித்துக் காட்டுகின்றது.
உறைவிடப் பள்ளிகளின் கொத்தடிமை முறைகளையும், கல்வி அறங்காவலர்களின் அயோக்கியத்தனத்தினையும் வெளிச்சமிட்டு காட்டும் பிற்பகுதி மிகுந்த கவனமான பகுதியாக அமைந்துள்ளது. தன் குழந்தை இறந்த செய்தியை உடனடியாக பெற்றோரிடம் தெரியப்படுத்தாமல் அவர்களை மருத்துவமனை தோறும் அலைய வைப்பது. விடுதி கண்காணிப்பாளராக அடியாட்களை வைத்திருப்பது. ஆடைகளை அவிழ்த்து மன நெருக்கடி தாக்குதல் நடத்திடும் பள்ளி நிர்வாகம் என அழுத்தமான பதிவு!
இப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படாது என்பதை அப்பள்ளிகளின் சிறப்பாக குறிப்பிடும் எதார்த்த உண்மை நம் சமூகத்தின் பல பெற்றோர்களின் குரலாகவே பார்க்க இயலுகின்றது.
தம் பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே பள்ளிகளில் இருந்து சில மாணவர்கள் துரத்தப்படும் நிகழ்கால போக்கினை பதிவு செய்தது பாராட்டுக்குரியது.என சொந்தமாக மாணவன் செய்து வந்த மாதிரிக்கு very poor போடும் ஆசிரியை, கடையில் வாங்கி வரும் மாதிரிகளுக்கு good போடுவது..என நம்மிடம் உள்ள போலி மதிப்பீட்டு முறைகளை தோலுரிக்கின்றது.
ஆசிரியர்களை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக பதிவுத்தாள் வழங்கும் தனியார் பள்ளி, 499 மதிப்பெண் எடுத்த மாணவனின் மனநிலையினை சிதைப்பது, பெற்றோர்களுக்கான கூட்டம் என்னும் பெயரில் பெற்றோர்களை அவமதிப்பது போன்ற கல்வி வணிகத்தின் கோரத்தினை படம் பிடித்திருப்பதோடு இன்னும் சில அவசியமான செய்திகளும் கூறப்படுகின்றது,
1. மூன்றாம் பாலினத்தவர் மீதான நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துதல்.
2. நீச்சல் பயிற்சியாளராக பெண்ணைக் காட்டுவது.
3. சாதிய ரீதியான பாகுபாடுகளை களைவது,
4. எளியவர்கள் செய்யாத தவறிற்காக தண்டனை பெறுவது,
5. எதிர்பாலின ஈர்ப்பினை நேர்மறையாக கையாள்வது,
6. தனித்திறன்களை வளர்ப்பதில் உள்ள முக்கியத்துவம்..
7. மத வேறுபாடுகளை கலைந்த நட்பு
8. புறத்தோற்ற வேறுபாடுகள் – அவர்களை பாகுபடுத்துதல்.
9. பதினொராம் வகுப்புப் பிரிவு தேர்வு செய்யும் முறை,
10. சமூகத்தின் மீது ஏற்படும் நன்னம்பிக்கை
இது போன்று இன்னும் அதிகமான அளவில் நுணங்கி பார்க்கலாம்.

ஒரு திரைப்படமாக இளையராஜாவின் இசையும்,ஒளிப்பதிவுகளும் அந்த அளவு கவராவிட்டலும் வசனங்களின் வழியே இரத்தமும் சதையுமாக காட்சிகளை நகர்த்தி உள்ளது மிகப்பெரிய பாராட்டை தர வேண்டியத்தாகும்.

தந்தையிடம் சொல்ல முடியும் என்ற செயல்களை மட்டுமே செய். சொல்லமுடியாது என கருதும் செயல்களை செய்யாதே!
சாமியா கொண்டாட வேண்டிய விவசாயிகளை எந்த நிலையில் வைத்திருக்கிறோம்..
முதல் மதிப்பெண் எடுத்த மாணவியின் இட்டலி கடை நடத்தும் தந்தையின் எதார்த்தப் பேச்சு என அனைத்தும் ஆவணப்படமான ஓர் திரைப்படம்…

இதை சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி அரசுப்பள்ளி ஆசிரியர்களும் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்திட வேண்டியது அவசியமானதாகும்.

நன்றி. கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி, சமத்துவக் கல்வி, புதுகை செல்வா.”

இதுவே அந்த பதிவு.வர்ட்டா??!!

நான் தனிமனிதன் அல்ல

நமக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தங்களுக்கு நம்மள விட இன்னொருத்தரை ரொம்ப பிடிக்கும்.அந்த இன்னொருத்தர் மேலயும் நமக்கு வெறுப்புலாம் இல்ல.ஏதாச்சு பண்ணா எல்லா பிடிமானங்களும் போயிடும்.அதனால எதுவுமே பண்ணாம நம்மள மட்டுமே ஹர்ட் பண்ணிக்றது பெட்டர்னு அமைதியா லைஃப்ல டிராவல் பண்ணிட்டே இருக்கோம்.

இந்த மீளாச்சுழல்ல நான் மட்டும் தான் இருப்பேனா இல்ல இது பொதுவான ஒண்ணா?

இந்த வலிகளும் மரத்து போகட்டும் சகோதரா..நமக்கு இலக்கியம்தான் சரக்கு..எழுத்துதான் போதை..நம்மள old fashioned கூட சொல்லட்டும்.பரவாயில்லை..இதுவும் இல்லனா தொலைஞ்சிடுவேன் பாஸ்..

#என்னாவாழ்க்கடா

திருவாளர்களும் செல்வர்களும் பெருஞ்செல்விகளும்

எஸ்ஆர்பி டூல்ஸ் துயரம்

முனுசாமி என்ற தச்சர்(carpenter)நேற்று காலை தரமணி சிக்னலை கடக்க முயன்றுள்ளார்.
இரவு ஒரு பார்ட்டியில் குடித்துவிட்டு,இரண்டு இன்ஜினியர்கள் மற்றும் ஒரு ஆராய்ச்சி மாணவி ஆடி காரை ரேஷ் டிரைவிங்(கட்டுபாடற்ற 100 கி.மீ வேகம்) செய்து இந்த முனுசாமியை மோதி, 15 அடி உயரம் பறக்கவிட்டு ரத்த வெள்ளத்தில் விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.

நான் சொல்றதெல்லாம்

1.நீங்க ஆடி கார் வச்சிட்டிருக்கிறது விமர்சிக்கற என் பொருட்டல்ல
2.நீங்க மூவரும் பெண்ணா இருக்றது என் விமர்சனத்துக்கு வசதியாகப்பட்டதல்ல..
3.நீங்க குடிச்சி இருக்றதை விமர்சனம் பண்ண விரும்பல..நான் ஆணாதிக்கவாதி ஆகிடுவேன்..(குடிச்டு அங்கயே மட்டை ஆயிடுங்க ங்கிறது மட்டும் தான் என் வேண்டுகோள்)

பி.கு. 1.இந்த முனுசாமியை நம்பிவந்த ஒரு மனைவி,ஒரு மகன்,ஒரு மகள் கேட்பாரற்று கிடப்பார்கள்

2.இந்த கார் மோதியது தரமணி சிக்னலில்.
இந்த கார் பிடிபட்டது எஸ்ஆர்பி டூல்ஸ் சிக்னலில்(நான் படிச்ச நியூஸ் கரக்டா இருக்கும் பட்சத்தில்)
இதுக்கு இரண்டுக்கும் நடுவில் தான் நான் இருக்கும் பல்கலைக்கழக விடுதி இருக்கு.

இந்த பதிவு அந்த முனுசாமி நானோ என் நண்பர்களாகவோ கூட இருக்கலாம் என்ற பச்சை சுயநலத்தில் போடப்பட்ட பதிவு.